in

சுரக்ஷா” திறன் அபிவிருத்தி மற்றும் பகல்நேர பராமரிப்பு நிலையங்கள்

“வளமான நாடு – அழகான வாழ்க்கை” கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு, மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடக்கிய சமூகத்தை உருவாக்கும் நோக்கில், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் இயங்கும் சமூக சேவைகள் திணைக்களத்தினால் மாற்றுத்திறனாளி சிறுவர்களுக்காக “சுரக்ஷா” திறன் அபிவிருத்தி மற்றும் பகல்நேர பராமரிப்பு நிலையங்கள் 25-ஐ நாட்டின் அனைத்து நிர்வாக மாவட்டங்களையும் உள்ளடக்கும் வகையில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இந்த வேலைத்திட்டத்திற்காக 2026ஆம் ஆண்டுக்கான வரவு–செலவுத் திட்டத்தின் மூலம் 250 மில்லியன் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அத்துடன், சமூக சேவைகள் திணைக்களத்தின் செலவுத் தலைப்பின் கீழ் ஒதுக்கப்பட்டுள்ள 447 மில்லியன் ரூபாய் நிதியையும் சேர்த்து, மொத்தமாக 697 மில்லியன் ரூபாய் ஒதுக்கீட்டின் அடிப்படையில், இந்த ஆண்டு “சுரக்ஷா” நிலையங்கள் 10-ஐ நிர்மாணிக்க எதிர்பார்க்கப்படுகிறது.

அதன்படி, இரண்டாவது “சுரக்ஷா” நிலையம் கேகாலை மாவட்டத்தின் தோலங்கமுவ பிரதேச செயலகப் பிரிவில் நேற்று (29) கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில மற்றும் சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக்க படபெந்தி ஆகியோரின் தலைமையில் மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கப்பட்டது.

முதலாவது “சுரக்ஷா” நிலையம் அண்மையில் திருகோணமலை மாவட்டத்தின் கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் திறந்து வைக்கப்பட்டது.

125 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ள கேகாலை, தோலங்கமுவ “சுரக்ஷா” நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் இதன்போது ஆரம்பிக்கப்பட்டன.

இலங்கையில் முதன்முறையாக அரசாங்கத்தினால் இலவசமாக நடத்தப்படும், மாற்றுத்திறனாளி சிறுவர்களின் பராமரிப்பு மற்றும் திறன் அபிவிருத்தியை நோக்கமாகக் கொண்ட “சுரக்ஷா” நிலையங்கள், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் எண்ணக்கருவின் அடிப்படையில் நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

மாற்றுத்திறனாளி சிறுவர்களின் திறன்களை மேம்படுத்துவதற்காக நவீன தொழில்நுட்ப உபகரணங்கள் மற்றும் வசதிகளுடன் இந்த நிலையங்கள் நிர்மாணிக்கப்படுவதுடன், சிறுவர்களின் உடல் மற்றும் உள ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்குத் தேவையான வசதிகளும் இங்கு வழங்கப்படுகின்றன.

இந்த நிலையங்கள் மூலம் மாற்றுத்திறனாளி சிறுவர்களின் பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு பெரும் நிவாரணம் கிடைக்கும். தமது பிள்ளைகளின் பராமரிப்புப் பொறுப்பிலிருந்து பகல் நேரத்தில் தற்காலிகமாக விடுபடுவதன் மூலம், அவர்கள் தமது அன்றாட மற்றும் தொழில் நடவடிக்கைகளை தடையின்றி முன்னெடுக்கவும் வாய்ப்பு ஏற்படும்.

இதன்போது கருத்துத் தெரிவித்த அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில, மாற்றுத்திறனாளிகள் தொடர்பான சரியானதும் புதுப்பிக்கப்பட்டதுமான தரவுகள் இல்லாமை நீண்டகாலமாக பாரிய பிரச்சினையாக இருந்து வந்ததாகக் குறிப்பிட்டார்.

நாடு முழுவதும் உள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகள் தொடர்பான துல்லியமான தகவல்களைச் சேகரிப்பதற்காக, அடுத்த சில மாதங்களில் டிஜிட்டல் தரவு கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்படவுள்ளதாகவும், இதன் மூலம் எதிர்காலத்தில் மாற்றுத்திறனாளி சமூகத்துடன் தொடர்புடைய நடவடிக்கைகளுக்காக துல்லியமானதும் பயனுள்ளதுமான திட்டங்களைத் தயாரிக்க முடியும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

சமூகத்தில் எந்தவொரு மாற்றுத்திறனாளிக்கும் “விசேட தேவைகள்” இல்லை என்றும், ஏனைய அனைத்து மனிதர்களைப் போலவே அவர்களுக்கும் சாதாரண மனிதத் தேவைகள் உள்ளன என்றும் குறிப்பிட்ட அமைச்சர், அனைவரையும் சம உரிமைகளைக் கொண்ட குடிமக்களாகக் கருதும், பரிவும் கருணையும் கொண்ட மனிதர்களைக் கொண்ட சமூகத்தை உருவாக்குவதே அரசாங்கத்தின் நோக்கம் என்றும் தெரிவித்தார்.

மாற்றுத்திறனாளி சிறுவர்களைப் பராமரிக்க வேண்டிய நிலை காரணமாக குடும்ப உறுப்பினர் ஒருவர் தொழிலுக்கோ அல்லது அன்றாட நடவடிக்கைகளுக்கோ செல்ல முடியாத நிலை ஏற்படுகின்ற சுமையை அரசாங்கம் பொறுப்பேற்று, பகல் நேரத்தில் அந்தச் சிறுவர்களுக்கு பாதுகாப்பை வழங்குவதுடன், அவர்களின் திறன்களை மேம்படுத்துவதும் இந்த வேலைத்திட்டத்தின் பிரதான நோக்கங்களில் ஒன்றாகும் என அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தெரிவித்தார்.

இதன் மூலம் மாற்றுத்திறனாளி சிறுவர்களின் குடும்பங்களுக்கு தமது பிள்ளைகளின் பராமரிப்பு தொடர்பில் நிவாரணம் வழங்குவதுடன், அந்தக் குடும்பங்களை பொருளாதார ரீதியாக வலுவூட்டுவதற்கும் வாய்ப்பு ஏற்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் கேகாலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோஜ் ராஜபக்ஷ மற்றும் காஞ்சன வெலிபிட்டிய, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் மேலதிக செயலாளர்களான ராதா நாணாயக்கார மற்றும் நாலிகா பியசேன, சமூக சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளர் தர்ஷனி கருணாரத்ன, கேகாலை மாவட்ட செயலாளர், தோலங்கமுவ பிரதேச செயலாளர், பிரதேச மக்கள் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள், பிரதேசவாசிகள், பெற்றோர் மற்றும் மாற்றுத்திறனாளி சிறுவர்கள் உள்ளிட்ட பெருமளவானோர் கலந்து கொண்டனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

எதிர்க்கட்சிக்குத் தேவையானவாறு செயல்படத் தயாரில்லை-லால் காந்த

வடக்கு மாகாணம் சமூகப் பாதுகாப்பு ஓய்வூதியத்தில் முன்னிலை