“காசு யாருக்கு வேணும்” எங்க புள்ளைய கோடி ரூபா கொடுத்தாலும் வாங்க முடியுமா- தாய் கதறல்
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் ஒரு தனியார் பள்ளியில், பழனிவேல் – சிவசங்கரி தம்பதியரின் மூன்றரை வயது சிறுமி லியா லட்சுமி எல்.கே.ஜி படித்து வந்துள்ளார். மதிய உணவு இடைவேளையின்போது அந்த சிறுமி மாணவர்கள் பயன்படுத்தும் கழிவறையின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். சிறிது நேரத்தில் அந்த குழந்தையை காணவில்லை.
சிறுமியை ஆசிரியை தேடியபோது கழிவறையின் செப்டிக் டேங் நொறுங்கிக் கிடப்பதை கண்டுஉள்ளே பார்த்தபோது சிறுமி இறந்துகிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக ஆட்களின் உதவியுடன் சிறுமியை வெளியே எடுக்கப்பட்டது. பின்னர் அருகில் உள்ள முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இரும்பால் மூடப்பட்டிருந்த கழிவுநீர் தொட்டி முழுமையாக சேதமடைந்ததை கண்ட பொதுமக்கள் பள்ளி நிர்வாகத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து கவனக்குறைவாக செயல்பட்ட பள்ளி ஆசிரியர், தாளாளர், ஆசிரியர் ஆகிய 3 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரேத பரிசோதனைக்கு பிறகு குழந்தையை பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் விஸ்வரூபம் எடுத்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.3 லட்சம் நிவாரண தொகை வழங்குவதாக அறிவித்தார்.
இதற்காக காசோலையை சிறுமியின் வீட்டிற்கு அமைச்சர் பொன்முடி சென்றார். அங்கு அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்த சிறுமியின் உடல் முன்பு பெற்றோர் நின்று தேம்பி தேம்பி அழுதுகொண்டிருந்தனர். அவர்களை கண்ட அமைச்சர், ரூ.3 லட்சத்துக்கான காசோலையை சிறுமியின் தாயிடம் வழங்கினார்.
அதனை வாங்க மறுத்த சிறுமியின் தாய் “காசு யாருக்கு வேணும்? எங்க புள்ளைய கோடி ரூபா கொடுத்தாலும் வாங்க முடியாது” என கூறி கதறி அழுதார். இது காண்பவர்களையும் கண்கலங்க செய்தது. இதையடுத்து, சிறுமியின் உறவினரிடம் காசோலையை அமைச்சர் பொன்முடி வழங்கினார்.
பள்ளி நிர்வாகம் தவறு செய்திருந்தால் நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும். யாரையும் விடமாட்டோம் என சிறுமியின் உறவினர்களிடம் அமைச்சர் உறுதி அளித்தார். இதையடுத்து சிறுமியின் தாயார், அந்த காசோலையை சிறுமி உடல் வைக்கப்பட்ட பெட்டி மீது தூக்கி வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings