in

முத்தமிழ் முருகன் மாநாடு -ஆன்மீகமா அல்லது அரசியலா?

தலையங்கம்

சிவா பரமேஸ்வரன்

கடந்த சனி, ஞாயிறு ஆகிய இருநாட்கள் பழநியில் “அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு-2024” சிறப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இந்த மாநாடு “முருகப் பெருமானுக்கு பெருமையையும் புகழையும் சேர்த்துள்ளது”.

அதாவது இரண்டு நாள் மாநாடு நடத்தி இறைவனுக்கு புகழும் பெருமையும் சேர்க்கப் பட்டுள்ளது என்று தான் இதை புரிந்துகொள்ள வேண்டியுள்ளது. இது ஏதோ எனது தனிப்பட்ட கருத்து என்று கருதினால், அதற்கு நான் பொறுப்பல்ல. இந்த கருத்து பரவலாக உள்ளது, சமூக ஊடகங்கள் மற்றும் பொதுவெளியில் பேசுபொருளாகவும் உள்ளது.

முருகன், ஸ்கந்தன், கார்த்திகேயன், சுப்பிரமணியன், வள்ளி மணாளன், பாபா பாலக்நாத், சிவகுமாரன், கந்தன், கடம்பன், கதிர்வேலன், வேலாயுதன், ஞானபண்டிதன், செந்திலாண்டவன், சேனாதிபதி, மயிலன் என்று பல பெயர்களில் அந்த ஈசன் மகன் காலங்காலமாக இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகெங்கும் அறியப்படுகிறார்.

தமிழ் இலக்கியங்களில் முருகனை எங்கும், எதிலும் காணலாம். அவ்வகையில் அந்த சேவற்கொடியோனை தமிழர்கள் ஆயிரம் ஆண்டுகளாக அறிவார்கள். அழகு, அறிவு, ஆற்றல், அன்பு என்று அந்த பழநி ஆண்டவனைப் பற்றி அடுக்கிக்கொண்டே போகலாம்.

தமிழ் இருக்கும் இடங்களிலெல்லாம் தமிழ் கடவுளின் பெருமைகள் பறைசாற்றப்படுகின்றன. அந்த மயில்வாகனனின் அரும் பெருமைகளை நாம் கூறியே உலகம் அறிய வேண்டியதில்லை.

அப்படிப்பட்ட முருகவேளுக்கு அரசியல் சாயம் பூசப்படும் செயற்பாடுகள் அண்மைக் காலங்களில் அதிகரித்து வருகின்றன. இப்போது திடீரென்று ‘முப்பாட்டன் முருகன்’ என்ற சொல்லாடல் அதிகரித்துள்ளது. அவர் தகப்பன்சாமி என்பதை அண்மைய அரசியல்வாதிகள் சொல்லி தமிழ் மக்கள் அறிய வேண்டியதில்லை.

திருப்புகழ், திருமுருகாற்றுப்படை, கந்த புராணம், கந்தர் அநுபூதி, கந்தர் அலங்காரம், கந்தர் கலிவெண்பா, ஷண்முக கவசம், வேல் விருத்தம், மயில் விருத்தம் ஆகியவை எல்லாம் தமிழ் மக்களின் மனதில் பன்னெடுங்காலமாக உள்ளவை.

கந்தசஷ்டி கவசம் இன்று அன்றாடம் பாராயணம் செய்யப்படும் வழக்கம் லட்சக்கணக்கான குடும்பங்களில் இருக்கிறது.

ஆனால், பகுத்தறிவு கொள்கையை அதாவது அடிப்படையில் இறை மறுப்பு கொள்கையைக் கொண்ட ஒரு ஆட்சியில் முன்னெப்போதும் இல்லாத வகையில் தமிழ் கடவுளைப் போற்றும் இரண்டு நாள் மாநாடு என்பது பல கேள்விகளை எழுப்புகிறது. இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கும் இந்துக்கள் வழிபடும் கடவுகளை இழிவுபடுத்தும் ஒரு போக்கு தங்குதடையின்றி தமிழ்நாட்டில் தொடருகிறது என்பது வருத்தமான விஷயம். மதம் மற்றும் நம்பிக்கை தனி நபர்கள் சார்ந்த அம்சம். அது நாட்டின் அரசியல் சாசனத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதுபெரும் முதியவர் திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமி, புலவர் கீரன் போன்ற ஆன்மீகச் சொற்பொழிவாளர்கள் முருகனின் பெருமையை அழகு தமிழில் உலகெங்கும் எடுத்துச் சென்றவர்கள். அவர்களைப் போன்றோர் முருகனை வைத்து வியாபாரம் செய்யவில்லை.

ஆனால், மிகவும் வருத்தமளிக்கும் வகையில் இன்று நமது தமிழ் கடவுள் ஒரு வர்த்தகப் பெயர் அல்லது பொருளாக மாற்றப்பட்டுவிட்டார். அந்த சிவ மைந்தன் அனைவருக்கும் பொதுவானவர். அவருக்கு இப்போது அரசியல் சாயம் பூசப்படுவது கவலையளிக்கிறது. ‘முப்பாட்டன் முருகன்’ தேர்தலின் போது தமிழ் மக்களின் வாக்குகளைப் பிரித்துவிடுவாரோ அவரை ஒரு சாரார் தமக்கே உரியவர் என்று கூறி ஏகபோக உரிமையை கைப்பற்றிவிடுவார்களோ என்ற கவலையும் உள்ளது.

ஆன்மீகத்தை அவதூறு பேசியவர்கள், இறைவனை நிந்தனை செய்தவர்கள், நான் அவரின் சீடர், இவரின் சீடர், இது அவரது மண், இவரது மண், இன்று இல்லாத பெரியவர்கள், தலைவர்களை, ஐயா, அண்ணா, அப்பா, தாத்தா, அப்பத்தா, அம்மம்மா என்று கூறும் அந்த போக்கும் இப்போது அறிய முடிகிறது. அந்த தலைவர்கள் அல்லது பெரியவர்கள் யாரும் மீண்டும் வந்து சாட்டையைக் கையில் எடுக்கமாட்டார்கள் என்ற நம்பிக்கையில் இது தொடருகிறது.

குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம் என்று வேலவன் புகழப்படும் நிலையில், உலகில் எங்கெல்லாம் மலையும் கடலும் உள்ளதோ அங்கெல்லாம் தொன்றுதொட்டு வள்ளி நாயகனின் புகழ் பரவியுள்ளது.

பழநி மாநாட்டை பாரபட்ச முறையில் சீர்தூக்கிப் பார்க்கும் போது அதில் ஆன்மீகத்தைவிட அரசியலே விஞ்சியுள்ளது என்பதைக் காண முடிகிறது. இருந்த போதிலும் தமிழக முதல்வர் இந்த மாநாடு விஷயத்தில் காட்டிய ஆர்வம் பாராட்டப்பட வேண்டும். தனிப்பட்ட முறையில் இந்துக்கள் மீது அவருக்கு ஒருவகையான காழ்ப்புணர்ச்சி உள்ளது என்ற குற்றச்சாட்டையும், விமர்சனத்தையும் களைய இந்த மாநாடு உதவக்கூடும். நேரடியான ஆன்மீகத்தை ஆதரிக்காவிட்டாலும், ஆன்மீகத்தை தொடாமல் அரசியல் செய்ய முடியாது என்பது யதார்த்தம். இது தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்ல, உலகெங்கும் உள்ள நிலை.

தமிழக அரசால் வெற்றிகரமாக நடத்தப்பட்ட இந்த ‘அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாடு’ தொடர்ச்சியாக நடைபெற வேண்டும். அது மட்டுமில்லாமல் தமிழ் கடவுள் முருகனின் தந்தை சிவபெருமான், அவனது தாய்மாமன் திருமால், அழகு தமிழில் பாசுரங்களை இயற்றிய ஆண்டாள், மாடன், கருப்பன், அய்யனார், சுடலை, மாரியம்மன், கொற்றவை போன்று தமிழர்கள் கிராமங்கள் தோறும் தொன்றுதொட்டு வணங்கும் தமிழ் மண்ணுக்கே உரிய தெய்வங்களின் சிறப்பையும் போற்றும் மாநாடுகளையும் தமிழக அரசு நடத்த வேண்டும் என்ற எண்ணம் தமிழ் மக்களிடையே பரவலாக உள்ளது.

முதல்வர் மீது தமிழ் மக்கள் மிகுந்த நம்பிக்கையுடையவர்கள் என்பதை நாம் கூறி தெரிய வேண்டியதில்லை.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

திருப்பூரில் கிருஷ்ண ஜெயந்தி அன்னதானம்

அண்ணாமலை மனநல மருத்துவரை பார்க்க வேண்டும்: ஆர்.பி.உதயகுமார்