in

IMF இணக்கப்பாடு நாட்டுக்கு அவசியம் – சஜித் பிரேமதாச

2027 ஆம் ஆண்டு விரிவாக்கப்பட்ட கடன் வசதி முடிவடைந்த பின்னர் IMF இணக்கப்பாட்டிலிருந்து வெளியேறுவதாக அரசாங்கத்தின் பிரபல அமைச்சரான பிமல் ரத்நாயக்க பெருமைப்படும் விதமாக சுட்டிக்காட்டுகிறார். 

இது தொடர்பாக நாட்டு மக்கள் நல்ல புரிதலைப் பெற்றுக் கொள்ள வேண்டும். நமது நாட்டில் நடைமுறையிலுள்ள IMF இணக்கப்பாடு தொடர்பில் பல்வேறு நபர்கள் பல்வேறு விதமாக விளக்கமளிக்கின்றனர். நாட்டில் ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட்டிருந்தாலும், இலட்சக் கணக்கான மக்களின் தலையில் அழுத்தத்தையும் அதிருப்தியையும் சுமத்தி, மக்கள் கடும் அதிருப்தியுடனும் கவலையுடனும் தமது வாழ்க்கைப் பயணத்தை நடத்துவதன் மூலமே அந்த ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட்டிருக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் தெரிவித்தார்.

இந்த விரிவாக்கப்பட்ட கடன் வசதியுடன் IMF 2027 மார்ச்சில் வெளியேறுவது நாட்டின் மறுமலர்ச்சி திட்டம் முழுமைப்பெற்றதன் பின்னர் அல்ல, மாறாக இந்த மறுமலர்ச்சி திட்டம் இன்னும் முழுமை பெறவில்லை. பல குறைபாடுகள் காணப்படுகின்றன. IMF இணக்கப்பாடு முடிவடையும் போது, நம்பகத்தன்மை நிலைநாட்டப்படும் பேரண்ட பொருளாதார கட்டமைப்பு நமது நாட்டுக்குத் அவசியமாகும். கடன் நிலைத்தன்மையை வலுப்படுத்தும், கையிருப்புக்களின் அளவை நிலையான உயர் மட்டத்தில் பேணுவதற்கும், அரசாங்க நிதி சீர்திருத்த செயல்முறையை ஏற்றுக் கொள்ளத்தக்க முறையில் முன்னெடுக்கும், கடன் வழங்குநர்களின் நம்பகத்தன்மையை பாதிக்காமல் சந்தை அணுகலைத் தக்கவைத்துக்கொண்டு முன்னேறும் திட்டமொன்று நாட்டுக்கு அவசியமாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

எனவே வறுமையை ஒழிக்கும், ஏற்றுமதியை மேம்படுத்தும், விவசாயிக்கும், மீனவருக்கும், தொழிலாளிக்கும், தொழில்முனைவோருக்கும், சுயதொழில் புரிவோருக்கும், சேவைத் துறைக்கும், இளைஞர், பெண்கள் மற்றும் சிறார்கள் தலைமுறை உட்பட மொத்தம் 220 இலட்சம் மக்களுக்கு நிவாரணம் பெற்றுத் தரும் தொடர்ச்சியான அடுத்த கட்ட IMF இணக்கப்பாடொன்று நாட்டுக்கு அவசியமாகும். நடைமுறையிலுள்ள இணக்கப்பாட்டில் காணப்படும் மக்கள் அழுத்தத்தை நீக்கி, மக்களால் வாழ முடியுமான பொருளாதார நிலைமையை உருவாக்கக்கூடிய தொடர்ச்சியான அடுத்த கட்ட IMF இணக்கப்பாட்டை நோக்கி அரசாங்கம் திரும்ப வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர்  தெரிவித்தார்.

விசேட கூற்றை முன்வைத்து இன்று (26) கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

IMF இணக்கப்பாட்டின் உள்ளடக்கம் தொடர்பாக கடுமையான விமர்சனங்கள் காணப்பட்ட போதிலும், 2027 மார்ச் 3 ஆம் திகதி வரை ஒரு குறிப்பிட்ட ஒழுங்குமுறையுடனும் நம்பகத்தன்மையுடனும் IMF வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். IMF வசதியிலிருந்து எதிர்வரும் மார்ச் மாதம் வெளியேறும் போது நாடு ஆபத்தான நிலைக்கு, அபாயத்திற்கு உள்ளாகாத முக்கியமான மாற்று ஏற்பாட்டை வகுத்துக் கொள்ள வேண்டும். அது கடன் வழங்குநர்களுக்கும், முதலீட்டாளர்களுக்கும், தரவரிசைப்படுத்தல்களுக்கும், மக்களின் பிரச்சினைகளுக்கும் அத்தியாவசியமான விடயம் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

 நாட்டின் தற்போதைய நிலைமை குறித்து மக்களுக்கு புரிதல் காணப்பட வேண்டும். 

நமது நாட்டின் கடன் சுமை நிலவரத்தை இந்நாட்டு மக்கள் நன்கு அறிந்திருக்க வேண்டும். IMF முன்னறிவிப்புகளின்படி 2026 இல் அரசாங்க கடன் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக 100% ஆகும். IMF கணக்கிட்ட விதமாக 2027 ஆம் ஆண்டில் அது 96% ஆக அமையும். முழுவதுமாக அரசாங்க கடன் அளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக பெரிய அளவில் காணப்படுவது நாட்டுக்கு மிகவும் பாதகமானது. அதற்கிடையில் வெளிநாட்டு கடன் 2026 இல் 51% ஆகவும், 2027 இல் 52% ஆகவும் காணப்படும். நமது நாட்டின் கடன் தவணை மற்றும் வட்டி செலுத்துகைகளைப் பார்க்கும் போது, தவணை செலுத்துகைகளும், வட்டி செலுத்துகைகளும் 2026 இல் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக 8.5% ஆகவும், 2027 இல் 7.4% ஆகவும் காணப்படும். அரசாங்க வருமானத்தில் 15% கடன் மற்றும் வட்டி தவணைகளுக்காக ஒதுக்கப்படுகிறது. இது நாட்டுக்கு பாதகமான நிலைமை என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 IMF இலக்குகளை அடைய முடியுமா என்பது இன்னும் சந்தேகத்திற்குரியது. 

IMF இணக்கப்பாட்டால் கடன் பிரச்சினை நீங்கவில்லை. மாறாக அது கடன் மீள்திட்டமிடல் மாத்திரமே. நமது நாட்டின் மொத்த நிதி தேவை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 13% க்கும் குறைவாக பேணிச் செல்ல வேண்டும். அதற்கிடையில் கடன் மற்றும் வட்டி செலுத்துகைகள் 4.5% க்கும் குறைவாக வைத்திருக்க வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தியின் சதவீதமாக அரசாங்க கடன் 95% க்கும் குறைவாக பேணிச் செல்ல வேண்டும் என்றவாறு IMF இலக்குகளை விதித்துள்ள நிலையில், இந்த நிலைமைகளை அடைய முடியுமா என்பதில் பிரச்சினை காணப்படுகின்றது எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

 தற்போதைய அரசாங்கம் முந்தைய  அரசாங்கத்தின் IMF இணக்கப்பாட்டையே தொடர்ந்து கொண்டிருக்கின்றது.

IMF திட்டத்தில் தற்போதைய அரசாங்கம் குறிப்பாக பேரண்ட இணைக்கப்பட்ட பத்திரங்கள் திட்டத்தில் அதிக கடன் மற்றும் வட்டி அளவை உருவாக்க வேண்டியிருக்கும். பேரண்ட இணைக்கப்பட்ட பத்திரங்கள் தொடர்பாக முந்தைய அரசாங்கம் மேற்கொண்ட இணக்கப்பாடு மக்களுக்கு அதிக அழுத்தத்தையும், சுமையையும் கொடுத்தது, அதனையே தற்போதைய அரசாங்கமும் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றது. இதனால் நமது நாடு மிகவும் இருக்கமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 நாடு எந்தளவு தூரம் நிலைத்தன்மையை அடைந்துள்ளது அல்லது அடையாதுள்ளது என்பதை மக்களுடன் நடத்தும் உரையாடல்களில் தெரிகிறது.

இந்த நிதி நிலைத்தன்மை குறித்து முந்தைய அரசாங்கம் போலவே தற்போதைய அரசாங்கமும் இப்போது பெருமையடித்துக் கொண்டிருக்கிறது. எவ்வளவு தான் பெருமையடித்தாலும் களத்திற்கு சென்று சாதாரண மக்களுடன் உரையாடும் போது வாழ்க்கைச் செலவும் பணவீக்கமும் அதிகரித்திருப்பது தெரிகிறது. இந்த நேரத்தில் வெளிப்புற அதிர்ச்சிகள் மற்றும் தொடர் அதிர்ச்சிகள் குறித்து அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 மக்களுக்கு விரோதமான IMF இணக்கப்பாடு என்றால் அது மீண்டும் வேண்டாம். 

நமது நாட்டின் அதிக வெளிநாட்டு மற்றும் அரசாங்க கடன்களானது பாரதூரமான மட்டங்களில் காணப்படுகின்றன. நமது நாட்டுக்கு குறுகிய ஏற்றுமதி அடித்தளமும் கையிருப்புக்களில் பலவீனமும் காணப்படுகின்றது. இதனால் மிகப்பெரிய அபாயம் நாட்டில் காணப்படுகின்றது. தொடர்ந்தும் நாடு என்ற அடிப்படையில் IMF உடன் மக்கள் சார்ந்த, மக்கள் நலன் கருதிய அடிப்படையில் புதிய இணக்கப்பாட்டை நோக்கிச் செல்ல வேண்டும். தற்போதைய இணக்கப்பாடு போன்று மக்களுக்கு விரோதமான இணக்கப்பாடாக இதுவும் அமைந்து காணப்படுமாயின் அவ்வாறான புதிய இணக்கப்பாடு நாட்டுக்குத் தேவையில்லை. மக்கள் சார்ந்த, மக்கள் நலன் சார்ந்த, மக்களுக்கு பக்க பலம் கிடைக்கும் வகையிலான புதிய இணக்கப்பாட்டிற்குச் செல்வது முக்கியம். அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் பெருமையடித்தலைத் தவிர்த்து உலகளாவிய அளவில் நடைபெறும் அச்சுறுத்தும் நிகழ்வுகளுக்கு முன்னால் நாட்டுக்கு ஏற்படக்கூடிய அபாயத்தை அடையாளம் கண்டு, பேரண்ட பொருளாதார பயணத்தையும், சர்வதேச நிதி உறவுகளையும் வலுவாக பேணி முன்னெடுப்பது முக்கியம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 2027 இல் IMF இணக்கப்பாட்டிலிருந்து வெளியேறும் போது கையிருப்புக்கள் போதுமான மட்டத்தில் இருக்க வேண்டும். 

IMF கூறும் விதமாக 2026 இல் நாட்டின் கையிருப்புக்கள் 8.65 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும். அது போதுமான அளவின் 74% எனவும், 2027 இல் அது 11.8 பில்லியன் ஆக இருக்கக்கூடும் என முன்னறிவித்தல் செய்துள்ளது. தேவையின் 93% ஈடுசெய்யப்படும் எனவும் IMF கூறுகின்றது. கையிருப்புக்களுக்கான உலகளாவிய தரப்படுத்தல் சூத்திரம் இறக்குமதி தேவையின் 3 மாதங்களை ஈடுசெய்யும் கையிருப்புக்கள் ஒரு நாட்டிடம் காணப்பட வேண்டும் என்பதாகும் எனவும், விரிவாக்கப்பட்ட கடன் வசதி 2027 இல் வெளியேறும் போது நமது நாட்டின் கையிருப்புக்களின் அளவு ரீதியாக பொருத்தமான மட்டத்தில் காணப்படுகின்றதா என்பதை புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 அமைச்சர்கள் பெருமையடித்தாலும் நாட்டுக்கு புதிய வேலைத்திட்டமொன்று அவசியம். 

பிமல் ரத்நாயக்க அமைச்சர் எவ்வளவு தான் பெருமையடித்துக் கொண்டாலும், இந்த கொந்தளிப்பான உலகளாவிய நிலைமையில் மக்கள் சார்ந்த புதிய IMF இணக்கப்பாடு நாட்டுக்கு அவசியமாகும். இந்த இணக்கப்பாட்டின் மூலம் மக்களுக்கு அழுத்தமும் அதிருப்தியும் தீவிர அதிர்ச்சிகளும் தரும் உடன்பாடு அல்லாமல் மக்களுக்கு நிவாரணம் கிடைக்கும் இணக்கப்பாடாக காணப்பட வேண்டும். பொருளாதார நம்பகத்தன்மை, அரசாங்க முதலீடுகளை முறையாக செயற்படுத்துதல்கள், தனியார் முதலீடுகளுக்குத் தேவையான நம்பகத்தன்மை, நேரடி வெளிநாட்டு முதலீடு, இறக்குமதிக்கு பதிலாக ஏற்றுமதி மேம்பாட்டு பொருளாதாரத்தை கட்டியெழுப்புதல் என்பன நாட்டில் நடக்க வேண்டும். மேலும் பேரண்ட மற்றும் நுண் பொருளாதார நிலைத்தன்மையும் நம்பகத்தன்மையும் காணப்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 வறுமையை ஒழிக்க புதிய திட்டம் அவசியம். 

அத்துடன் 30-40% ஆக காணப்படும் வறுமையை ஒழிப்பதற்கு மக்கள் சார்ந்த வேலைத்திட்டமொன்று நாட்டுக்கு அவசியமாகும். நாட்டில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் சூழல் நாட்டில் நடக்க வேண்டும். தற்சமயம் உயர்தரம், சாதாரண தரம் மற்றும் பட்டப்படிப்பை முடித்த இலட்சக்கணக்கான பிள்ளைகள் வேலையின்றி அநாதரவான நிலைக்கு ஆகியிருப்பதால், இவர்களின் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் புதிய IMF இணக்கப்பாடு எமக்கு அவசியமாகும். நடைமுறையிலுள்ள நிபந்தனைகளும் அடிப்படையும் மக்களுக்கு பாதகமானதாகவும், மக்களுக்கு விரோதமானதாகவும் காணப்படுவதனால், மக்களுக்கு சிறந்ததாகவும், அழுத்தத்தையும் அதிருப்தியையும், அதிர்ச்சிகளையும் நீக்கும் விதமான புதிய வேலைத்திட்டமொன்று நாட்டுக்கு அவசியமாகும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

 மீண்டும் வரிசைகளின் யுகமொன்று நாட்டுக்கு வேண்டாம். 

உலகளாவிய போர்சூழலும், காலநிலை மாற்றங்களும் உருவாக்கக்கூடிய சவால்களை தாங்கிக்கொள்ளும் நாட்டை நாம் கட்டியெழுப்ப வேண்டும். பிமல் ரத்நாயக்க அமைச்சர் பிரபலமான ஊடக அறிக்கைகளை வழங்குவதால் பயனில்லை. நாட்டில் வரிசைகளின் காலம் மீண்டும் தேவையில்லை. வருமானம் வீழ்ச்சியடைந்திருக்கும் இந்த தருணத்தில் நாட்டுக்கு மீண்டும் புத்துயிர் தேவை என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மன்னாரில் தியாக தீபம் திலீபனின் 39வது ஆண்டு நினைவேந்தல்

என்.எம். அமீனுக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது