கிராமிய அபிவிருத்தி, வறுமை ஒழிப்பு மற்றும் சமூகப் பங்கேற்பை அடிப்படையாகக் கொண்ட தென் கொரியாவின் முக்கியமான அபிவிருத்தி இயக்கமான “சேமவுல் உந்தொங்” (Saemaul Undong) தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அந்த அமைப்பினால் இலங்கையில் முன்னெடுக்கப்படும் கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடும் மாநாடு நேற்று (15) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்த மாநாடு கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சர் டொக்டர் உபாலி பன்னில மற்றும் பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன ஆகியோரின் தலைமையில் இடம்பெற்றது.
தென் கொரியாவின் கிராமியப் பகுதிகளில் மக்களின் வாழ்க்கைத் தரம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கில் 1970ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட “சேமவுல் உந்தொங்” அமைப்பு, தென் கொரியா இன்று அடைந்துள்ள பொருளாதார முன்னேற்றத்திற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கிய அமைப்பாகும்.
இது தென் கொரியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க கிராமிய அபிவிருத்தி இயக்கமாக மட்டுமன்றி, “Global Saemaul Undong” ஊடாக தனது அனுபவங்களையும் அறிவையும் ஏனைய அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுடன் பகிர்ந்து கொள்வதற்கும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.
இதன் அடிப்படையில், 2014ஆம் ஆண்டு முதல் இலங்கையிலும் தெரிவுசெய்யப்பட்ட சில மாவட்டங்களில் பல்வேறு கிராமிய அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. இதன்படி, இரத்தினபுரி மற்றும் நுவரெலியா போன்ற மாவட்டங்களில் காளான் வளர்ப்பு, நாய் மிளகாய் பயிர்ச்செய்கை மற்றும் அதனுடன் தொடர்புடைய பெறுமதி சேர்க்கப்பட்ட உற்பத்திகள், ஆயத்த ஆடை உற்பத்தி உள்ளிட்ட திட்டங்களுக்கு இயந்திர உபகரணங்கள், தொழில்நுட்ப அறிவு மற்றும் சந்தை வாய்ப்புகளை அறிமுகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு வழிகளில் “சேமவுல் உந்தொங்” அமைப்பு பங்களிப்பு செய்துள்ளது.
இங்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் டொக்டர் உபாலி பன்னில, “சேமவுல் உந்தொங்” அமைப்பு மிகவும் பெறுமதியான கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு கட்டியெழுப்பப்பட்ட இயக்கம் எனத் தெரிவித்தார்.
அந்த அமைப்பிடம் காணப்படும் அனுபவங்களையும் அறிவையும் இலங்கையின் வறுமை ஒழிப்பு திட்டத்தில் நடைமுறை ரீதியாகப் பயன்படுத்துவதன் மூலம், வறுமை ஒழிப்பு செயற்பாடுகளை விரைவுபடுத்த முடியும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
உலகின் அபிவிருத்தி அடைந்து வந்த நாடுகளை அபிவிருத்திப் பாதைக்கு கொண்டு செல்வதற்காக நடைமுறைப்படுத்தப்பட்ட வறுமை ஒழிப்புத் திட்டங்களில் காணப்பட்ட சாதகமான அம்சங்களைப் பெற்றுக்கொண்டு, இலங்கையின் பொருளாதார மற்றும் சமூக நிலைமைகளுக்கு ஏற்ற வகையில் “பிரஜா சக்தி” தேசிய வறுமை ஒழிப்பு திட்டம் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கிராமிய அபிவிருத்தி மற்றும் வறுமை ஒழிப்பு ஆகியவை தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய இலக்குகளில் ஒன்றாகும் என்றும் அவர் கூறினார். எனவே, அபிவிருத்தி அனுபவங்களை வெறுமனே முன்னோடித் திட்டங்களுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தாமல், தேசிய மட்டத்தில் முழு நாட்டிற்கும் பயனளிக்கும் வகையில் நடைமுறைப்படுத்துவது மிகவும் முக்கியமானது என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.
“பிரஜா சக்தி” தேசிய வறுமை ஒழிப்பு திட்டம் ஜனாதிபதியின் தேசிய தலைமைத்துவத்தின் கீழ், அனைத்து அமைச்சுக்களையும் ஒருங்கிணைத்து, பங்கேற்பு அணுகுமுறையுடன் நடைமுறைப்படுத்தப்படும் திட்டமாகும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.
கிராம மட்டத்தில் அமைக்கப்படும் சமூக அபிவிருத்திச் சபைகளில் பெண்கள், இளைஞர்கள், கிராமத்தின் புத்திஜீவிகள், வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள், அரச அதிகாரிகள் மற்றும் அரசியல் பிரதிநிதிகள் ஆகியோரை இணைத்துக்கொண்டு, கீழ்மட்டத்திலிருந்து மேல்மட்டத்திற்கு செல்லும் பொறிமுறையின் ஊடாக கிராமிய அபிவிருத்தி திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், திட்டங்களின் வெளிப்படைத்தன்மை மற்றும் முறையான செயற்பாட்டை உறுதி செய்வதற்காக சமூகத் தணிக்கை முறையும் பயன்படுத்தப்படும் என அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வில் பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், ஊவா மற்றும் சப்ரகமுவ மாகாண ஆளுநர்கள், இலங்கைக்கான தென் கொரிய தூதுவர், கிராமிய அபிவிருத்தி, சமூகப் பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் செயலாளர் சம்பத் மந்திரிநாயக்க, பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆலோக்க பண்டார, அமைச்சுக்களின் மேலதிக செயலாளர்கள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள், கிராமிய அபிவிருத்திப் பணியகம் மற்றும் “பிரஜா சக்தி” தேசிய செயலக அதிகாரிகள், “சேமவுல் உந்தொங்” அமைப்பின் தலைவர் திரு. லீ யங்-சியொக் உள்ளிட்ட அந்த அமைப்பின் அதிகாரிகள் மற்றும் பெருந்தொகையானோர் கலந்துகொண்டனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings