in

ஸ்டெர்லைட் ஆலை நுழைவும் போராட்ட வரலாறும் இரத்த சாட்சிகளால் மூடப்பட்டதும்!

தலையங்கம்

வேதாந்தா குழுமம் தனது தாமிர உருக்கு ஆலைக்கு ‘ஸ்டெர் லைட்’ என்று பெயரிட்டது. வேதாந்தா முதலில் மஹாராஷ்ட்ரா அரசிடம் சென்றது. 1992ஆம் ஆண்டில் மகாராஷ்டிரா தொழில் வளர்ச்சிக் கழகத்திற்கு ரத்னகிரி மாவட்டம் ஜட்கான் கிராமத்தில் ஒரு இடம் ஒதுக்கப்பட்டது. இந்த தாமிர உருக்கு ஆலை வராக் கூடாது என்று, டிசம்பர் 13, 1993 அன்று நகரத்தின் 30,000க்கும் மேற்பட்ட மக்கள் அணிவகுத்துச் சென்றனர். கட்டுமானத் தொழிலாளர்களுக்கான குடியிருப்புகள் மற்றும் வேறு சில கட்டமைப்புகளை இடித்துள்ளனர். இந்த ஆலை ஆண்டுக்கு 60,000 டன் தாமிரத்தை உற்பத்தி செய்ய முன்மொழியப்பட்டது. இதற்கு ரத்தினகிரி பகுதி மக்களிடம் இருந்து உடனடியாக கடும் எதிர்ப்பு கிளம்பியது. ரத்னகிரியின் பொருளாதாரம் பெரும்பாலும் விவசாயம், தோட்டக்கலை மற்றும் மீன்பிடித்தலை சார்ந்துள்ளது. இந்த கடலோரப் பகுதியில் விளையும் புகழ்பெற்ற அல்போன்சா மாம்பழங்கள் சுற்றுச்சூழல் சீர்கேடுகளை உணரக்கூடியவை. முந்திரி மற்றும் தேங்காய் இங்குள்ள விவசாயிகளுக்கு அதிக மகசூல் தரும் மற்ற பொருளாதார அடிப்படைகள் ஆகும். அந்த சம்பவத்திற்குப் பிறகு ஸ்டெர்லைட் தூத்துக்குடிக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டது.

ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையில் அதிக மாசுபாடு உள்ளதால், தமிழ்நாடு அரசை நம்ப வைக்கும் முன், குஜராத், கோவா மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மூன்று மாநில அரசுகள் வேதாந்தா குழுமத்தின் 40,000 டன் கொள்ளளவை அமைக்க அனுமதி மறுத்துள்ளன. 1997ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதிலிருந்து, இந்த ஆலை பல சந்தர்ப்பங்களில் மாசு விதிமுறைகளை மீறுவது மற்றும் மாசு கட்டுப்பாட்டாளர்களின் அனுமதி தேவைகளை மீறுவது கண்டறியப்பட்டது, இது நீதிமன்றங்களால் கவனிக்கப்பட்டது.

1996 ல் தூத்துக்குடியில் ஆட்சியாளர்கள் உதவியுடன் அடிக்கல் நாட்டல் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது புன்னைக்காயல் கிராமத்தைச் சேர்ந்த  மீனவர் தலைவர் அன்டன் கோம்ஸ் மும்பையில் இருந்ததால், தனது தொடர்புகள் மூலம் ஸ்டெர்லைட் ஆலையின் ஆபத்தை உணர்ந்து, அறிவியலாளர் ரஷ்மி மயூர் அவர்களை அழைத்து வந்து, தூத்துக்குடியில் விழிப்புணர்வு கூட்டங்களையும், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களையும்  நடத்தினார்.

வ.உ.சி. கல்லூரி மாணவர்கள் ஆலைக்கு அடிக்கல் நாட்டுவதையே எதிர்த்துப் போராடினர். ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு, ஆலைக்கான கட்டுமானப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன. ஆலைக்கு ஆஸ்திரே லியாவிலிருந்து தாமிர  ‘கனிம பொருள்கள்’ கப்பல் வழியாக வந்தன. அதை அறிந்த போராட்டக்காரர்கள் துறைமுகத்தின் தொழிற் சங்கங்களை இணைத்துக் கொண்டு விசைப்படகு, தோணி, நாட்டுப்படகு ஆகியவற்றுடன்  கடலிலேயே ‘தாமிர உருக்கு கனிமம்‘ கொண்டு வரும் கப்பலை முற்றுகையிட்டுத் தடுத்தனர்.

ஆலையின் கழிவுகளை எங்கே கொட்டுவது என்று கேட்டதில், “கடலிலே” என்று முதலில் திட்டமிட்டிருந்தனர். அது மீனவர்களது வாழ்வாதாரத்தை சுக்குநூறாக உடைக்கும் என்பதால் கடும் எதிர்ப்பு உருவானது. அதை அறிந்த “அறிவாளி ஆலை உரிமையாளர்” மாற்று திட்டம் போட்டனர். ஆனாலும் ‘சுற்றுச் சூழல் பாதுகாப்பாளர்கள்’ விடவில்லை. போராட்டம் தொடர்ந்தது. கட்சிகள் இறங்கின. பிறகு காலப் போக்கில் தொழிற்சங்கங்கள், கட்சிகள் ஆகியோரின் எதிர்ப்பு குறைந்தது. ஆலைக்கு ‘தாமிர உருக்கு செயல்பாட்டு உதவிப் பொருள்களை’ கொண்டு வர ஒப்பந்தம் பெற்ற தனவந்தர்கள் ஆதரவு ஆலைக்கு கிடைத்தது. ஆனாலும் மக்கள் மத்தியில் எதிர்ப்பு  ஓயவில்லை.

மறைந்த திரைப்பட இயக்குனர் ஜனநாதன் ‘இயற்கை’ படம் எடுக்க, தூத்துக்குடி துறைமுகம் வந்தார். உடன் வந்த நானும் நேரில் ஆஸ்திரேலியாவிலிருந்து வந்து இறங்கிய தாமிர கனிமங்கள் துறைமுக  நடைமேடையில் ‘பச்சை நிறத்தில் குவிந்து கிடப்பதை’  காண முடிந்தது. அதன் அருகே செல்ல முடியாத வகையில் அதன்  நாற்றம் மூக்கைத் துளைத்தது. அந்த அளவிற்கு அந்த ‘தோண்டி எடுத்து வந்து இறக்கிய கனிமங்கள்’  சூழலை மாசுபடுத்தியது. நெல்லையிலிருந்து தூத்துக்குடிக்கு பேருந்தில் வருவோர் எல்லாம் புதுக் கோட்டை தாண்டும் போதே அந்த ‘நாசியை அரிக்கும் நாற்றத்தை’ அனுபவிப்பார்கள். பிறகு 2015லிருந்து ஆலைக்கு அரசு உதவியுடன், ‘விரிவாக்கம்‘ செய்ய நிலம் வாங்கப்பட்டது.

அப்போது மீண்டும் ஆலையை மூடச் சொல்லி பெரும் எழுச்சி உருவானது. ஸ்டெர்லைட் எதிர்ப்பு கூட்டமைப்பு உருவானது. 2017ல் சென்னை மெரினா உட்பட ‘சல்லிக்கட்டு எழுச்சி’ உருவனது. லட்சக்கணக்கில், தமிழ்நாடெங்கும் சல்லிக் கட்டு விளையாட்டிற்காக, தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும், ‘கட்சி சார்பற்ற’ முறையில் மக்கள் எழுச்சி இளைஞர்களின் தலை மையில் உருவானது.

அதற்கு ‘கட்சி சார்பற்ற அரசியல்’ எனப் பெயர். அதேபோல தூத்துக்குடியில் அடுத்த ஆண்டே நச்சு ஆலைக்கு எதிராக மக்கள் திரண்டனர்.  2018 மார்ச் மாதம் ‘ஆலைக்கு எதிராக மாபெரும் பொதுக் கூட்டத்திற்க  ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட மக்களை’ திரட்டியது. அதேநேரம் ‘ஆலை மூடலை’ மக்கள் முன் வைத்தனர். ஒரு சிலர்  ‘கழிவு செல்லும் சிம்னி உயரத்தை உயர்த்தினால்  போதும்‘ என்று மறைமுக ஆலை ஆதரவையும் கூறிப்பார்த்தனர். அதன் பிறகு குமரெட்டியாபுரம் மக்களது போராட்டம் அனைத்து கிராம மக்களின் பங்களிப்புடன் புறப்பட்டது. அதன் 100வது  நாள் 2018 மே -22ல் வந்தது. ‘நச்சு ஆலை அகற்றல் கூட்டமைப்பு’ உருவானது. அது ‘மாவட்ட ஆட்சியர் அலுவலகம்  சென்று அமைதி வழியில்  போராட’ திட்டமிட்டது.

வேதாந்தா குழுமம் விரைந்து செயல்பட்டது. இங்கிலாந்து நாட்டு  அரசாங்க ஆதரவுடன் இறங்கியது. இங்கிலாந்து ஹைகமிஷனர் ஸ்டெர்லைட் ஆதரவு அறிக்கையை மே 15ல் வெளியிட்டார்.  உள்ளூர் வருமானத்துறை, காவல்துறை ஆதரவுடன் ‘போராட்டத்தை ஒடுக்க’ திட்டமிட்டது. போராட்டக்காரர்களை இரண்டாக உடைக்க மாவட்ட நிர்வாகமே திட்டமிட்டதாக அரசு நியமித்த விசாரணை ஆணையத் தலைவர் நீதிபதி அருணா ஜெகதீசன் குற்றம் சாட்டுகிறார். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்றவர்கள்-, செல்லாதவர்கள் என மாவட்ட நிர்வாகம் பிரித்து விட்டது என்கிறார் அவர்.

மாவட்ட ஆடசியர் அலுவலகம் சென்றவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் இளம்பெண் உட்பட 13 பேர் அநியாயமாக கொல்லப்பட்டனர்.மறுநாள் அப்பாவிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இரத்த சாட்சிகளின் தியாகம் வீண் போகாததால், உச்ச நீதிமன்றம் சமீபத்தில் ‘ஆலை  மூடலை’ ஏற்றுக் கொண்டது. இந்த மாபெரும் ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை’ செய்தவர்களை நீதிபதி அருணா ஜெகதீசன் ஆணையம் அடையாளம் கண்டு கூறியுள்ளது. எங்கே அவர்களுக்கு ‘தண்டனை’ என்று ஆறு ஆண்டுகளுக்குப் பிறகும் இன்னமும் மக்கள் கேட்ட வண்ணமாய் இருக்கிறார்கள்.

-தெ.சீ.சு. மணி

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

பூனைக்கு கவுரவ டாக்டர் பட்டம்… வியப்பில் உலகம்

ஜாதியை காட்டி ஆசிரியையை பள்ளியை விட்டு நீக்கிய தாளாளர் மீது வழக்கு பதிவு