in

தீவட்டிப்பட்டி நிகழ்வுகளை ‘உண்மையறியும் குழாம்’ எப்படி பார்க்கிறது?

தலையங்கம்

|சேலம் தீவட்டிபட்டி மாரியம்மன் கோவில் ஆலய நுழைவு மறுப்பும் அதைத்  தொடர்ந்து நடைபெற்ற கலவரங்கள் குறித்தும் முற்போக்கு, சனநாயக இயக்கங்களின் கள ஆய்வு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்கள். மருது பாண்டியன் ஏற்பாட்டில் தோழர் கொளத்தூர் மணி (தலைவர் திராவிடர் விடுதலைக் கழகம்), தோழர் கண. குறிஞ்சி, ஒருங்கிணைப்பாளர், சமூக நீதிக் கூட்டமைப்பு, தோழர் மருதுபாண்டியன், (சோசலிச மையம்), தோழர் தமயந்தி (தமிழ்நாடு முற்போக்குப் பெண் வழக்கறிஞர்கள் சங்கம்), தோழர் வளர்மதி, (SUMS)

, தோழர் மாரியப்பன் (தமிழ்த்தேச மக்கள் முன்னணி),  தோழர் கோ.சீ. மணி, தோழர் மூர்த்தி, (தலைவர், நல்வழிக்கழகம்), தோழர் அருண்சோரி (க.க. மா-லெ-மா), தோழர் கண்ணன் ஆகியோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

சேலம் மாவட்டம் தீவட்டிப்பட்டி பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை ஒட்டி மே 2/2024 அன்று நடந்த சாதிய வன்முறைகளைத் தொடர்ந்து முற்போக்கு, சனநாயக அமைப்பு தோழர்கள் மே 11 ஆம் நாளன்று நேரடியாகச் சம்பவ இடத்திற்குச் சென்று நாச்சினாம்பட்டி ஆதிதிராவிடர் குடியிருப்பு மக்களையும் தீவட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்களையும் தீவட்டிப்பட்டி காவல் நிலைய ஆய்வாளர் (Investigation Officer – I.O.)  திரு.ஞானசேகரன் அவர்களையும் சந்தித்ததன் அடிப்படையில் இந்த ஆய்வறிக்கை முன்வைக்கப்படுகிறது.

கோவில் நுழைவில் தீண்டாமை, காவல்துறையின் பக்க சார்பு நிலை, தடியடி, கல்வீச்சு, வழக்குகள் இப்படி ஒரு கலவரமாக சித்தரிக்கப்படும் சூழலில்,   தீவட்டிப்பட்டி கலவரம் குறித்த உண்மை அறியும் குழுவின் பரிந்துரைகள் என்ன என்று பாப்போம்.

1.தீவட்டிப்பட்டி கலவரத்தில் கைது செய்யப் பட்டவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும்.

2.ஆதிதிராவிடர் பகுதியில் தேவையில்லாமல் பலர் மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளன. அவை திரும்பப் பெறப்பட வேண்டும். எடுத்துக்காட்டாக பெருமாயி மகன் அருண்குமார் (வயது 23), குணா (21) தா/பெ பழநியம்மாள் போன்ற பல அப்பாவி இளைஞர்கள் கலவரத்தில் காயம் அடைந்ததோடு ஆத்தூர் சிறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர்.

3.காவல் துறை தாக்குதலால் காயம்பட்டு இருப்பவர்களுக்கு  உரிய தரமான மருத்துவ சிகிச்சை அரசு பொறுப்பில் வழங்கப்பட வேண்டும்.

4.காவல்துறை கண்காணிப்பை அதிகரிப்பதோடு, தொடர்ந்து இரவு நேரத்தில் வந்து இளைஞர்களைக் கைது செய்து கொண்டு செல்லும் நடைமுறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

5.தீவட்டிப்பட்டியில் அமைதி திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும்.

6.சக்தி மாரியம்மன் கோயில், தமிழ்நாடு அறநிலைத்துறையின் கீழ் இருந்தாலும் வன்னியர்கள் தங்களது ஆதிக்கத்தில் அதைக் கையகப்படுத்திக் கொண்டிருப்பது ஏற்கத் தக்கதல்ல. எனவே அறநிலையத்துறை இதில் தலையிட்டு கோயிலைத் தனது பொறுப்பின் கீழ் கொண்டுவர வேண்டும். மேலும் கோயில் நிர்வாகக் குழுவில் ஆதிதிராவிட மக்களுக்கு உரிய பிரதிநித்துவம் தரப்பட வேண்டும்.

7.சக்தி மாரியம்மன் கோயில் அறநிலையத் துறையின் கீழ்தான் உள்ளது என்பது பற்றிய அறிவிப்புப் பலகை, கோயிலின் எந்தப் பகுதியிலும் வைக்கப்படவில்லை. அது சரி செய்யப்பட வேண்டும்.

8.சக்தி மாரியம்மன் கோயில் பூசாரி பெரும்பான்மைச் சமூகத்தைச் சார்ந்தவராக இருப்பதை மாற்றி, சுழற்சி முறையில் அமைக்க வேண்டும்.

9.தீவட்டிப்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில் மாணவர்களிடையே கஞ்சா போன்ற போதைப் பொருள் பயன்பாடு அதிக அளவு இருப்பதாக மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். அதை முற்றிலும் ஒழித்துக்கட்ட தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

10.இந்தக் கலவரத்தில்  பாட்டாளி மக்கள் கட்சியைச் சார்ந்த ஆட்டை யாம்பட்டி ஒன்றியச் செயலாளர் வெங்கடேசன் என்பவருக்கு மிக முக்கிய பங்கு இருப்பதாகத் தெரிய வருகிறது. அவர் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும்.

11.ஆதிதிராவிட சமுதாயத்திலுள்ள பெண்கள் பலருக்கு 100 நாள் வேலை தான் வாழ்வாதாரமாக உள்ளது. ஆனால் அவர்கள் வேலைக்குச் செல்வதற்கு அஞ்சி வீடுகளிலேயே முடங்கிக் கிடக்கின்றனர். அவர்களிடைய நம்பிக் கையை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

12.காவல் துறை பக்கச்சார்பாக நடந்து கொண்டுள்ளது மிகத் தெளிவாகத் தெரிகிறது. பெண்களையும்,  சிறுவர்களையும் கடுமையாகத் தாக்கிக் காயப்படுத்தி உள்ளனர். குறிப்பாக ஆதிதிராவிட வகுப்பைச் சேர்ந்த ராணி (38) க/பெ  ராஜாமணி என்பவரைக் குளியலறையிலிருந்து இழுத்துக் கொண்டுவந்து தாக்கி உள்ளனர். இத்தகைய அராஜகச் செயலில் ஈடுபட்ட காவலரைக் கண்டறிந்து அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

13.சிசிடிவி காமிரா மற்றும் பாதிக்கப் பட்டவர்கள் தங்களது செல்பேசியில் எடுத்த படங்கள் ஆகியவற்றைப் பரிசீலித்து தவறு செய்த குற்றவாளிகள் மீது பக்கச் சார்பின்றி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.சிசிடிவி காமிராவில் ஒருவேளை படங்கள் இல்லாவிட்டால், அதற்கு பொறுப்பாக உள்ள காவல் துறையினர் மீது நீதிமன்றத் தீர்ப்புகளின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

14.பாதிக்கப்பட்ட ஆதிதிராவிடர்களுக்கு இழப்பீடு வழங்குவதோடு, தீக்கிரையாக்கப்பட்ட கடைகளுக்கும் நிவாரணம் வழங்கப்பட வேண்டும்.

15.கோயில் விழாவினை எதிர்வரும் காலத்தில் அறநிலையத் துறையின் கண்காணிப்பின் கீழ் நடத்த வேண்டும்.

16.ஆதிதிராவிடர் பகுதியில் இவ்வளவு கடுமையான பாதிப்பு இருந்தும் காவல்துறை அதன் அடிப்படையில் வழக்கு எதுவும் பதிவு செய்யாதது ஏற்கத் தக்கதல்ல. இனியாவது பாதிக்கப்பட்டவர் களிடமிருந்து புகார் பெற்று வழக்கு தாக்கல் செய்ய வேண்டியது காவல்துறையின் கடமையாகும்.

17.கடந்த சில ஆண்டு களாக தொடர்ச்சியாக கோவில்களில் பட்டியலின மக்கள் தங்கள் வழிபாட்டு உரிமையை வலியுறுத்தும் போதெல்லாம், அந்தக் கோயில்கள் பூட்டப் படுவதும் சீல் இடுவதும் தான் நடைமுறையாக இருந்து வருகிறது. ஆதிக்க சாதிகளைச் சார்ந்தவர்களும் தாங்கள் வழிபாடு நடத்துவதற்கு வாய்ப்பில்லை என்றாலும் சரி, பட்டியலின மக்களை அனுமதிக்காமல் இருந்தால் போதும் என்ற அவர்களின் கருத்துக்கு அது ஏற்பளிப்பதாக ஆகிவிடுகிறது.

எனவே இனி எந்த ஓர் அறநிலையத்துறை சார்ந்த கோயிலிலும், பொதுக் கோவில்களிலும் இதுபோன்ற பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமை தடுக்கப்படும் போது அரசு வன்கொடுமை தடுப்புச் சட்டத்தைப் பயன்படுத்தி வழக்குகள்  பதிவதோடு, அதற்குக் காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தமிழ்நாடு அரசு மேற்கண்ட அறிக்கையின் பரிந்துரைகளை கவனித்து நடவடிக்கை எடுக்குமா?

தெ.சீ.சு.மணி

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

தி.மலை கோயிலுக்கு சொந்தமான 1218 சதுரஅடி ஆக்கிரமிப்பு நிலம்மீட்பு

புதியவகை கொரோனா… தமிழக மக்கள் அச்சப்பட வேண்டாம்: சுகாதாரத்துறை