in

மோசமான வானிலையை எதிர்கொள்ள புதிய திட்டம் அவசியம்: சஜித்

வானிலை

*மிக மோசமான வானிலை மற்றும் காலநிலை மாற்றங்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்கக்கூடிய திட்டமொன்றை வகுப்பது காலத்தின் தேவையாகும்*. எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச

வானிலை மற்றும் காலநிலை நிலவரங்கள் திடீரென மாறுபடுவதாலும், ஒரு பிரதேசத்தில் வறட்சியும் மற்றொரு பிரதேசத்தில் கனமழையும் ஏற்படுவதால் மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு ஏற்படும் எதிர்மறையான தாக்கங்கள் குறித்து ஒரு நாடாக நாம் எப்போதுமே கூடிய அவதானத்துடனும் ஆர்வத்துடனும் ஆராய்ந்து பார்க்க வேண்டும். பல நிபுணர்களின் கருத்துகளுக்கமைய எல்நினோ மற்றும் லா நீனா நிகழலாம் அல்லது நிகழாமல் போகலாம் என்ற கணிப்பும், நிச்சயமற்ற தன்மையும் நிலவுவதனால், மோசமான சூழ்நிலையொன்று ஏற்படும் என்ற அடிப்படையில் திட்டங்களை வகுப்பது மிகவும் பொருத்தமானது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பேராசிரியர் எல். எம். அபேவிக்ரம மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரின் இணைத் தலைமையில் இயங்கும் இலங்கை காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தில் உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். இந்நிகழ்வில் பேராசிரியர் எல். எம். அபேவிக்ரம அவர்களால் கலந்துகொள்ள முடியாமல் போனதால், இலங்கை காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தின் பதில் இணைத் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் லால் பிரேமநாத் கலந்து கொண்டார்.

இலங்கை காலநிலை பற்றிய பாராளுமன்ற ஒன்றியம் ஆரம்பத்திலிருந்தே எல்நினோ (El Niño) மற்றும் லா நீனா (La Niña) நிலவரங்கள் குறித்து கணிப்புகளை வெளியிட்டன. எல்நினோ, லா நீனா, ENSO மற்றும் இந்தியப் பெருங்கடல் இருதுருவ மாற்றம் (Indian Ocean Dipole – IOD) ஆகிய 4 பிரதான காரணிகளால் ஏற்படக்கூடிய தாக்கங்கள் குறித்து ஒரு நாடாக மிகுந்த விழிப்புணர்வுடனும் அவதானத்துடன் நாட்டில் தயார்நிலையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

🟩 தற்போது எல்நினோ, லா நீனா உலகளாவிய ரீதியில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எல்நினோ மற்றும் லா நீனா நிலவரங்களால் ஏனைய நாடுகளில் ஏற்படும் தாக்கங்களைப் பார்க்கும்போது, இந்தியாவில் பருவமழை வீழ்ச்சியடைவதனால் அந்நாட்டின் விவசாயத்திற்கு எதிர்மறையான தாக்கம் ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவிலும் வறட்சி காலம் மிக நீண்ட நாட்களுக்கு நீடித்ததோடு, காட்டுத்தீயும் பரவியதால் கடுமையான அழிவுகள் ஏற்பட்டன. பெரு (Peru) நாட்டில் 12 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் இந்த எல்நினோ, லா நீனா தாக்கத்தால் பாதிக்கப்படக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. நேபாளத்திலும் அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தால் பாரிய வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும் சேதம் ஏற்பட்டன என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டிக்காட்டினார்.

🟩 எல்நினோ, லா நீனா தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய அனைத்துத் துறைகள் குறித்தும் நாம் சிந்திக்க வேண்டும்.

இந்த நிலவரங்கள் குறித்து முன்கூட்டியே தகவல்களைப் பெற்று, அபாய நிலை உருவாகும்போதே எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைத் தீர்மானித்துக் கொள்ள வேண்டும். இந்த நிலவரத்தால் நீர் வளங்களுக்கும் நீர்நிலைகளுக்கும் ஏற்படும் தாக்கம், குடிநீர், பாசன நீர், சூழலுக்குத் தேவையான நீர், மின் உற்பத்திக்கான நீர் என அனைத்துத் துறைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். விவசாயம் மற்றும் உணவு பாதுகாப்பு குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். வறட்சி மற்றும் மண்சரிவு நிலைகள் கூட உருவாகலாம் என்பதால் மனிதர்களுக்கு ஏற்படக்கூடிய ஆபத்தான தாக்கங்களை முகாமைத்துவம் செய்து கொள்ளத் தேவையான முன்கூட்டிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

🟩 எல் நினோ, லா நீனாவை எதிர்கொள்ள அனைத்துத் தரப்பினரும் தயாராக வேண்டும்.

மீன்பிடித் தொழில் மற்றும் கடலோரச் சமூகம் எதிர்கொள்ளும் நிலவரங்கள், மின் உற்பத்தி போன்ற விடயங்கள், வனஜீவராசிகள் துறைக்கு ஏற்படக்கூடிய சேதம் மற்றும் பல்லுயிர்ப் பெருக்கத்திற்கு ஏற்படும் தாக்கம் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். எல்நினோ, லா நீனா, ENSO மற்றும் இந்தியப் பெருங்கடல் இருதுருவ மாற்றம் (IOD) போன்ற நிலவரங்களால் நாட்டிற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளும், சேதங்களும் மிக மோசமாகவே அமையும். பல நிச்சயமற்ற தன்மைகள் உருவாவதால் ஒரு நாடாக அரசாங்கம், அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூகம் இந்த நிலவரங்களை எவ்வாறு எதிர்கொள்வது என்று சிந்திக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

🟩 புதிய அனர்த்த முகாமைத்துவ முறைமையொன்று நாட்டிற்கு அவசியமாகும்.

நாட்டில் இதுவரை காணப்பட்டு வரும் அனர்த்த முகாமைத்துவக் கட்டமைப்பு, முறைமை அல்லது வேலைத்திட்டம் புதிய சவால்களை எதிர்கொள்ளப் போதுமானதாக இல்லை. புதிய முறைமைகள் மற்றும் பொறிமுறைகள் குறித்து சிந்தித்து ஏதேனுமொரு ஒருங்கிணைப்பினூடாகப் பதிலளிப்பது போன்றே, முன்னாயத்த நடவடிக்கைகளுக்கும் முன்னுரிமை வழங்க வேண்டும். இந்த முன்னாயத்தத்தினூடாக சேதத்தைக் குறைக்கும் செயல்திட்டத்திற்குச் செல்ல வேண்டும். இது தொடர்பாக இந்தியாவின் ஒடிசா மாநிலத்தின் அனர்த்த முகாமைத்துவத்தை ஒரு உதாரணமாகக் கொள்ள முடியும். ஒரு நாடாக நாம் புதிய பொறிமுறையை நோக்கி நகர வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் யோசனை தெரிவித்தார்.

UNDP அறிக்கையினூடாக பல் பரிமாண வறுமை (Multidimensional Poverty) அடையாளம் காணப்பட்டுள்ளது. 2 வருடங்களுக்கு முன்னர் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுக்கின்றது என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

பேராசிரியர் ரத்னசிரி பிரேமதிலக்க, ஐக்கிய நாடுகள் சபையைப் பிரதிநிதித்துவப்படுத்தி வாகீஷா பெரேரா, ரொபர்ட் ஒலிவர், கலாநிதி புத்திக ஹப்புஆரச்சி, உவின்சன் ஞாநதீபன், கலாநிதி வீரகோன் மற்றும் நளின் முனசிங்க உள்ளிட்ட பல நிபுணர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

டிட்வா சூறாவளிக்குப் பின் மலைநாட்டு ரயில் சேவை மீண்டும் ஆரம்பம்

மலையக தமிழர்களை இழிவுபடுத்திய கருத்துக்கு ஜீவன் தொண்டமான் கண்டனம்