டொராண்டோ, கனடா —
2026 செப்டெம்பர் 27ஆம் திகதி அதிகாலை யாழ்ப்பாணம் நல்லூரில் இலங்கை பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின்போது, லெப்டினன்ட் கேணல் திலீபனின் சிலை வலுக்கட்டாயமாக அகற்றப்பட்டமைக்கு நான் கடும் கண்டனத்தைத் தெரிவிக்கின்றேன்.
“நீதிமன்ற சாட்சியமாகப் பயன்படுத்துவதற்காக” ஒரு கட்டமைப்பை கைப்பற்ற வேண்டும் என்ற மிகவும் கேள்விக்குரிய காரணத்தை முன்வைத்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை, தமிழ் மக்களின் நினைவுகூரல் மற்றும் கூட்டுத் துயரத்தை வெளிப்படுத்துவதற்கான அடிப்படை உரிமையின் மீதான நேரடி தாக்குதலாகும்.
உள்ளூர் பொலிஸ் அதிகாரிகளால் முன்வைக்கப்பட்டுள்ள காரணம், வழக்கமான சட்ட நடைமுறைகளுக்கு முரணானதாகும். நவீன நீதித்துறை அமைப்பொன்றில் சொத்து அல்லது நிர்வாகத் தகராறுகள் தொடர்பான சாட்சியங்களாக புகைப்படங்கள் மற்றும் காணொளிப் பதிவுகள் வழக்கமாகப் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு நினைவுச் சின்னத்தை நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்வது முறையான சட்ட நடைமுறை அல்ல. மாறாக, இது உள்ளூர் சமூகங்களை அச்சுறுத்துவதற்கும் அவர்களின் வரலாற்றை அகற்றுவதற்கும் மேற்கொள்ளப்பட்ட அரசியல் தூண்டுதலாகும்.
இந்த சம்பவம், போதுமான நீதித்துறை மேற்பார்வையின்றி உள்ளூர் பாதுகாப்பு கட்டமைப்பு பொறுப்புக்கூறல் இல்லாமல் செயற்படுவதாகக் கருதப்படும் நிலை குறித்து ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க இன மற்றும் மத நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதாக வழங்கிய வெளிப்படையான உறுதிமொழிகளுக்கு இந்த அரச நடவடிக்கை முற்றிலும் முரணானதாகும்.
வடக்கில் உள்ள தமிழ் வாக்காளர்களிடமிருந்து ஜனாதிபதி திஸாநாயக்க அண்மையில் குறிப்பிடத்தக்க தேர்தல் ஆதரவைப் பெற்றிருந்தார். நியாயமான இலங்கைக்கான அவரது நோக்கத்தின் மீது நம்பிக்கை கொண்டே அந்த ஆதரவு வழங்கப்பட்டது.
எனினும், திலீபனின் நினைவு தினத்தைத் தொடர்ந்து அவரது நினைவுச் சின்னம் அகற்றப்பட்டிருப்பது அந்த நம்பிக்கையை சிதைப்பதுடன், ஆழமாக வேரூன்றிய ஒடுக்குமுறை கட்டமைப்புகள் இன்னும் மாறவில்லை என்பதையும் வெளிப்படுத்துகிறது.
உலகளாவிய தமிழ் புலம்பெயர் சமூகத்தைச் சேர்ந்த அரசியல் செயற்பாட்டாளராக, இலங்கை அரசாங்கத்தை அதன் உறுதிமொழிகளுக்கு பொறுப்புக்கூறச் செய்யுமாறு கனேடிய அரசாங்கம் உள்ளிட்ட சர்வதேச சமூகத்திடம் நான் கோரிக்கை விடுக்கின்றேன்.
அரசாங்கம் தமிழ் அடையாளத்தை அழிப்பதற்கும் நினைவுகூரும் உரிமையை ஒடுக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கும் நிலையில் உண்மையான நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியாது.
ஜனாதிபதி திஸாநாயக்க தலைமையிலான நிர்வாகத்திடம் நான் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கின்றேன்:
1. அகற்றப்பட்ட நினைவுச் சின்னத்தை உடனடியாக மீள ஒப்படைப்பதுடன், இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட பொலிஸ் அதிகாரிகளுக்கு எதிராக பொறுப்புக்கூறல் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
2. வடக்கு மற்றும் கிழக்கில் பாதுகாப்புப் படைகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்தி, மேலும் பதற்றங்கள் மற்றும் அரசால் ஏற்படுத்தப்படும் பிளவுகள் உருவாகாமல் தடுக்க வேண்டும்.
3. தமிழ் மக்கள் தமது போரில் உயிரிழந்தவர்களையும் அரசியல் தலைவர்களையும் அச்சமின்றி நினைவுகூர்வதற்கான முழுமையான உரிமையை உறுதியான கொள்கைகள் மற்றும் சட்டங்களின் மூலம் உறுதிப்படுத்த வேண்டும்.
புலம்பெயர் தமிழ் சமூகம் தொடர்ந்தும் விழிப்புடன் இருக்கும். தமது உரிமைகள் மற்றும் பாரம்பரியத்தை முறையாக அழிக்கும் நடவடிக்கைகளுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்து வரும் யாழ்ப்பாணத்தில் உள்ள எமது சகோதர, சகோதரிகளுக்கு நாங்கள் முழுமையான ஒற்றுமையை வெளிப்படுத்துகின்றோம் என்று அரசியல் செயற்பாட்டாளர் ராய் சமாதானம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.



GIPHY App Key not set. Please check settings