தலையங்கம்
ஒரு அரசின் வேலை என்பது நிர்வாகம் செய்வதா அல்லது ‘சரக்கு’ விற்பது, கேபிள் டிவி நடத்துவது, உப்பு விற்பது, சிமெண்ட் தயாரிப்பது, ஜவ்வரிசி உற்பத்தி செய்வது போன்ற அம்சங்களா என்ற கேள்வி நீண்ட நாட்களாக விடை தெரியாமல் கேட்கப்படும் கேள்வியாக உள்ளது.
இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் அரசு இப்படியான வர்த்தக நடவடிக் கைகளில் ஈடுபடுகிறதா என்பதும் தெரியவில்லை. ஆனால், இந்தளவிற்கு இல்லை என்பது தான் பொதுவான புரிதலாக உள்ளது. அரசின் பணி என்பது ஊழலற்ற, திறமை வாய்ந்த நிர்வாகத்தை வழங்குவது, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலையை நம்பிக்கைக்குரிய வகையில் வைத்திருப்பது, வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவது, தரமான கல்வியை இலவசமாக அளிப்பது, அரசு மருத்துவமனைகளில் சுகாதார சேவைகள் மிக உயர்ந்த தரத்தில் இருப்பதை உறுதி செய்வது, ஓட்டை உடைசல் மற்றும் ஒழுகாத பேருந்துகளை ஓட்டுவது, தரமற்ற சாலைகள் போடப்படாமல் இருப்பதை கண்காணிப்பது என்று இந்த பட்டியலும் நீளும்.
எந்த அரசாக இருந்தாலும் சரி, அது சொந்தமாக நடத்தும் தொழிலாக இருக்கலாம் அல்லது தனியாரால் நடத்தப்படும் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் பொருட்கள் தரமாக உள்ளதா என்பதை கண்காணிப்பது தான். இதெல்லாம் புது விஷயங்கள் இல்லை என்றாலும், எக்காலத்திற்கும் நிலைத்திருக்கக்கூடியவையே. ஒரு அரசின் வெற்றி என்பது பெரும்பாலும் ‘தரம்’ என்பதன் அடிப்படையில் அமைந்தது. எல்ல விஷயங்களுக்கும் இந்த தரம் பொருந்தும். மக்களுக்கு தரமாக சேவைகள், பொருட்கள் அளிக்கப்படுவதே அரசின் மீதான பிரதிபலிப்பை வெளிப்படுத்தும்.
ஆனால், தமிழ்நாடு அரசுக்கு முக்கிய வருவாயை ஈட்டித்திரும் ‘சரக்கின்’ தரம் குறித்து அரசு இப்போது நடவடிக்கை எடுத்துள்ளது. அரசின் ‘அமுதசுரபியாக’ இருக்கும் டாஸ்மாக் நிறுவனம் விற்கும் மூன்று வகை ‘சரக்கில்’ ‘மிடுக்கு’ இல்லை என்று கூறி அதை சந்தையிலிருந்து திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. அதாவது அரசு சரக்கில் ‘வீரியம்’ இல்லை அல்லது ‘மட்டையாகும்’ அளவுக்கு அதில் சாராயத்தின் வீதம் இல்லை. அரசு விதிமுறைகள் அல்லது வழிகாட்டலின்படி அந்த மூன்று வகை ‘சரக்கில்’ சாராயத்தின் வீதம் இல்லது என்பது ‘திடீர் ஆய்வில்’ கண்டறியப்பட்டது என்று அரசு தரப்பில் கூறப்படுகிறது.
அப்படியென்றால் இதுவரை விற்கப்பட்ட அந்த ‘சரக்கின்’ தரம் எப்படியிருந்திருக்கும் என்ற கேள்வி எழுகிறது. அதுமட்டுமல்ல அந்த மூன்று வகையான அல்லது வர்த்தகப் பெயர்களை கொண்ட பிராந்தியில் மட்டுமே அப்படியான பிரச்சனையா அல்லது டாஸ்மாக்கில் விற்கப்படும் அனைத்து வகை மதுவிலும் இந்த பிரச்சனை உள்ளதா என்ற வினாவும் உள்ளது. ஒருவேளை அரசின் வழிகாட்டல்கள் அல்லது நெறிமுறைகளுக்கு மாறாக டாஸ்மாக்கில் விற்கப்பட்ட அல்லது விற்கப்படும் மது வகைகளில் தரம் குறைவாக உள்ளது என்றால் அடுத்து அரசு என்ன செய்ய போகிறது? அந்த வகை மதுவை தயாரித்த மதுபான ஆலைகள் என்ன விளக்கம் அளிக்க போகின்றன? ஒரு குறிப்பிட்ட வகை மதுவை அதிலுள்ள ‘சிறப்பு குணாம்சங்களுக்காக’ வாங்கி குடித்த ‘குடி மக்களின்’ நிலை என்ன? அவர்கள் கொடுத்த பணத்திற்கு தரமான சரக்கு விற்கப்பட்டதா? என்று இந்தப் பட்டியலும் நீளூம். இந்த அவலம் இப்போது வெளியாகியுள்ளதால் இந்தளவிற்கு பரபரப்பும் பேசுப்பொருளாகவும் மாறியுள்ளது. இப்படியான தர மாறுபாடு அல்லது குறைபாடு எவ்வளவு ஆண்டுகளாக தொடருகின்றன என்பது அந்த ‘சரக்கு சாமிக்கே’ வெளிச்சம்.
மூன்று மது வகைகளின் சில தயாரிப்புகள் சந்தையிலிருந்து மீளப்பெறப்படுவதாக அரசு கூறியுள்ள நிலையில், இது தொடர்பிலான வாத பிரதிவாதங்கள் அடுத்து வரக்கூடிய நாட்களில் ஓங்கி ஒலிக்க ஆரம்பிக்கும். இது சமூக ஊடகங்களில் ஏற்கெனவே தொடங்கிவிட்டன.
தரமற்ற ஒரு பொருளை விற்பது என்பது சட்டப்படி குற்றம். இது எந்த பொருளாக இருந்தாலும் சரி. அந்த பொருளின் மேலட்டை அல்லது உள்ளே ஒட்டப் பட்டிருக்கும் பட்டியில் கூறப்பட்டிருக்கும் தரவுகளுக்கு அமைய இருக்க வேண்டும். அப்படியில்லை என்றால், நுகர்வோர் நீதிமன்றத்தை நாட சட்டத்தில் வழியுள்ளது. உதாரணமாக மாவு அரைக்கும் இயந்திரம் ஒன்றை அதன் மேலட்டையில் உள்ள விவரங்களின்படி வாங்குகிறோம். ஆனால் அதை பயன்படுத்தும் போது அட்டையில் கூறியபடி செயல்படவில்லை அல்லது திறன் இல்லையென்றால், அதை தயாரித்தவர் மற்றும் விற்றவர் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கலாம்.
இந்த ‘சரக்கு’ விஷயமும் அப்படித்தான். குறிப்பட்ட வீதத்திற்கு ‘சரக்கில் மிடுக்கு’ இல்லையென்றால் பிரச்சனை தான். ஆனால் டாஸ்மாக்கில் விற்கப்படும் எந்த மதுபானத்திற்கும் விற்பனைச் சீட்டு அல்லது சிட்டை அளிக்கப்படுவதில்லை என்பதே பொதுவான புரிதல். வாங்குபவரும் அதை கேட்பதில்லை, விற்பவரும் அதை அளிப்பதில்லை. அப்படியான விற்பனைச் சீட்டு அல்லது சிட்டை இல்லையென்றால் நீதிமன்றம் பல கேள்விகளை கேட்கும். சரக்கின் வீரியம் குறித்து பேச நீங்கள் யார்? அது ‘குடிமக்களாகிய’ எங்களுக்குத் தெரியும் என்று டாஸ்மாக் விசுவாசிகள் கூறினால் நம்மால் ஏதும் செய்ய முடியாது.
முதல்வர் நடவடிக்கை என்னும் சவுக்கை சுழற்றினால் அதன் வீரியத்தை இவர்கள் உணர்வார்கள்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings