தலையங்கம்
களவாடும் திருடர்கள் என்று பழி போடுவதா? தமிழர்கள் மீது மோடிக்கு இவ்வளவு வெறுப்பு ஏன் ?’ என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் கடும் கண்டனம் என்று ‘முரசொலி’ நாளேடு நேற்று {21.05.2024} காலை தலைப்புச் செய்தி வெளியிட்டது. ‘ஒடிசாவின் பொக்கிஷச் சாவி தமிழகத்திலா?’ என்று ஒரு ஏடும் ‘ஒடிசா ஜெகந்நாதர் கோவிலில் தொலைந்துபோன சாவிகள்’ பிரதமர் மோடியின் பேச்சால் சர்ச்சை.- தமிழர்கள் மீது திருட்டுப் பழி சுமத்துவதா? என்று ஒரு ஏடும், ‘ஒடிஸாவை தமிழர் ஆளலாமா? அமித்ஷா கடும் கண்டனம்’ என்று ஒரு ஏடும் ‘தமிழர்கள் மீது காழ்ப்பும், வெறுப்பும் ஏன்?’ என்று ஒரு ஏடும் ‘வாக்குக்காக தமிழர்களை அவமானம் செய்வதை பிரதமர் நிறுத்திக் கொள்ள வேண்டும்’ என்று ஒரு ஏடும் செய்திகள் வெளியிட்டன. அதேபோல, ஆங்கில ஏடுகளில் 22.05.2024 அன்று ‘Stop denigrating TN,Stalin tells Modi’ என்றும், ‘Missing Keys of Puri temple treasury unlock a Political Slugfest in Odisha” என்றும் ‘Modi portraying Tamils as robbers: சிவி” என்றும் “CM: Modi must stop maligning Tamils, focus on achievements’ என்றும், ‘Odia son wil rule state instead of Tamil Babu : Shah” என்றும் செய்திகள் வெளியிடப்பட்டன..
ஏன் இந்த அளவு கடுமையாக பிரதமர் மோடி விமர்சிக்கப்பட்டார்? ஒடிசாவிற்கு மக்களவை தேர்தலுக்காக பரப்புரை செய்ய மோடி வந்தார். பூரி தொகுதியில் பாஜக சார்பாக சாம்பித் பத்ரா நிற்கிறார். அவர் பூரி ஜெகந்நாதரை புகழ்வதாகவும் அவரது பக்தர் மோடி என்றும் பேசி வந்தவர் ஒரு கட்டத்தில், உணர்ச்சி வசப்பட்டோ கவனமாகவோ, மோடி புகழை அதிகமாக ஏற்றிவிட எண்ணி, ‘பூரி ஜெகன்னாத், மோடியின் பக்தர்’ என்று கூறி விட்டார். அதாவது தனது தலைவனை புகழ, கடவுளையே தனது தலைவனது பக்தன் என்று வெட்கமில்லாமல் பேசிவிட்டார். அதற்கு பக்தர்கள் மத்தியிலிருந்து கிளம்பிய எதிர்ப்பை தாங்க முடியாமல், ‘தவறாகச் சொல்லி விட்டேன் மன்னிக்கவும், இதற்காக விரதம் இருக்கப் போகிறேன்’ என்று புரட்டி விட்டார்.
அத்தகைய சூழலில், நமது பிரதமர் மோடி அடுத்து கூறிய ‘சொல்லாடல்’ தமிழ்நாட்டையே உலுக்கி விட்டது. அதாவது பூரி ஜெகந்நாதர் கோவிலின் பொக்கிஷ அறையின் சாவிகள் ஆறு ஆண்டுகளாக காணாமல் போய் விட்டன. ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் முதல்வராக இருக்கிறார். அவருக்கு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக நீண்ட காலம் பணியாற்றிய தமிழ்நாட்டின் மதுரை அருகே உள்ள மேலூரைச் சேர்ந்த கார்த்திக் பாண்டியன் ஆட்சிக்கு முக்கியமானவராக மாறியதால் முதல்வருக்கு நெருக்கமானவராக ஆகிவிட்டார். அதனால் அவரும் பிஜு ஜனதா தளம் கட்சியில் சேர்ந்து பணியாற்றி வருகிறார். பி.ஜெ.டி. கட்சியுடன் பாஜக கூட்டணி பேசியது. அமித்ஷா, பாண்டியனிடம் பேசும்போது, சட்டமன்றத் தேர்தலில் பாஜக விற்கு பாதி இடம் என்றும் மக்களவையில் பாதிக்கு மேல் என்றும் கோரிக்கையை அழுத்தமாக வைத்து நிர்ப்பந்தம் கொடுக்க, பிஜு ஜனதா தளம் ஏற்கவில்லை. பிஜேடி, பாஜக உறவு முறிந்தது. 25 ஆண்டுகளாக ஆட்சியில் உள்ள பட்நாயக் கட்சி மீண்டும் தனித்து நின்று தேர்தலை சந்திக்கிறது. பொறுக்க முடியாத கோபத்தில் பிஜேடியின் தலைவர் நவீன் பட்நாயக் ஆட்சியை தோற்கடிக்கவும் மக்களவை தேர்தலில் அவர்களை எதிர்த்து போட்டியிடவும் பரப்புரை செய்ய மோடியும் அமித்ஷாவும் ஒடிசா வந்தனர். வந்த இடத்தில் ‘தமிழ்நாட்டைச் சேர்ந்த பாண்டியன் வெளியிலிருந்து வந்து ஒடிசாவில் முக்கியமானவராக அரசியலில் திகழ்வதா என்ற ‘பொறாமை’ இயல்பாகவே சில ஒடிசா மக்கள் மத்தியிலும் பாஜகவினர் மத்தியிலும் இருக்கிறது என்பதால் அதை எதிர்த்து தங்களது ஆத்திரத்தை இரு பெரும் தலைவர்களும் கொட்டிக் கொண்டனர்.
அதுவே மேற்படி ‘மோசமான’ பேச்சை பேச மோடிக்கு வழி வகுத்துள்ளது. ஆனால் அதற்குப் பின்னால் மோடி அவர்களது ‘உளவியலில்’ எத்தகைய காரணங்கள் இருக்கின்றன என்று பார்த்தால் ‘தமிழ்நாட்டின் மீது அடக்க முடியாத பொறாமை வெளிப்பட்டுள்ளது.
தற்செயலாக தமிழ்நாட்டுக்காரர்களான சிலர் மீதான அவரது கோபம் இதில் வெளிப்பட்டதா? என கேள்வி எழுந்துள்ளது. நவீன் பட்நாயக் ஆட்சியில் ஒடிசாவில் அதிகமான கனிமவளமான ‘நிலக்கரி சுரங்கங்களை’ எடுத்து லாபம் பெறுபவர், தமிழ்நாட்டைச் சேர்ந்த சேலத்துக்காரர் ‘திரிவேணி எர்த் மூவர்ஸ்’ என்பவர்கள். சட்டப்பூர்வமான, சட்டப்பூர்வமில்லாத நிலக்கரி சுரங்கங்கள் அங்கே அப்படி இயங்குகின்றன. தமிழ்நாட்டின் மேற்கு மண்டலம் ‘தொழில் துறையிலும் சிறு-, குறு தொழிற்சாலைகளிலும் இந்தியாவிலேயே முன்சென்று வளர்வதற்கான முயற்சிகளில் உள்ளது. அதற்குப் போட்டியாக, குஜராத்தின் ‘சிறு,- குறு தொழிற்சாலைகள்’ ஒரு கட்டத்தில் வளர்ந்து வந்தவை. இப்போது பஞ்சாலைகளும் மீண்டும் குஜராத்தில் வருகின்றன. எது எப்படி இருந்தாலும், குஜராத்தின் ஜீ.டி.பி. 7.5 ட்ரில்லியன். தமிழ்நாட்டின் ஜிடிபி 9.1 ட்ரில்லியன், சமீபத்திய ‘பட்டித்தார் வகுப்பினரின் போராட்டங்களுக்கு’ பிறகு சிறிது வீழத் தொடங்கியுள்ளது. அதேநேரம் மோடியும் அமித்ஷாவும் குஜராத் வாசிகள். அவர்களால் வலுப்பெற்றதாகக் கூறப்படும் அதானி, அம்பானி இருவருமே குஜராத்காரர்கள். ‘குஜராத்தி பெருமை’ என்று பேசித் தான் மோடி வளர்ச்சி பற்றி பீற்றிக் கொள்கிறார்.
தமிழ்நாடு தொழிலில் முன்னேறுவதை ஒரு ‘போட்டியாக’ குஜராத் ஆதிக்கவாதிகள் பார்க்க வேண்டியிருக்கிறது. அத்தகைய சிந்தனையில், ‘பூரி ஜெகன்நாத் கோவில் விவகாரத்தைக்’ கேள்விப்பட்டவுடன், தமிழ்நாட்டிற்கு செல்வமெல்லாம் செல்கிறது என்று மோடியும் அவரது எம்.பி. வேட்பாளர் சாம்பித் பத்ரா போல தடுமாறி கூறிவிட்டார்.
ஆனாலும் உள்ளே பின்புலத்தில் உளவியல் ரீதியாக ‘குஜராத், -தமிழ்நாடு தொழில் போட்டி’ என்ற ஒரு கார்பொரேட் நலன் சார்ந்த வெறுப்பு ‘உரமேறி’ இருக்கிறது என்பதன் ‘பூனை பையை விட்டு வெளியே’ வந்து விட்டது.
தெ.சீ.சு.மணி
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings