in

பிரஜா சக்தி திட்டத்திற்கு பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் பாராட்டு

கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில மற்றும் இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் ஆகியோருக்கு இடையிலான சந்திப்பு  அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது.

தற்போதைய அரசாங்கத்தின் கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயற்பாடுகள், வறுமையை ஒழிப்பதற்காக முன்னெடுக்கப்படும் திட்டங்கள் மற்றும் முன்மொழியப்பட்டுள்ள புதிய அரச சார்பற்ற நிறுவனங்களின் பதிவு மற்றும் கண்காணிப்பு சட்டம் தொடர்பில் கருத்துப் பரிமாற்றம் இந்தச் சந்திப்பில் இடம்பெற்றது.

அமைச்சின் கீழ் இயங்கும் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய செயலகத்தின் ஊடாக மாற்றுத்திறனாளி சமூகத்திற்காக முன்னெடுக்கப்படும் திட்டங்கள் குறித்தும், முதியோர் செயலகத்தின் ஊடாக முதியோர் சமூகத்தைப் பராமரிப்பதற்கும் அவர்களுக்கு சிறந்த வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுப்பதற்கும் முன்னெடுக்கப்படும் புதிய திட்டங்கள் குறித்தும் அமைச்சர் கலாநிதி உபாலி பன்னில விரிவாக விளக்கமளித்தார்.

அத்துடன், முறைசாரா துறைகளில் ஈடுபட்டுள்ள சுமார் 5.6 மில்லியன் மக்களுக்காக நடைமுறைப்படுத்தப்படும் ஓய்வூதியத் திட்டங்கள் உள்ளிட்ட சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் தொடர்பிலும் அமைச்சர் விளக்கமளித்தார்.

‘அஸ்வெசும’ நலன்புரி உதவிகளைப் பெறும் மக்களை சார்ந்திருக்கும் மனநிலையிலிருந்து விடுவித்து அவர்களை வலுவூட்டுவதற்காக சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் வலுவூட்டல் திட்டங்கள் தொடர்பிலும் இதன்போது விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், 25 பில்லியன் ரூபாய் முதலீட்டில் நடைமுறைப்படுத்தப்படும் அரசாங்கத்தின் பிரதான வறுமை ஒழிப்பு திட்டமான “பிரஜா சக்தி” இயக்கத்தின் நோக்கங்கள், செயற்பாடுகள் மற்றும் தற்போதைய முன்னேற்றம் தொடர்பிலும் அமைச்சர் எடுத்துரைத்தார்.

நாட்டின் அனைத்து துறைகளிலும் மாற்றத்தை ஏற்படுத்துவது அரசாங்கத்தின் பிரதான நோக்கமாகும் என தெரிவித்த அமைச்சர், இதற்காக சமூக, பொருளாதார, கலாசார மற்றும் அரசியல் ரீதியில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

இதன் காரணமாக அரச சார்பற்ற நிறுவனங்களின் துறையும் மாற்றத்திற்குத் தயாராக வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அரச சார்பற்ற நிறுவனங்களின் பதிவு மற்றும் கண்காணிப்பு தொடர்பான புதிய சட்டம் இந்தச் செயற்பாட்டின் ஆரம்பகட்ட நடவடிக்கையாகும் எனவும், அரச சார்பற்ற நிறுவனங்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை கருத்திற்கொண்டு, சட்டமூலத்தில் பாதகமான பிரிவுகள் காணப்பட்டால் அவற்றை திருத்துவதற்கு அரசாங்கம் தயாராக இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

இதற்காக உபகுழுவொன்றை நியமிப்பதற்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பான தேசிய செயலகம் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

அனைத்து தரப்பினரினதும் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை கருத்திற்கொண்டு, நாட்டுக்கும் மக்களுக்கும் அனைத்து துறைகளின் முன்னேற்றத்திற்கும் பயனளிக்கும் வகையில் புதிய சட்டமூலத்தை சமர்ப்பிப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு எனவும் அவர் வலியுறுத்தினார்.

இலங்கையின் அபிவிருத்திக்காக தற்போதைய அரசாங்கம் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள் மற்றும் வறுமையை ஒழிப்பதற்கான தேசிய திட்டமான “பிரஜா சக்தி” திட்டம் குறித்து பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் பாராட்டு தெரிவித்தார்.

வறுமை ஒழிப்பு நடவடிக்கைகளிலும் நாட்டின் அபிவிருத்தி செயற்பாடுகளிலும் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

பல்வேறு சவால்களுக்கு மத்தியில் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் மேற்கொண்டு வரும் முயற்சிகளையும் உயர்ஸ்தானிகர் பாராட்டினார்.

இந்தச் சந்திப்பில் அரச சார்பற்ற நிறுவனங்களுக்கான தேசிய செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் சந்திரரத்ன விதானகே மற்றும் பணிப்பாளர் லசந்தமாலா முஹந்திரம் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

அனோஜனை மன்னியுங்கள் !அதுதான் நபியின் இஸ்லாம் !

கேப்பாப்புலவு காணிகளை விடுவிக்க சிறீதரன் ஐ.நா.விடம் கோரிக்கை