in

கழிவு நீர் அகற்றல் மரணங்கள் முடிவுக்கு வரவேண்டும்

தலையங்கம்

                                                                                                                                         ==== சிவா பரமேஸ்வரன் =====

இரு தினங்களுக்கு முன்னர் தேசியளவில் துப்புறவு தொழிலாளர்களுக்கான வாரியம் அல்லது உயர்மட்ட ஆணையத்தின் தலைவர் சென்னையில் முன்னணி பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டி பெரியளவில் கவனிக்கப்படவில்லை என்றே தோன்றுகிறது.

மனித கழிவுகளை அகற்றும் பணியில் ஈடுபடுபவர்களின் மரணங்களை மையப்படுத்தியே அந்த பேட்டி இருந்தது. தமிழகத்தில் பாதாள சாக்கடை திட்டம் பரவலாக முன்னெடுக்கப்பட்டு வந்தாலும், இன்னும் வீடுகளிலிருந்து வெளியேறும் மனித கழிவுகள் அதற்கான தொட்டியில் சேமிக்கப்பட்டு பின்னர் அது அப்புறப்படுத்தப்படுகிறது.

இந்த பணி மிகவும் ஆபத்தானது. ஏனென்றால், மனித கழிவுகள் சேமிக்கப்படும் தொட்டிகள், அல்லது பாதாள சாக்கடை பாதைகள் ஆகியவற்றிலிருந்து நச்சுவாயு வெளியேறும் என்பது அறிவியல் உண்மை. எனவே அப்படியான குழிகளில் இறங்கி வேலை செய்பவர்கள் நச்சுவாயு தாக்குதலுக்கு ஆளாகி உயிரிழப்பது தொடர்கதையாகவே உள்ளது.

அதிலும் குறிப்பாக குறிப்பிட்ட சமூகத்தினர் மட்டுமே இந்த பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவே மிகப்பெரும் இழுக்கு. இன்று தொழில்நுட்பம் பல்துறைகளில் வளர்ந்துள்ளது. அவ்வகையில் மனித கழிவுகளை அகற்றுவதற்கும் பல முறைகள் உள்ளன. இந்த வேலை இன்று மேலை நாடுகளில் முற்றாக இயந்திரங்கள் மூலமே செய்யப்படுகின்றன.

எனினும் கழிவுநீர் கால்வாய்களில் இறங்கி சுத்தம் செய்ய வேண்டுமென்றால் அதற்கான நெறிமுறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் எல்லம் வரையறுக்கப்பட்டுள்ளன. அதனால் அங்கு இப்படியான மரணங்கள் ஏற்படுவதில்லை.

மலக்குழி அல்லது பாதாள சாக்கடை மரணங்கள் தமிழ்நாட்டில் கணிசமாக உள்ளது மிகவும் கவலைக்குரியது. இதில் வேலை செய்பவர்கள் பெரும்பாலும் அன்றாட கூலிகள் அல்லது ஒப்பந்த தொழிலாளர்களாக இருப்பவர்கள். அவர்களுக்கு சட்டரீதியாக எந்த பாதுகாப்பும் இல்லை. அவர்கள் பணியின் போது உயிரிழந்தால், அவர்களுக்கு இழப்பீடு அளிப்பதற்கு அரசுகள் முன்வருவதில்லை. ஏனென்றால் அவர்கள் நேரடி தொழிலாளர்களாக இல்லை.

தேசிய துப்புறவு தொழிலாளரிகள் நல அமைப்பின் தலைவர் மேலும் ஒரு முக்கியமான தகவலை வெளிப்படுத்தியுள்ளார். “தமிழ் நாட்டில் தான் மிக அதிக அளவில் கழிவுகளை வெளியேற்றுவது, அடைப்புகளை நீக்குவது ஆகியவை கைகளால் செய்யப்படும் போது மரணங்கள் ஏற்படுகின்றன”.

“மனித கழிவுகளை இன்னும் மனிதனே சுமப்பதும் நடைபெறுவது மிகவும் மோசமான ஒன்று என்று வருந்தியுள்ள அதன் தலைவர், இந்த மரணங்கள் ஏற்படுவதற்கான பரந்துபட்ட காரணங்களையும் விளக்கியுள்ளார்.

”தமிழகத்தில் மனித கழிவுகளை அகற்றுவது மற்றும் கழிவு நீர் பாதைகளை பராமரிப்பது, அதில் மனிதர்களை இறக்கி சுத்தம் செய்ய வைப்பது ஆகியவற்றுக்கு எதிராக கண்காணிப்புகளை மேற்கொண்டு, விழிப்புடன் இருக்கவும் குழுக்கள் உள்ளன என்றாலும், அவை ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே கூடுகின்றன, அப்படி கூடும் போதும் யதார்த்தமான விஷயங்களை விவாதிப்பதில்லை”.

அவ்வகையில் துப்புறவு செய்யும் தொழிலாளர்கள் காயமடைந்தாலோ அல்லது உயிரிழந்தாலோ மட்டுமே நடவடிக்கை எடுக்கப்படுகிறது, மற்ற நேரங்களில் பாராமுகமாக இருக்கும் நிலையே உள்ளது என்றும் அந்த தேசிய ஆணையத்தின் தலைவர் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

இதில் சில நடைமுறை சிக்கல்களும் உள்ளன என்பதையும் கவனிக்க வேண்டியுள்ளது. குடியிருப்பு பகுதிகளில் மலக்குழிகள் நிரம்பும் போது அதை நீக்குவதற்கு உரிய அரச அலுவலகங்களில் தெரிவித்தால், அவர்கள் ஒரு குடியிருப்புக்குள் இயந்திரத்தின் மூலம் கழிவுகளை அகற்ற ஏற்பாடுகளை செய்வதில்லை. சாலைகளில் ஏற்படும் அடைப்புகளை சுத்தம் செய்ய மட்டுமே குறைந்தளவிற்கு இருக்கும் இயந்திரங்களை பயன்படுத்துகின்றனர்.

இதற்கு அப்பாற்பட்டு மனித கழிவுகளை முறையாக அகற்ற பதிவு செய்யப்பட்ட முகவர்கள் அல்லது அமைப்புகளும் இல்லை. இது சில தனியாரால், ஏழ்மை நிலையில் இருக்கும் சமூகத்தில் பின் தங்கிய மக்களை கூலிகளாக அமர்த்தி வேலையை செய்கிறார்கள். முறையாக பதிவு செய்யப்பட்ட அமைப்புகள் அல்லது முகவர்கள் அந்தந்த நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் பதிவு செய்யப்பட்டு அது மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் வலுவானது.

இனியாவது இந்த விஷயத்தில் தமிழகத்தில் ஒரு மரணம் கூட நிகழக்கூடாது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

மேட்டுப்பாளையம் – ஊட்டி சாலைப்பணிகளை அதிகாரிகள் ஆய்வு

காற்றழுத்த தாழ்வு பகுதி மண்டலமாக வலுப்பெறும்: வானிலை