சென்னை
தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், காவிரி நடுவர் மன்றம் 05.02.2007 அன்று அளித்த இறுதி ஆணையினையும், உச்சநீதிமன்றத்தில் 16.02.2018 தேதியிட்ட தீர்ப்பினையும், செயல்படுத்த காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகிய அமைப்புகளை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதன்படி 2018ம் ஆண்டு ஜூன் முதல் இவ்வமைப்புகள் செயல்பட்டு வருகின்றன.
இந்த தீர்ப்புகளின்படி தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய நீரை சென்ற ஆண்டில் கர்நாடக அரசு விடுவிக்காததால் வேளாண் பெருமக்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றதை நாடி நீரைப் பெற்றது.
தற்போதைய தென்மேற்கு பருவமழைக் காலத்தில் கர்நாடக அணைகளின் நீர்வரத்தை கணக்கில் கொண்டு காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆகிய அமைப்புகள் தமிழ்நாட்டிற்கு பில்லிகுண்டுலுவில் கிடைக்க வேண்டிய நீரினை கணக்கிட்டு 12.07.2024 முதல் 31.07.2024 வரை நாளொன்றுக்கு ஒரு டி.எம்.சி. நீரை விடுவிக்க வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது.
இந்த ஆணைப்படி தமிழ்நாட்டிற்கு விடுவிக்க வேண்டிய நீரை விடுவிக்க இயலாது என்று கர்நாடக அரசு தெரிவித்து இருப்பது மிகுந்த அதிர்ச்சியை அளிக்கிறது. இந்த ஆணையை உடனடியாக செயல்படுத்திட தமிழ்நாடு அரசு காவிரி நீர் மேலாண்மை அமைப்பிற்கு கடிதம் எழுதியுள்ளது. இவ்வாறு காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு அமைப்பின் ஆணையின்படி வரையறுக்கப்பட்டுள்ள நீரை கர்நாடக நீர் தர மறுப்பது தமிழக விவசாயிகளை வஞ்சிக்கும் செயலாகும்.
தமிழ்நாட்டிற்கு நீர் வழங்க முடியாது என்று கர்நாடக அரசு கூறுவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. தமிழக விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடிய இத்தகைய செயல்களை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது.
காவிரி நீரைப் பெறுவதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் அனைத்து சட்டப்பேரவை கட்சி தலைவர்களின் கூட்டத்தை நாளை (16ந் தேதி) காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தில் கூட்டிட ஆணையிட்டுள்ளோம்.
இக்கூட்டத்தில் அனைவரையும் கலந்தாலோசித்து, சட்ட வல்லுனர்களின் கருத்துக்களை பெற்று தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings