அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு கிடைத்த போதிலும், ஐக்கிய மக்கள் சக்தி தனது முன்னைய நிலைப்பாட்டிலேயே உறுதியாக நிற்கின்றது. அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தமானது ஜனநாயகத்திற்கு விரோதமான ஒரு அரசியலமைப்புத் திருத்தமாகும். அரசியலமைப்புக்கான இருபத்திரெண்டாம் திருத்தமானது அரசியல் மரணதண்டனையை நிறைவேற்றுபவரின் அரசியலமைப்புத் திருத்தமாக காணப்படுகின்றது. இத்திருத்தமானது கனம் நீதிமன்ற சுயாதீனத்தின் மீதும், நீதியைப் பெற்றுக் கொடுக்கும் செயன்முறை மற்றும் சட்டத்தின் ஆட்சி மீதும் பெரும் மரண அடியை கொடுப்பதாக அமைந்து காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (22) உரையாற்றும் வேளையிலயே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
சுருக்கமாகக் கூறுவதானால், இந்தத் திருத்தமானது ஒரு அரசியல் அலுகோசு திருத்தமாகும். ஜனநாயகத்தை அழிப்பதற்காக உருவாக்கப்பட்ட அரசியலமைப்புத் திருத்தமாகும். இதனை ஒரு அரசியல் சூழ்ச்சி என்றும், அரசியலமைப்பு ரீதியான சூழ்ச்சி என்றும் அழைக்கலாம். எனவே, 22 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தை நான் நிராகரிக்கின்றேன். “வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற கொள்கைப் பிரகடனத்தில் ஜனாதிபதி பதவியை ஒழிப்பதாக பிரஸ்தாபிக்கப்பட்ட போதிலும், தற்போதைய அரசாங்கம் கனம் நீதிமன்றத்திற்கு பெரும் மரண அடியை ஏற்படுத்தும் வேலைகளையே செய்து வருகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரிகளைக் கண்டறிய பாரபட்சமற்ற மற்றும் வெளிப்படையான விசாரணை அவசியம்.
இன்று உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் குறித்தும் பேசப்படுகின்றன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தி எப்போதுமே சரியான மற்றும் வெளிப்படையான நிலைப்பாட்டையே கொண்டுள்ளது. எதிர்காத்திலும் அது மாறாது. இந்த கொடூரமான தாக்குதலின் பின்னணியில் உள்ள பிரதான சூத்திரதாரிகள் யார் என்பதை வெளிக்கொணர வேண்டும். உண்மையை வெளிக்கொணர்வதற்காக பக்கச்சார்பற்ற, வெளிப்படையான மற்றும் சர்வதேச நிபுணர்களை உள்ளடக்கிய விசாரணை நடவடிக்கைகள் முறையாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான எமது நிலைப்பாட்டில் இன்றும் எந்த மாற்றமும் இல்லை.
பாராளுமன்றத்திலும், வெளியேயும் கீழ்த்தரமான இந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்தும், பயங்கரவாதிகள் மற்றும் அவர்களுக்கு எதிராக எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் நான் ஏற்கனவே கருத்துக்களை தெரிவித்துள்ளேன். அவற்றை தான் ஒருபோதும் மறுக்கப்போவதில்லை. இந்தத் தாக்குதலுடன் தொடர்புடைய சூத்திரதாரிகள் மற்றும் அதன் பின்னணியில் திட்டங்களை வகுத்தவர்கள் குறித்த உண்மைகளை நாட்டுக்கு வெளிக்கொணர வேண்டும். இவர்களுக்கு பெற்றுக் கொடுக்கக் கூடிய அதிகபட்ச தண்டனை பெற்றுக் கொடுக்க வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
விவசாயிகளுக்கு எதிரான அரசாங்கமே இன்று நாட்டில் காணப்படுகின்றது.
நமது நாட்டில் நெற்செய்கையில் ஈடுபட்டுள்ள 21 இலட்சம் மக்களையும் அரசாங்கம் மறந்துவிட்டது. நெல் ஒரு கிலோவிற்கு 150 ரூபா உத்தரவாத விலையைப் பெற்றுத் தருவோம் என்று இவர்கள் பிரஸ்தாபித்த போதிலும் இன்று அது பெற்றுக் கொடுக்கப்படவில்லை. விவசாய அமைச்சரின் கூற்றுப்படி, ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்வதற்கு 137 ரூபா செலவாகும் நிலையில், இன்று 120 ரூபாவே வழங்கப்படுகின்றன. அரசாங்கம் திட்டமிட்டே ஒரு கிலோ நெல்லுக்கு 17 ரூபா நட்டத்தை ஏற்படுத்தி வருகின்றது. விவசாயிகளுக்காக உரத்து குரல் எழுப்பி, விவசாயியின் மகனை ஜனாதிபதியாக்கினால் விவசாயிகளின் எதிர்காலம் பாதுகாப்பாக அமையும் என்று மக்களை ஏமாற்றிப் பெற்ற வாக்குகளை வெளிப்படையாக மீறும், விவசாயிகளுக்கு எதிரான அரசாங்கமே இன்று நாட்டில் காணப்படுகின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தேர்தல் முடிந்த கையோடு வேலையில்லாப் பட்டதாரிகளையும் கைவிட்டுவிட்டனர்.
வேலையில்லாப் பட்டதாரிகளுக்கு எதனைச் செய்வது என்பது குறித்த எந்தத் தரவுகளும் வேலைத்திட்டங்களும் இந்த அரசாங்கத்திடம் இல்லை. இது தொடர்பாக அரசாங்கத்திடம் கேள்விகளை கேட்கும்போது பதிலளிக்க 2 வார அவகாசம் கோருகின்றனர். தற்போது இந்த அரசாங்கத்திடம் பதில்கள் மாத்திரமன்றி வாய்மொழிக் கூற்றுக்கள்கூட இல்லை. புதுமையான மௌனம் காத்துக் கொண்டிருக்கின்றனர். தேர்தல் காலத்தில் பட்டதாரிகள் குறித்த புள்ளிவிபரங்களை இவர்கள் நன்றாகத் தயாரித்து வைத்திருந்த போதிலும், தேர்தலின் பின்னர் அரசாங்கம் பட்டதாரிகளை மறந்துவிட்டது. சமகாலத்தில் ஜனாதிபதியையோ, பிரதமரையோ அல்லது அரசாங்கத்தின் அமைச்சர்களையோ இவர்களால் சந்திக்கக்கூட முடியாத நிலை காணப்படுகின்றது. இவர்களுக்கு இப்போதாவது வேலைவாய்ப்புகளைப் பெற்றுக் கொடுங்ககள் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு கோரிக்கை விடுத்தார்.
வேலையில்லாப் பட்டதாரிகள் குறித்து IMF அறிந்திருந்தாலும், அரசாங்கத்திற்கு அது பற்றித் தெரியாதாம்.
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) அறிக்கையின்படி, இடைநிலைக் கல்விக்குப் பிந்தைய கல்வி கற்ற 15-24 வயதுக்குட்பட்டவர்களில் அதிகளவான வேலையின்மை விகிதம் நமது நாட்டில்தான் காணப்படுகின்றது. அது 43% சதவீதமாகும். IMF இந்தத் தரவுகளை அறிந்திருந்தும் அரசாங்கத்திற்கு இது பற்றித் தெரியாமல் இருப்பது ஆச்சரியமான விடயமாக காணப்படுகின்றது. இது ஒரு பாரிய பேரழிவாகும். இனியாவது இந்த மோசமான அரசியலிலிருந்து விலகி பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்குமாறு அரசாங்கத்தைக் கேட்டுக்கொள்கிறேன் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
This post was created with our nice and easy submission form. Create your post!

GIPHY App Key not set. Please check settings