தலையங்கம்
முதலில் குடியரசுத் தலைவர், இப்போது பிரதமர். அடுத்து முதல்வர், ஆளுநர், மத்திய அமைச்சர்கள் என்று அனைவரது கவலை மற்றும் கரிசனைக்ளை எதிர்ப்பார்க்கலாம்.
கொல்கத்தாவின் பெண் மருத் துவர் பாலியல் வன்செயலுக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதை அடுத்து பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன. இதையடுத்து நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் சிறுமிகள் தொடங்கி பெண்கள் வரையில் அவர்கள் மீதான துஷ்பிரயோகங்கள், சீண்டல்கள், வன்செயல்கள் குறித்து தொடர்ந்து செய்திகள் வருகின்றன.
எதற்கும் அஞ்சாதவர் என்று தொண்டர்களால் கொண்டாடப்படும் மம்தா பானர்ஜியும் இந்த விஷயத்தில் ஆடிப்போயுள்ளார். விசாரணை மத்திய புலனாய்வு துறை வசம் சென்றுள்ளது. நீதிமன்றங்களும் தொடர்ச்சியாக கேள்விக்கணைகளை தொடுக்கின்றன.
கொல்கத்தாவில் படித்த ஒரு பெண்ணுக்கே இப்படியான ஒரு துர்ப்பாக்கிய நிலை என்றால், கிராமங்கள் மற்றும் குக்கிராமங்களில் பின் தங்கிய நிலையில், எழுதப்படிக்கத் தெரியாத லட்சக்கணக்கான பெண்களின் நிலை என்ன என்பதே இதில் முக்கிய கேள்வி.
பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் சில அடிப்படை அம்சங்களில் இந்தியாவில் பெரும் குறைபாடு உள்ளதாகவே தோன்றுகிறது. மகளிருக்கான பாதுகாப்பு ஆரம்பக் கல்வி முதலே கற்றுக்கொடுக்கப்பட வேண்டும். பெண் பிள்ளைகளிடம் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று இருபாலாருக்கும் புகட்டப்பட வேண்டும்.
தொடர்ச்சியாக பள்ளிக்கல்வி முடியும் வரை பாலியல் சமத்துவம், சட்டம், சமூக உளவியல், மருத்துவம், மன உறுதியை வளர்ப்பது போன்ற அம்சங்கள் தொடர்ச்சியாக போதிக்கப்பட வேண்டும். தற்காப்பு கலையும் குறைந்தது ஆறாம் வகுப்பிலிருந்து தொடர்ந்து பயிற்றுவிக்கப்பட வேண்டும். பெற்றோரிடம் தைரியமாக பேசுவதற்கான தைரியம் மற்றும் பக்குவத்தையும் சிறு வயது முதலே அந்த பிள்ளைகள் கற்க வேண்டிய தேவை உள்ளது.
இதையெல்லாம் முன்னெடுக்க வேண்டுமாயின், ஆரம்ப பாடசாலை தொடங்கி மேல்நிலைப் பள்ளி வரை போதிய அளவில் பெண் ஆசிரியர்கள் இருக்க வேண்டும். அதிலும் குறிப்பாக அரசுப் பள்ளிகளில். ஆயிரக்கணக்கான ஆசிரியர் இடங்கள் நிரப்பபடாமல் இருக்கும் நிலையில், மிக முக்கியமாக பெண்களுக்கு கற்றுக்கொடுப்பட வேண்டியவற்றை கற்றுக்கொடுக்க போதிய ஆசிரியர்கள் இல்லாத நிலை அவர்களை மிகவும் பலவீனமான நிலைக்கு தள்ளும்.
வீட்டில் பெற்றோர், பள்ளியில் ஆசிரியை, இவர்களிடம் தான் பெண் பிள்ளைகள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு பேச முடியும். அந்த இரண்டிலும் குறைபாடு என்றால் அவர்களுக்கு முதற்கட்டமாக உதவ யாரும் இருக்க மாட்டார்கள்.
மாநில அரசுகள் இதை போர்க்கால அடிப்படையில் கவனத்தில் எடுக்க வேண்டும். மற்ற விஷயங்களுக்கு செலவு செய்யவும், இலவசங்களை வாரி வழங்கவும் மாநில அரசுகளால் முடியும் என்றால், ஏன் போதியளவிற்கு பெண் ஆசிரியர்கள் நியமனத்தை முன்னெடுக்க முடியாது. பெண்களுக்கு மட்டுமே என்று சிறப்பு தேர்வுகள் நடத்துவதை அரசால் சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடியும்.
இதற்கு அப்பாற்பட்டு, பள்ளி அல்லது அலுவலகத்தில் பாதுகாப்பு என்று வரும் போது 99% அது ஆடவர்களின் கைகளிலேயே உள்ளது. உரிய பெண் பாதுகாவலர்களை அரச நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் நியமிக்க அரசுகள் முன்வருவதில்லை. இதிலும் அடிப்படை பிரச்சனை போதிய ஆட்கள் இல்லாதது. காவல்துறையிலும் ஆட்பற்றாக்குறை உள்ளது. தனியார் துறையிலும் இந்த சிக்கல் உள்ளது. இதை தீர்ப்பது சுலபமானது அல்ல, ஆனால் தொழில்நுட்பம் உதவக் கூடும்.
ஒரு குறிப்பிட்ட எல்லைக்குள் வெளியாட்கள் யாரும் புகமுடியாதவாறு ஏற்பாடுகளை செய்ய முடியும். உதாரணமாக விமான நிலையத்தில் இருப்பது போன்று. பிரச்சனைகள் மற்றும் தீர்வுகளை அடுக்கிக்கொண்டே போகலாம். இவை வாசிப்பதற்கு மலைப்பாக இருந்தாலும் செய்ய முடியாத காரியங்கள் இல்லை. இப்படியான பின் புலத்தின் பிரதமர் மோதியின் கவலைகளும் எச்சரிக்கையும் வந்துள்ளது.
பெண்களைப் பாதுகாக்க நாட்டில் கடுமையான பல சட்டங்கள் இருந்தாலும், அதை ஆக்கபூர்வமாக முன்னெடுக்க வேண்டும் என்கிறார் பிரதமர். ஆனால் அது மாநில அரசுகளின் கைகளில் உள்ளது.
பெண்களுகு எதிரான வன்செயல்கள் மற்றும் அட்டூழியங்களுக்கு எதிராக எவ்வளவு விரைவாக நடவடிக்கை எடுக்கப்படுகிறதோ அவ்வளவு விரைவாக அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்கிறார் பிரதமர். உண்மை தான். ஆனால் அந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு தவறிழைத் தவர்கள் தண்டிக்கப்பட போதியளவில் நீதிமன்றங்களும் நீதிபதிகளும் தேவை. அதிலும் பெரும் பற்றாக்குறை உள்ளது. இந்திய உச்சநீதிமன்றத்தில் 83,000 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று தலைமை நீதிபதியே கூறுகிறார். ஒப்பீட்டளவில் நாட்டிலுள்ள அனைத்து நீதிமன்றங்களுலும் இது தான் நிலைமை.
பெண்களை பலவீனமாக காட்டும் திரைப்படங்களுக்கு கடுக் கிடுக்கிப்பிடி போடப்பட வேண்டும். பெண்கள் துணிச்சலாக தமது மீது கைவைப்பவர்களை துவைத்து எடுக்கும் காட்சிகள் இருந்தால், அது சமூகத்தில் கணிசமான விழிப்புனர்வை ஏற்படுத்தும். அதே போன்று இந்த விஷயத்தில் சமூக ஊடங்களுக்கும் கட்டுப்பாடு இருக்கப்பட வேண்டும். கட்டுப்படுத்தப்படாத அல்லது தணிக்கை செய்யப்படாத சமூக ஊடக பதிவுகள் மூலம் சமூகத்தில் விரும்பத்தகாத பல செயல்கள் நடைபெறுகின்றன என்று ஆய்வுகள் காட்டுகின்றன.
பெண்களை பாதுகாக்காத சமூகம் முன்னேற முடியாது என்பது உணர்ந்து அனைவருக்கும் உணர்த்தப்பட வேண்டும். இதற்கு மேல் ஒன்றும் சொல்வதற்கு இல்லை.
This post was created with our nice and easy submission form. Create your post!



GIPHY App Key not set. Please check settings