தலையங்கம்
மே14ம் தேதி நரேந்திர மோடி உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள வாரணாசி மக்களவைத் தொகுதியில் ஜூன் 1ம் தேதி நடக்க இருக்கின்ற 6வது கட்ட மக்களவை தேர்தலுக்கான வேட்பு மனுவைத் தாக்கல் செய்தார்.
அதற்கு முன்பே பிரதமர் மோடி தனது தேர்தல் பரப்புரையில், காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை விமர்சிக்கும் நோக்கில் ‘பட்டியலின மக்களுக்கான இட ஒதுக்கீட்டைப் பறித்து முஸ்லிம்களுக்கு காங்கிரஸ் கட்சி கொடுக்கப் போகிறது’ என்று கூறினார். இந்துக்களுடைய பாரம்பரிய சொத்துக்களை, பெண்களின் தாலித் தங்கத்தைக் கூட பறித்து முஸ்லிம்களுக்கு கொடுத்துவிடுவார்கள் என்றும் கூறினார். முஸ்லிம்கள் மீது ஒரு பொறாமையும், வெறுப்பும் ஏற்படும் அளவில் பேசினார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சித்தன. ‘அதிக குழந்தைகள் பெற்றுக் கொள்வோர் மற்றும் அந்நிய நாட்டிலிருந்து நமது நாட்டிற்குள் ஊடுருவல் செய்தவர்கள் ஆகியோருக்கு இந்துக்களின் பூர்விக சொத்துக்களை எடுத்துக் கொடுத்து விடுவார்கள்’ என்றும் கூறினார். ஒரு பிரதமர் தனது தேர்தல் பரப்புரையில் இது போல ஒரு மதத்தைக் குறிப்பிட்டு ‘வெறுப்பு பேச்சு’ பேசலாமா? என்று எதிர்க்கட்சியினர் கொந்தளித்தார்கள். அதையே அவர்கள் குடியரசுத்தலைவரிடமும் தேர்தல் ஆணையரிடமும் ‘புகாராகக்’ எழுதிக் கொடுத்தார்கள்.
இது ஒருபுறமிருக்க, மே -14ம் தேதி வேட்பு மனுவை தாக்கல் செய்த பிரதமர் மோடி மே 15ம் நாள் டில்லியில் ஊடகவியலாளர்களிடம் ‘இந்து -முஸ்லீம் பிரிவினை பற்றி நான் பேசியதில்லை. அனைவரையும் சரிசமமாகப் பார்க்கிறேன். அப்படிப் பிரித்துப் பார்த்தேன் என்றால், ‘பொது வாழ்க்கைக்கே தகுதியற்றவனாக ஆகிவிடுவேன்’ என்று ஒரு அதிர்ச்சியான கருத்தை வெளிப்படுத்தினார். அதை மே 15ம் நாள் ஆங்கில ஏடு ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ தனது முதல் பக்கத்திலேயே, No Hindu – Muslim bias, that is my resolve: PM modi என்று வெளியிட்டது. அதே செய்தியை மே 16ம் நாள் எல்லா ஏடுகளிலும் ‘இந்து -முஸ்லீம் பாகுபாடு அரசியல் செய்யமாட்டேன்’ என்று மோடி பேசியதாக வெளிவந்தது. முஸ்லிம்கள் பற்றி நான் எதுவும் தவறாகப் பேசவில்லை என்று மோடி கூறியது அவரது ‘முஸ்லிம்களை பற்றிய கருத்தில் வந்துள்ள ஒரு மாற்றம்’ என்று ஊடகங்கள் கூறின. அதற்கு என்ன காரணம் என்று ஒவ்வொருவரும் ஆராய்ந்தனர்.
முதலில், ‘மதச்சார்பற்ற இந்துக்கள் தான் இந்தியாவில் பெரும்பான்மையாக இருக்கின்றனர்’. என்பதை மோடி உணர்ந்து கொண்டாரா? எனக் கேட்கின்றனர்.அப்படியானால், ‘இந்து வாக்கு வங்கி’ என்று ஓன்று இருக்கிறது என்பதாக நம்பிக்கொண்டிருந்த அல்லது நம்ப வைத்துக் கொண்டிருந்த சக்திகள் தோல்வி அடைந்து விட்டன என்று தானே பொருள்? அதனாலே தான் இப்படி மாற்றிப் பேசுகிறார் என்று கூறினர். இரண்டாவதாக உத்திரப் பிரதேசத்தில் அயோத்தி நகரில் ஸ்ரீ ராமருக்கு கோவில் கட்டி திறந்ததால், இந்துக்கள் வாக்குகள் மொத்தமாக தங்களுக்கு விழும் என்ற எதிர்பார்ப்பு, நடந்து முடிந்த நான்கு கட்ட தேர்தலிலும் பொய்த்து விட்டது என்பதால் பல்டி அடித்து பேசுகிறார் என்றும் சிலர் கூறினார்கள்.
அடுத்ததாக, மே 15ம் தேதி தான் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் தாக்கல் செய்யப்பட்ட வேட்பு மனுக்கள் ‘பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்படும் போது’ யாராவது எதிர்க்கட்சிக்காரர்கள் ‘மத ரீதியான வெறுப்பு பேச்சு பேசிய வேட்பாளரது வேட்பு மனுவை செல்லாது என்று தள்ளுபடி செய்யுங்கள்’ என்று வாதாடினால் ஏற்கெனவே மேலே புகார் கொடுத்திருப்பதால் அதைக் கவனித்து தேர்தல் அதிகாரி ‘தனது வேட்பு மனுவை நிராகரித்து வீடக் கூடாதே’ என்பதற்காக முன்கூட்டியே ‘முஸ்லிம்கள் பற்றிய தனது கருத்தை மாற்றிப் பேசி பதில் கொடுக்கத் தயாராகி இருக்கிறார்’ என்றும் கூறுகிறார்கள். இத்தனையும் தாண்டி, ஒரு சர்வதேசப் பிரச்சனையும் இப்போது எழுந்துள்ளது என்கிறார்கள் சிலர்.
அதாவது, இந்திய நாட்டிற்கான எரிவாயு கொண்டுவர, ‘ஈரான் நாட்டு சபஹார்’ துறைமுகத்தை, இந்தியா சிறப்பாக கட்டிக் கொடுத்து அதன் மூலம் தங்களுக்கு வேண்டிய எரிபொருளைக் கொண்டு வர ‘ஒப்பந்தம்’ போட்டுள்ளது. அமெரிக்கா ஈரான் நாட்டின் மீது பொருளாதாரத் தடை போட்டிருப்பதால் ஈரானுடன் ஒப்பந்தம் போட்ட இந்திய அரசைக் கடுமையாக எச்சரிக்கிறது. இப்படி மேற்கு உலக நாடுகளிடம் தனிமைப்படும் நேரத்தில் ஈரான் நாட்டு நட்பு மிக முக்கியம். ஈரான் நாடு, இஸ்லாமியர்களுக்கு எதிராக இந்தியாவிற்குள் ‘வெறுப்பு பேச்சை விதைத்தால்’ தாங்கிக் கொள்ளாது. ஆகவே அத்தகைய சர்வதேச சூழ்நிலையில், பிரதமர் அப்படி ‘முஸ்லிம்களுக்கு எதிரான தனது கருத்தை மாற்றி” பேசினார் என்றும் கூறுகிறார்கள். எப்படியோ, ‘மதச்சார்பற்ற இந்தியாவில், மதச்சார்பற்ற இந்திய மக்களிடையே ‘வெறுப்பு பேச்சுக்கள்’ வேண்டாம் என நாமும் கேட்டுக் கொள்வோம்.
தெ.சீ.சு.மணி
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings