in

மக்கள் வாய்ஸ்

காமராஜர் ஆட்சி என்றால் என்ன?

காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று எல்லா அரசியல் கட்சிகளும் கூறுகின்றன அல்லது கூவுகின்றன. காமராஜர் இருந்த, பின்னர் முரண்பட்ட காங்கிரஸ் கட்சியும் இதை கூறுகிறது, காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கடும் அரசியலை செய்த தேசியக் கட்சிகளும் இதை கூறுகின்றன. இதில் பாரதிய ஜனதா கட்சியும் அடங்கும். தமிழ்நாட்டை 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சியில் இருக்கும் திராவிடக் கட்சிகளும் இது பொருந்தும்.

ஆனால், உண்மையில் காமராஜர் ஆட்சி என்றால் என்ன? அடிப்படையின் நானறிந்த வகையில், அல்லது புரிந்துகொண்ட அளவில் அவரது ஆட்சி என்பது ஊழலற்ற, மக்கள் நலன் சார்ந்த எளிமையான ஆட்சி என்பதே. அவரது எளிமையும், நேர்மையும் இன்று அவரது ஆட்சி அமைப்பதாக அல்லது அமைக்க விரும்புவதாக கூறுவர்களிடம் இருக்கிறதா என்பதே பெரிய கேள்வி.

‘பெருந்தலைவர்’ காமராஜரின் பண்புகளை நாம் சொல்லித்தான் அடுத்தவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதில்லை. அடிப்படையில் மிகவும் எளிமையானவர், படாடோபங்கள் ஏதும் இல்லை, பெயர் மற்றும் புகழுக்காக அரசியலுக்கு வரவில்லை, ஊழல் செய்து கோடி கோடியாய் மக்கள் பணத்தை கொள்ளையடிக்க வேண்டும் என்ற எண்ணமில்லை, ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் அதே நாலு முழ வேட்டி, அரைக்கைச் சட்டை, சாதாரண தோல் செருப்பு, புண்படுத்தாத பேச்சு, அடுத்தவர்கள் கூறுவதை பொறுமையாகக் கேட்கும் தன்மை போன்றவைகளின் உருவகமாக அவர் திகழ்கிறார். பாரத தேசம் என்பதில் பெருமை கொண்டு அந்த நிலைப்பாட்டிலேயே வாழ்ந்து மறைந்தவர். குறுகிய சிந்தனைகளுக்கு இடமளிக்காதவர் என்று நான் கேள்விப்பட்ட சில விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம்.

காமராஜர் அவர்களின் ஆட்சியை இன்றைய காலகட்டத்துடன் ஒப்பீட்டு பார்ப்போம். தன்னை எதிர்த்தவர்களையும் அவர் ஆட்சியிலும், கட்சியிலும் இணைத்துக்கொண்டார். ராஜாஜி முதலமைச்சர் பதவி விலகியதை அடுத்து, ஆட்சி தலைமைக்கு காமராஜரை எதிர்த்து சி. சிப்பிரமணியம் போட்டியிட்டார். ஆனாலும் எவ்விதமான காழ்ப்புணர்ச்சியும் இன்றி அவரை தனது அமைச்சரவையில் நிதி அமைச்சராக நியமித்து அவரிடம் இருந்த திறமைகளை ஆட்சி மற்றும் மக்கள் நலனுக்காக பயன்படுத்திக்கொண்டார்.

அதுமட்டுமல்ல, அவரது அமைச்சரவையில் அவர் உட்பட 8 அமைச்சர்களே இருந்தனர். பின்னர் தேசிய அள வில் மிக உயர்ந்த பதவிக்கு வந்த ஆர். வெங்கட்ராமன், சி. சுப்பிரமணியம் போன்றவர்களும், எளிமைக்கு உதாரணமாக இருக்கும் கக்கன் போன்றவர்களும் அவரது அமைச்சரவையில் இருந்தனர்.

தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக் கையும் 206ஆக இருந்து பின்னர் 234 ஆக உயர்ந்தது. எனினும், 8 அமைச்சர்களை மட்டுமே வைத்துக்கொண்டு அவர் சிறப்பாக ஆட்சி நடத்தினார்.

அவர் ஆட்சி காலத்தில் சாதி பார்த்து தேர்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு அளிக்கப்படவில்லை என்று நான் பழகிய மூத்தோர் கூறுவார்கள். அதிகாரிகளும் நேர்மையுடன் நிர்வாகத்தை நடத்தி னார்கள், தவறிழைத்தால் முதலவரை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்ற அச்சமும் இருந்தது. காமராஜர் ஆட்சி ‘சாராய ஆட்சி’ என்ற விமர்சனத்திற்கு உள்ளாக வில்லை. அவர் காலத்தில் மதுவிலக்கு கொள்கையே அமலில் இருந்தது.

கொலை, கொள்ளை, பாலியல் வன்செயல், நில அபகரிப்பு, ஆலயச் சொத்துக்களை சொந்த சொத்தாக கருதி அதில் சட்ட விரோதமாக வீடுகள், கட்டடங்களை கட்டி வாடகைக்கு விற்று பிழைக்கும் நிலை இருக்கவில்லை. கட்டப்பஞ்சாயத்துகளுக்கும் இடமில்லை. அமைச்சரவையில் இருந்தவர்கள் மீது ஊழல் அல்லது இதர குற்றச்சாட்டுக்கள் சுமத்தப் பட்டு அவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படவில்லை என்றெல்லாம் அவரை பற்றி அறிந்துகொள்ளும் வகையில் வாசிக்கும் போது தெரிய வருகிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அவர் ஆட்சிக் காலத்தில், அரச நிர்வாகம் மற்றும் ஆட்சியில் குடும்பத் தினரின் தலையீடு இல்லை. குடும்ப ஆட்சி என்பது சிந்தனையில் கூட இருக்கவில்லை.

ஆனால், இன்று கட்சிகளுக்கு அப்பாற்பட்டு காமராஜர் ஆட்சி குறித்து பேசுபவர்கள் அவரது ஆட்சிகாலத்தில் இருந்த இலக்கணத்துடன் ஒத்துப்போவார்களா? மிகக் குறைவாக அவரையும் சேர்த்து 8 பேர் மட்டுமே கொண்ட அமைச்சரவையில் இருந்த நேர்மை மற்றும் ஆட்சித் திறமை, அவருக்கு பிறகு வந்தவர்களிடம் இல்லை என்று கூறப்படுவது எதனால். 30க்கு அதிகமான அமைச்சர்கள் இருந்தும் ஏன் தொடர்ச்சியாக அரசுகளின் மீது விமர்சனம் அல்லது அதிருப்தி? இந்த கேள்விகள் எல்லாம் ‘காமராஜர் ஆட்சி’ என்று பேசுவோர்கள் அனைவருக்கும் பொருந்தும். யாரும் விதிவிலக்கல்ல. உண்மையைச் சொல்லப் போனால், காமாராஜர் ஆட்சி என்பது அவருடன் முடிந்துவிட்டது. இன்று காமராஜர் ஆட்சி என்பது கானல் நீர் அல்லது இல்லாத கருப்புப் பூனையை இருட்டறையில் தேடுவது போன்றது மட்டுமே!

சிவா பரமேஸ்வரன்

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

ஒகேனக்கல் காவிரிஆற்றில் நீர்வரத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

உபதலை அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி விழா