தலையங்கம்
நாம் வாழும் மாநகர் யாருக்கு உரியது? ஒரு சாரா ருக்கா அல்லது மாநகர்வாழ் மக்கள் அனைவருக்குமா?
இந்த கேள்வியை சில வாரங்கள் முன்னர் கேட்டிருந்தால், அது அபத்தமானது அல்லது முட்டாள்தனமானது என்று இடித்துரைக்கப் பட்டிருப்போம். “என்ன கேள்வி இது? ஒரு நகர் எப்படி ஒரு சாராருக்கு சொந்தமாகும், இது என்ன அவர்கள் பாட்டன் வீட்டு சொத்தா?” என்று ஒரு வாங்கு வாகியிருப்பார்கள்.
ஆனால், திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித் “சென்னை நகர் எங்களுக்கு சொந்தம், எங்களை மீறி சென்னையை யாரும் ஆள முடியாது” என்று இதே சென்னையில் படுகொலை செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங்கிற்கான அஞ்சலி கூட்டம் ஒன்றில் உரையாற்றியதாக செய்திகள் வந்துள்ளன.
அதாவது சென்னை நகர் எங்களுக்கே சொந்தம் என்று அவர் கூறியதாக அந்த செய்திகள் கூறின. அதாவது இங்கு “எங்களை அல்லது நாங்கள்” என்று இயக்குநர் ரஞ்சித் அவர்கள் தான் சார்ந்த சமூக மக்களைத்தான் குறிப்பிடுகிறார் என்பதை புரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. அனைத்து சமூக மக்களுடன் இணைந்து வாழும் ஒரு மாநகரமாகத்தான் காலங்காலமாக சென்னை இருந்து வருகிறது. அது அப்படியே தொடர வேண்டும். அந்த நல்லிணக்கம் மற்றும் அமைதியை குலைக்க அனுமதிக்க முடியாது.
பல்லின சமூகத்தவர்கள் ஒற்றுமையாக வாழ்ந்து இந்த நகரின் மேம்பாட்டுக்காக அவரவரர் வழியில் பங்களித்து வருகின்றனர். கலை, கலாச்சாரம், சமயம், விளையாட்டு, பொருளாதாரம், நிர்வாகம், கல்வி, வேலை வாய்ப்பு, பெண்கள் மேம்பாடு, பாதுகாப்பு என்று அனைத்து வழிகளிலும் நகரின் மேம்பாடு மற்றும் பாதுகாப்புக்கு பங்காற்றி வருகின்றனர்.
அப்படியிருக்கும் போது “சென்னை நகர் எங்களுக்கே சொந்தம், எங்களை மீறி சென்னையை யாரும் ஆள முடியாது” என்று பா. ரஞ்சித் கூறியிருப்பது சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியிருக்கிறது.
சென்னை மாநகரின் வளர்ச்சிக்கு ஒரு சமூகத்தினர் மட்டுமே காரணமா, ஒரு சமூகத்தை மீறி யாரும் சென்னையை ஆள முடியாதா, பல்வேறு துறைகளில் இந்நகரின் வாழும் பல்வேறு மதம், சமூகம், பூர்வீகம், ஆகியவற்றைச் சேர்ந்தவர்களின் பங்களிப்பு மற்றும் ஆளுமை அளப்பரியது.
மதச் சிறுபான்மை மக்கள் கல்வித்துறையில் கணிசமான பங்களிப்பைச் செய்து வருகின்றனர். தமிழ் நாட்டைப் பூர்வீகமாகக் கொள்ளாத லட்சக்கணக்கானவர்கள் சென்னையை தமது தளமாகக் கொண்டு வர்த்தகத்தை முன்னெடுத்து, ஏராளமானோருக்கு வேலை வாய்பை அளிக்கின்றனர். லயோலா கல்லூரி, சென்னை கிறித்துவ கல்லூரி, குருநானக் கல்லூரி, புதுக்கல்லூரி, ஸ்டெல்லா மேரி கல்லூரி, வைஷ்ணவா கல்லூரி, காயிதே மில்லத் கல்லூரி என்று கல்வித்துறையில் இந்த பட்டியல் நீளூம்.
வட சென்னையின் பொருளாதாரத்தில் வட இந்திய மாநிலங்களில் இருந்து இங்கு வந்து அமைதியான வழியில் தொழில்களை செய்துகொண்டிருப்பவர்களின் பங்கு கணிசமானது. அதே போன்று தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, உருது என்று தாய்மொழிகளைக் கொண்டவர்களும் சென்னை மாநகரை வளர்த்தெடுத்தவர்கள் தான்.
இப்படியான பல்லினத்தன்மையும், கலாச்சாரமும் தான் ஒரு நகருக்கு பெருமை சேர்க்கிறது. ஒரு நகரின் வளர்ச்சி மற்றும் பொருளாதார வல்லமை அல்லது ஆட்சி அதிகாரம் என்பது ஒரு சமூகத்தால் மட்டும் நிர்ணயிக்கப்படுவதல்ல என்பது உண்மை. இது பெங்களூரு, புதுடில்லி, மும்மை, கொல்கத்தா, ஹைதராபாத், சண்டிகர் போன்ற அனைத்து பெருநகர்களுக்கும் பொருந்தும்.
இயல்பாகக் கூறுவது என்றால் சென்னை மாநகர் என்று அறியப்படுவது வடக்கே மணி தொடக்கம் தெற்கே தாம்பரம் வரையிலும் பரவி விரிந்துள்ள ஒரு நகரம். ஆவடி, தாம்பரம் ஆகியவை நிர்வாக வசதிக்காக தனி மாநகராட்சிகளாக இருந்தாலும் சென்னை என்பது இந்த மூன்று மாநகராட்சிகள் மற்றும் அதை அன்மித்த பகுதிகளையும் உள்ளடக்கியது என்பது தான் யதார்த்தம்.
அப்படியிருக்கும் போது தங்களை மீறி சென்னையை யாரும் ஆள முடியாது, இந்த மாநகர் தங்களுக்கே சொந்தம் என்று இயக்குநர் பா ரஞ்சித் கூறியுள்ளதன செய்திகள் ஏற்புடையதாக இருக்காது. தான் சார்ந்துள்ள சமூகத்தினருக்கு ஒரு அநீதி இழைக்கப்படுகிறது என்று அவர் கருதும் போது அதை எதிர்த்துக் குரல் கொடுக்கும் உரிமை அவருக்கு உள்ளது. அதில் நியாம் இருக்கும்பட்சத்தில் அனைவரும் அதற்காக குரல் கொடுக்கவும் வேண்டும். இப்படி ஜாதி, மதம், மொழி, பொருளாதார வல்லமை போன்ற குறியீடுகளின் அடிப்படையில் ஒரு மாநகர் நமக்கு மட்டுமே உரித்தானது, இங்கு தம்மை மீறி யாரும் ஆள முடியாது என்று கூறுவது முற்றாக ஏற்க முடியாதது மட்டுமல்ல அது இந்த மாநகரின் ஒற்றுமைக்கும் குந்தகத்தை ஏற்படுத்தும்.
சென்னை மாநகர் நம் அனைவருக்குமானது. அதை யாரும் மறுக்க முடியாது!
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings