இந்த ஆண்டு 2 இலட்சம் அஸ்வெசும பயனாளிகளை வலுப்படுத்துவது அரசின் இலக்கு – அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில
2029ஆம் ஆண்டளவில் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் கீழ் பயன்பெறும் 12 இலட்சம் குடும்பங்களை பொருளாதார மற்றும் சமூக ரீதியாக வலுப்படுத்தும் அரசின் வேலைத்திட்டத்தின் கீழ், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் கீழ் இயங்கும் சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் களனி பிரதேச செயலகப் பிரிவைச் சேர்ந்த அஸ்வெசும பயனாளி குடும்பங்களுக்கு 55 இலட்சம் ரூபாய் பெறுமதியான வாழ்வாதார அபிவிருத்தி உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (28) இடம்பெற்றது.
களனி பிரதேச செயலக வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வு, கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில தலைமையில் நடைபெற்றது.
ஆயத்த ஆடை உற்பத்தி, கோழி இறைச்சி விற்பனை, உறைந்த உணவு விற்பனை, வெல்டிங் தொழில் உள்ளிட்ட சுயதொழில்களுக்குத் தேவையான குளிர்சாதனப் பெட்டிகள், ஆழ் உறைவிப்பான்கள், ஜுக்கி தையல் இயந்திரங்கள், ஓவர்லொக் இயந்திரங்கள், கிரைண்டர்கள், சீலர்கள் உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில, இந்த ஆண்டுக்குள் அஸ்வெசும நலன்புரி திட்டத்தின் மூலம் பயனடையும் சுமார் 2 இலட்சம் பேரை பொருளாதார மற்றும் சமூக ரீதியாக வலுப்படுத்த அரசாங்கம் எதிர்பார்ப்பதாக தெரிவித்தார்.
பயனாளிகளுக்கு வழங்கப்படும் இந்த உபகரணங்கள் அல்லது ஏனைய உதவிகள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது அரச அதிகாரிகளின் தனிப்பட்ட பணம் அல்ல என்றும், அவை பொதுமக்கள் செலுத்தும் வரிப்பணத்திலிருந்து வழங்கப்படுவதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
அதேவேளை, வாழ்வாதார அபிவிருத்தி உபகரணங்கள் அல்லது ஏனைய உதவிகளைப் பெற்றுக்கொள்வதன் காரணமாக அஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு நிறுத்தப்படும் என்ற கருத்து முற்றிலும் தவறானது என்றும் அமைச்சர் தெரிவித்தார். அஸ்வெசும கொடுப்பனவு நிறுத்தப்படுவதோ அல்லது மாற்றப்படுவதோ குறித்த திட்டத்தின் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடு மற்றும் தகுதி அளவுகோல்களுக்கு அமைவாகவே இடம்பெறும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அஸ்வெசும என்பது நிரந்தரமாகப் பேணப்படும் நலன்புரித் திட்டம் அல்ல என்றும், குறுகிய காலத்தில் மக்களை வலுப்படுத்தி அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அபிவிருத்தித் திட்டம் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத்தின் நலன்புரி உதவிகளில் தொடர்ச்சியாக தங்கியிருப்பதற்குப் பதிலாக, தங்களுக்கென பொருளாதார வலிமையை உருவாக்கிக்கொள்வது பயனாளிகளின் அடிப்படைப் பொறுப்பு என்றும், அதற்காக பயனாளிகளின் தேவைகளை அடையாளம் கண்டு தேவையான ஆதரவை வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் வலியுறுத்தினார்.
இந்த நிகழ்வில் களனி பிரதேச செயலாளர் கயனி ரணசிங்க, பேலியகொட நகர சபைத் தலைவர் கபில சம்பத் கீர்த்தி, களனி பிரதேச சபை மற்றும் பேலியகொட நகர சபை மக்கள் பிரதிநிதிகள், களனி சமுர்த்தி தலைமையக முகாமையாளர் பிரியந்த கருணாரத்ன, சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


GIPHY App Key not set. Please check settings