இலங்கையின் ,கிழக்கு மாகாணம்,காத்தான்குடியில் நடைபெற்ற, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 32 ஆவது பேராளர் மாநாட்டில் கட்சியின் தேசியத் தலைவர் ,நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆற்றிய உரை
எங்கள் பெரும் தலைவருடைய நினைவேந்தல் நிகழ்வுக்கு பேரன்பிற்குரிய தலைவரும் நாங்கள் எல்லோரும் எங்களுடையதுமான தாய் சபை என்று சொல்லக்கூடியதுமான இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உடைய பெருந்தலைவர் பேராசிரியர் முனீருல் மில்லத் கே.எம். காதர் மொகிதீன் அவர்கள் ஒரு வாழ்த்துச் செய்தியை தன்னுடைய கைப்பட எழுதி எனக்கு அனுப்பி வைத்திருக்கிறார். எனவே அதை இங்கு வாசிக்கவேண்டிய ஒரு கடப்பாடு எனக்கு இருக்கிறது.
“ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எனும் ஜனநாயக அரசியல் இயக்கத்தை உருவாக்கித் தந்த மனிதநேயர், இலங்கைச் சீமைக்கு இறைவனின் அருளாகத் தோன்றிய பேரறிஞர் மாண்பு மிகு எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களின் 26ஆவது நினைவேந்தல் நிகழ்வு காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் 2026 செப்டம்பர் 16இல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இன்றைய தலைவர் என் ஆருயிர்ச் சகோதரர் ரவூப் ஹக்கீம் அவர்களின் மேன்மைமிகு தலைமையில் நடைபெறுவதும், அதே சமயத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பேராளர்கள் மாநாடும் சிறப்பாக நடைபெறுகிறது என்று அறிந்து மிகுந்த மகிழ்வு ஏற்படுகிறது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற முன்னணி தலைவர், சர்வதேசங்களிலும் தனது அரசியல் ஞானத்தையும் மனிதநேயத்தையும் தொடர்ந்து பரப்பும் பயணத்தில் திளைத்திருப்பவர் , இந்த வரலாற்றுச் சிறப்பு நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கி, இதயங்களை இணைக்கும் இனிய நல்முயற்சியில் ஈடுபடுவது மிகுந்த வரவேற்புக்கும் வாழ்த்துக்கும் உரியதாகும்.
இந்த வரலாற்று நிகழ்வில் தமிழக அரசில் முதல்முறையாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் அமைச்சராக இருக்கும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு ஏ.எம். ஷாஜஹான் அவர்கள் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சிறப்பிக்கிறார் என்பதை அறிந்து பெரிதும் மகிழ்கிறோம்.
இந்திய வரலாற்றில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எனும் பெயரில் இந்திய முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினர் நலன்பேணும் அரசியல் இயக்கத்தை கண்ணியமிகு காயிதே மில்லத் முஹம்மது இஸ்மாயில் சாஹிப் அவர்கள் உருவாக்கித் தந்தார்கள். இது 1948 மார்ச் 10ஆம் நாளில் சென்னை ராஜாஜி மண்டபத்தில் நிகழ்ந்தது. இந்திய அரசியல் சட்டத்திற்கு உட்பட்டு இந்தியாவில் வாழும் சிறுபான்மையினரின் குரலாகத் திகழ்வதற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிறப்பெடுத்தது போலவே ஸ்ரீலங்காவில் வாழும் சிறுபான்மையினர் நலன்களைப் பேணிக் காத்திடவும் அதே சமயத்தில் ஸ்ரீலங்கா தேச அரசியல் சாசனத்தை முன்னிறுத்தியும் முஸ்லிம் சிறுபான்மையினரின் உரிமைகளையும் நலன்களையும் பாதுகாத்திடவும் எல்லா சமுதாய மக்களுடனும் சகோதரத்துவ வாஞ்சையுடன் ஒன்றித்து வாழ்வதற்கு வழிகாட்டவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உருவாக்கப்பட்ட வரலாறு எங்கள் எல்லோருக்கும் மகிழ்ச்சி தருகிறது.
சிந்தனைச் செல்வாக்குச் சிறந்த மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் வழிநின்று இன்றைய தேசியத் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்கள் ஸ்ரீலங்காவில் உள்ள அனைத்துத் தமிழ் பேசும் ஜனநாயக அரசியல் இயக்கங்களை ஒன்றிணைக்கும் அரிய அற்புத ஜனநாயகப் பணியில் ஈடுபட்டுள்ளார். அவரின் பயணம் வெற்றிப் பயணமாக இறையருள் துணைபுரிய வாழ்த்துகிறோம்” என்று இந்த வாழ்த்துச் செய்தியை அன்னார் எங்களுக்கு அனுப்பி வைத்திருக்கிறார். அவருடைய இந்த வாழ்த்துச் செய்தியை வாசித்தவனாக,
உண்மையிலேயே இந்திய யூனியன் முஸ்லிம் லீக் என்று சொல்லுகின்றபோது, அதனுடைய தலைவரை அடிக்கடி நான் அவர்களுடைய திருச்சி இல்லத்தில் சந்திப்பது வழக்கம். என்னுடைய வாழ்நாளிலே இப்படி எளிமையாக வாழுகிற ஒரு தலைவரை நான் பார்த்ததே கிடையாது.
அவர் படுக்கையில் பாவிக்கிற கட்டில்தான் அவருக்குக் கதிரையாகவும் இருக்கிறது. அதிலே அமர்ந்துகொண்டு பக்கத்திலே இருக்கிற ஒரு மேசையை இழுத்துப் போட்டுக்கொண்டு, அதிலே இருக்கிற ஒரு அலுமாரியிலே புத்தகங்களை அடுக்கி வைத்துக்கொண்டு, மிக எளிமையான வாழ்க்கையை வாழுகிற ஒரு தேசியத் தலைவரை நாங்கள் வேறெங்கும் பார்க்க முடியாது. அப்படியான ஒரு பண்பாளர், அதுவும் மிகுந்த மனிதநேயமிக்கவர், தமிழகம் போற்றுகின்ற தமிழ் அறிஞர், முழு இந்தியாவிற்கும் இந்தியவாழ் முஸ்லிம்களுக்கும் தலைமை தாங்குகிற அந்தப் பெரும் பேறு அவருக்குக் கிட்டியிருக்கிறது என்பதையிட்டு நாங்கள் எல்லோரும் தமிழ் பேசும் மக்கள் என்ற அடிப்படையிலே மிகப் பேருவகை அடைகிறோம்.
என்னைப் பொறுத்தமட்டில், இந்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பிறப்பெடுத்த 1948ஆம் ஆண்டு தான் எங்களுடைய அருமைத் தலைவர் மர்ஹூம் அஷ்ரப் அவர்களும் இந்த மண்ணிலே பிறந்தார்கள். அவருடைய பிறப்பு வருடம் 1948. அவர் எங்களை விட்டுப் பிரிந்தது 2000ஆம் ஆண்டு. அவர் இந்த மண்ணிலே வாழ்ந்தது வெறும் 52 வருடங்கள் மாத்திரம்தான். இந்த மண்டபத்திலே இருக்கின்ற பலர் 52 வருடங்களைத் தாண்டியிருப்போம். ஆனால், அந்த 52 வருடங்களுக்குள்ளாக அவருடைய அசகாய சாதனை என்பது இன்றும் எங்கள் எல்லோருக்கும் நினைத்துப் பார்க்கின்றபோது, அதை இறைமீட்டிப் பார்க்கின்றபோது எவ்வளவு பெரிய ஆச்சரியமாக இருக்கிறது என்பதைப் பலர் பேச நீங்கள் கேட்டிருப்பீர்கள்.
அவருடைய அரசியல் வாழ்வு வெறும் 12 வருடங்கள் மாத்திரம்தான். 6 வருடங்கள் எதிர்க்கட்சி, 6 வருடங்கள் ஆளுங்கட்சி. அதற்குள்ளாக அவர் புரிந்திருக்கிற இமாலய சாதனையை வேறு எந்த அரசியல் தலைவரும் முறியடிக்க முடியாது என்ற அளவிற்கு இந்த நாட்டின் அரசியலில் மிகப்பெரிய ஒரு பிரளயத்தை ஏற்படுத்திய எங்களுடைய பெருந் தலைவர், அவரோடு அன்னியோனியமாகப் பழகிய எங்களுக்கு அவருடைய நினைவுகளை இரைமீட்டிப் பார்க்கிறபோது என்றுமே மறக்க முடியாத அந்த சுகானுபவம் என்பது இந்த மண்டபத்தில் இருக்கின்ற பலருக்குப் பரிச்சயமான விஷயம் ;
புதிய தலைமுறைக்குத் தெரியாத விஷயம். அதை புதிய தலைமுறைக்கு எங்களுடைய தலைவருடைய வாழ்வையும் அவருடைய சாதனைகளையும் நாங்கள் திரும்பப் படித்துக் காட்டவேண்டும் என்பதற்காகத்தான் இந்த நிகழ்வை வருடந்தோறும் நாங்கள் செய்துகொண்டிருக்கிறோம். எங்களால் இயன்றவரை அவருடைய வாழ்வை இசை மூலமாகவும் இயல் மூலமாகவும் நாங்கள் மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கின்ற ஒரு நிகழ்வாக இந்த நிகழ்வை நாங்கள் வடிவமைத்துச் செய்துகொண்டு போகிறோம்.
அன்று தலைவர் அவர்கள் வாழ்ந்த அரசியல் சூழல் ஒரு சாமானியமான சூழல் அல்ல. இருபுறங்களிலும் மிகப்பெரிய வன்முறை வெடித்திருந்த காலம். தெற்கிலும் அரசியல் வன்முறை,மற்றது வடகிழக்கை முழுமையாக வியாபித்திருந்த வன்முறை. இந்த காத்தான்குடி மண்ணில் நூற்றுக்கணக்கானவர்கள் பள்ளிவாசல்களில் கொலையுண்டு மரணித்திருக்கிறார்கள் ; ஷஹீதாக்கப்பட்டிருக்கிறார்கள். அப்படியெல்லாம் மிக மோசமான வன்முறையைச் சந்தித்த பிரதேசம் இது.
இங்கு அருகில் இருக்கிற குருக்கள் மடத்தில் ஹஜ்ஜுக்குப் போன ஹாஜிகள் நிறையப் பேர் அப்படியே உயிர்ப்பலிகொள்ளப்பட்டார்கள். அது குறித்த விசாரணைகள் தற்பொழுது மீள ஆரம்பித்திருக்கிறது. இப்படியான ஒரு சூழலில், தலைவருடைய காலம் மிக ஆபத்தான ஒரு அரசியல் செய்கின்ற காலமாக இருந்தது.
எனக்கு இன்றுபோல் ஞாபகம் இருக்கிறது, சகோதரர் ஹிஸ்புல்லாஹ்வுடைய தேர்தல் வேட்பு மனுவை எடுத்துக்கொண்டு மட்டக்களப்பு கச்சேரிக்கு நாங்கள் கவச வாகனத்தில் போகவேண்டிய நிலைவரம். ராணுவக் கவச வாகனத்தில்தான் தேர்தல் மனு தாக்கல் செய்வதற்கு இந்த காத்தான்குடியிலிருந்து ஒன்றரை கிலோமீட்டர் அப்பால் இருக்கின்ற மட்டக்களப்பு செயலகத்திற்கு நாங்கள் போகவேண்டியிருந்த நிலைவரத்தை நான் நினைத்துப் பார்க்கிறேன். அப்படியான அச்சம் மிகுந்த ஒரு சூழலில் இந்த இயக்கத்தை எந்தப் பீதியும் எந்தப் பயமும் இல்லாமல் வளர்த்தெடுத்தது மட்டுமல்லாமல், அதற்காகத் துணிவுடன் வாழ்ந்த ஒரு தலைவர். அதற்காக இந்த இயக்கம் நிறைய உயிர்ப்பலிகளைக் கொடுத்திருக்கிறது. எங்களுடைய உறுப்பினர்கள் பலரை நாங்கள் தியாகம் செய்யவேண்டிய, பலிகொடுக்கவேண்டிய நிலைவரங்கள் எங்களுக்கு ஏற்பட்டிருருந்தன.
இதற்கு மத்தியில்தான் இந்த இயக்கம் இவ்வளவு காலம் துளிர்விட்டு இந்தளவு வளர்ந்திருக்கிறது. ஒரு அரசியல் இயக்கமாகப் பிரகடனப்படுத்தப்பட்டு 40 வருடங்களை நாங்கள் கடந்திருக்கிறோம்.
அந்த 40 வருட பூர்த்தியை அடைகிற இந்த நிலையில் எங்களுடைய தலைவருடைய நினைவேந்தல் நிகழ்வும் இன்று 26ஆவது நிகழ்வாக நடக்கிறது. எனவே அப்படியான ஒரு சந்தர்ப்பத்தில் இந்த நிகழ்வைச் சிறப்பிப்பதற்காக எங்களுக்குத் தமிழகத்திலிருந்து வந்து இப்படியான ஒரு நல்ல உரையைத் தந்த நண்பர் அமைச்சர் ஷாஜகானுக்கு மீண்டும் மீண்டும் நான் நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன்.
தமிழகத்தினுடைய அரசியல், இந்தியாவுடைய அரசியல் சாசனம் மதச்சார்பின்மை என்கிற கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட ஒரு அரசியல் சாசனமாக இருக்கிறது என்பதை நாங்கள் எல்லோரும் உணர்ந்திருக்கிறோம். அந்த நிலையில் தமிழகத்தின் அரசியலில் தந்தை பெரியாருடைய காலத்திலிருந்து பகுத்தறிவுக் கோட்பாடு என்ற ஒன்றை அடிப்படையாக வைத்து, சிறுபான்மை இனங்கள் மற்ற இனங்களோடு சமத்துவமாக வாழ்வதற்கான ஒரு சூழலைத் தமிழக அரசியல் வடிவமைத்துத் தந்தது. அதன் தடத்தில்தான் இன்றைய அரசும் பயணிப்பதாக அவர்களுடைய கொள்கைகளைப் பார்க்கின்றபோது எங்களுக்குத் தெரிகிறது.
கடந்த காலத்திலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அதே வகையான கொள்கைப் பிடிப்போடு வெவ்வேறு அரசுகளில் இருந்தாலும், முதல்முறையாக ஆட்சியில் அங்கமாக வந்து, பாரிய சேவைகளை இந்த முதலாவது வரவுசெலவுத் திட்டத்திலேயே சிறுபான்மையினருக்காக நீங்கள் 20 நலத்திட்டங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறீர்கள் என்று கேள்விப்படுகின்றபோது நாங்கள் பேரூவகை அடைகிறோம்.
இந்த விதமாக இன்று இந்த நாட்டில் இருக்கின்ற ஆட்சியாளர்களும் எங்களுடைய நலனுக்காக நல்ல செயல்திட்டங்களை அறிமுகப்படுத்துவார்களா என்பது குறித்து எங்களுக்கு இன்னும் போதிய தெளிவில்லை. அதைத் தெளிவுபடுத்துகிற கடமை ஆட்சியாளருக்கு இருக்கிறது.
நாங்கள் எதிர்க்கட்சியில் இருந்தாலும் இந்தச் சமுதாயத்தின் நலனுக்காக எப்படியான திட்டங்களை வகுத்துப் போராட முடியும் ; அதற்றை எவ்வாறு செயற்படுத்த முடியும் என்பது குறித்து இன்றைய பேராளர் மாநாட்டில் பல தீர்மானங்களை நாங்கள் நிறைவேற்றியிருக்கிறோம். அந்தத் தீர்மானங்களின் வழிநின்று இந்த இயக்கத்தின் இந்த 40ஆவது வருடத்தில் இருந்து எங்களுடைய போராட்டம் புதுப் பொலிவோடு பயணிக்கும், பயணிக்கவேண்டும், எங்களுடைய தலைவருக்குச் செய்கின்ற மாபெரிய அஞ்சலி அதுவாகவே இருக்கும் என்று சொன்னவனாக உங்கள் மத்தியிலிருந்து பணிவன்போடு விடைபெற்றுக்கொள்கிறேன்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings