இலங்கையில் உள்நாட்டுப் போர் முடிவடைந்து பதினேழு ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், மோதலினால் நேரடியாகப் பாதிக்கப்பட்ட மக்கள் இன்னும் அதன் வடுக்களில் இருந்து மீள முடியாத துயரமான நிலையில் வாழ்ந்து வருகின்றனர் என்று தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் மார்க் ஆண்ட்ரே பிராஞ் அவர்களிடத்தில் கையளித்துள்ள கடிதத்திலேயே மேற்கண்டவாரு அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அக்கடித்ததில் அவர் தெரிவித்துள்ளதாவது –
இடம் பெயர்வு, வாழ்வாதார இழப்பு, சொத்துரிமை மறுப்பு மற்றும் சமூக சீர்குலைவு போன்றவற்றை எதிர்கொண்ட இம்மக்களின் அடிப்படை உரிமைகள் இதுவரை முழுமையாக மீள வழங்கப்படவில்லை. இது தேசிய நல்லிணக்கம் மற்றும் ஜனநாயக ஆட்சி தொடர்பில் தீவிரமான கேள்விகளை எழுப்புகிறது.
தீர்க்கப்படாமல் தொடரும் இவ்வாறான பிரச்சினைகளில் ஒன்றான, முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு அல்லது மரிடைன்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கேப்பாப்புலவு கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான காணிகள் தொடர்ந்தும் இராணுவ ஆக்கிரமிப்பில் இருப்பது தொடர்பில் தங்களது அவசர கவனத்தை ஈர்க்க விரும்புகிறேன். குறித்த காணிகளை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
கேப்பாப்புலவு என்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த மூதாதையர் நிலமாகும். இங்கு மக்கள் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக வாழ்ந்து வந்ததுடன், தங்களது பாரம்பரியம், கலாசாரம், கலை மற்றும் இலக்கியம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு தமது வாழ்க்கையையும் வாழ்வாதாரத்தையும் கட்டியெழுப்பியுள்ளனர்.
இத்தகைய அத்தியாவசிய காணிகளை இராணுவம் தொடர்ந்தும் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, மக்களின் அன்றாட அமைதியான வாழ்க்கையை முற்றாக சீர்குலைத்துள்ளது.
கேப்பாப்புலவு பகுதியில் 62 தனிநபர்களுக்குச் சொந்தமான மொத்தம் 171 ஏக்கர் காணிகள் இலங்கை இராணுவத்தின் 59ஆவது காலாட்படைப் பிரிவின் கட்டுப்பாட்டில் தொடர்ந்தும் உள்ளன.
இதில்,59.5 ஏக்கர் மீள்குடியேற்றக் காணிகள்,100 ஏக்கர் தென்னைத் தோட்டக் காணிகள்,11.5 ஏக்கர் தனியார் விவசாயக் காணிகள் அடங்குகின்றன.
மேலும், கேப்பாப்புலவு G.T.M. பாடசாலை, புனித அந்தோனியார் தேவாலயம், மரிடைன்பற்று பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் (MPCS) கேப்பாப்புலவு கிளை, கேப்பாப்புலவு கல்லடி இந்து மற்றும் கிறிஸ்தவ மயானங்கள், கேப்பாப்புலவு விளையாட்டுக் கழக மைதானம், பொது மண்டபம் மற்றும் சமூக நிலையம் உள்ளிட்ட அத்தியாவசிய சமூக கட்டமைப்புகளும் இந்த மூதாதையர் நில எல்லைக்குள் அமைந்துள்ளன.
தற்போது அங்கு நிலைகொண்டுள்ள இராணுவத்தினர், பொதுமக்களுக்குச் சொந்தமான காணியில் பௌத்த விகாரையொன்றை அமைத்துள்ளதுடன், உள்ளூர் மக்களின் முக்கிய வாழ்வாதாரமாக விளங்கும் தென்னை மரங்களின் விளைச்சலை விற்பனை செய்து வருமானமும் ஈட்டுகின்றனர். இது இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பாதிக்கும் நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.
தங்களுக்குச் சொந்தமான காணிகளை மீளப் பெற்றுக்கொள்ளும் நோக்கில், கேப்பாப்புலவு மக்கள் 2017 மார்ச் 1ஆம் திகதி முதல் 2020 மார்ச் 15ஆம் திகதி வரை 1,111 நாட்கள் தொடர்ச்சியான அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன் பின்னர், முதல் கட்டமாக ஒரு பகுதி காணிகள் விடுவிக்கப்பட்டதுடன், மீதமுள்ள காணிகள் ஆறு மாதங்களுக்குள் கையளிக்கப்படும் என அரசாங்கம் உறுதியளித்ததை நம்பி, நல்லெண்ண அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.
எனினும், அந்த உறுதி வழங்கப்பட்டு ஆறு ஆண்டுகளுக்கும் மேலாகியும் மீதமுள்ள காணிகள் இதுவரை விடுவிக்கப்படவில்லை. இது ஆட்சியாளர்கள் மீதான மக்களின் நம்பிக்கையின்மையை மேலும் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், தங்களது பூர்வீக காணிகளை மீட்டெடுக்கும் நோக்கில் கேப்பாப்புலவு மக்கள் 2026 ஜூன் 24ஆம் திகதி முதல் மீண்டும் தொடர் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
இவ்வளவு முக்கியமான நிலைமை நிலவுகின்ற போதிலும், காணிகளை விடுவிப்பது தொடர்பில் அரசாங்கத்திடமிருந்து இதுவரை எந்தவொரு சாதகமான தீர்மானமோ அல்லது உத்தியோகபூர்வ அறிவிப்போ வெளியாகாதது கவலையளிக்கிறது.
மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்
1. இந்த காணிகளை விடுவிப்பது தொடர்பில், காணி உரிமையாளர்கள் 47 பேரின் கையொப்பங்களுடன் கூடிய கடிதமொன்று 2026.06.04 அன்று இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் ஜனாதிபதி மேன்மைதங்கிய அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு அனுப்பப்பட்டது. (பிரதி இணைக்கப்பட்டுள்ளது.)
2. அதனைத் தொடர்ந்து, AP/MU/Sin.L/Gen/2026 என்ற இலக்கத்தைக் கொண்ட 2026.07.28 திகதியிட்ட கடிதமொன்றையும் நான் ஜனாதிபதி மேன்மைதங்கிய அநுர குமார திசாநாயக்க அவர்களுக்கு அனுப்பியிருந்தேன். (பிரதி இணைக்கப்பட்டுள்ளது.)
மேலும், 2026.08.06 அன்று இலங்கை நாடாளுமன்ற அமர்வின்போது கேப்பாப்புலவு காணிகளை விடுவிக்கும் பிரச்சினையை நான் நாடாளுமன்றத்தில் எழுப்பியிருந்தேன். (அறிக்கையின் பிரதி இணைக்கப்பட்டுள்ளது.)
எனினும், மேற்கொள்ளப்பட்ட இம்முயற்சிகள் தொடர்பில் இதுவரை எந்தவொரு பதிலும் கிடைக்கவில்லை என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
எனவே, கேப்பாப்புலவு மக்களின் நீண்டகால அவல நிலைக்கு நிரந்தரத் தீர்வொன்றைக் காணும் வகையில், தற்போது இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள 171 ஏக்கர் மூதாதையர் காணிகளையும் முழுமையாக விடுவித்து, அவற்றை உரிய காணி உரிமையாளர்களிடம் மீளக் கையளிப்பதை உறுதி செய்வதற்காக தாங்கள் தலையிட்டு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்றும் தமிழ் அரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings