தலையங்கம்
சிவா பரமேஸ்வரன்
ஒரு பக்கம் விழிப்புணர்வு விளம்பரம், மறுபுறம் கனஜோஜாக விற்பனை. இது தான் இன்று தமிழகத்தில் யதார்த்த நிலை. சாராய சாம்ராஜ்ஜியமே இன்று தமிழ்நாட்டின் அடையாளம். சேர, சோழ, பாண்டிய சாம்ராஜ்ஜியங்களைவிட சாராய சாம்ராஜ்ஜியங்கள் சரித்திரத்தில் இடம்பிடித்துள்ளன.
சராசரியாக தமிழ் நாட்டிலுள்ள மாணவ மாணவிகள், அரச ஊழியர்கள், வர்த்தகர்கள், தொழில் முனைவோர், இல்லத்தரசிகள் என்று யாரிடமும் சென்று தமிழகத்தை ஆண்ட சாம்ராஜ்ஜியங்கள் குறித்து ஒரு கட்டுரையும், சாராய சாம்ராஜ்ஜியம் குறித்து ஒரு கட்டுரையும் எழுதச் சொன்னால், மாமன்னர்கள் எல்லாம் நினைவுக்கு வரமாட்டார்கள்.
மாமன்னர்கள் ஆண்ட தமிழ் நாட்டில் சேர, சோழ, பாண்டிய, பல்லவ மன்னர்கள் ஒரு பத்து பெயரின் பேர்களை கூறுங்கள் என்று கேளுங்கள், மோட்டுவளையப் பார்த்து முழிப்பார்கள். ஆனால் அவர்கள் வசிக்கும் பகுதியில் சரக்கு சாம்ராஜ்ஜியங்கள் எங்குள்ளன, டாஸ்மாக்கில் என்னென்ன பெயரில் மது விற்பனை செய்யப்படுகிறது என்று கேளுங்கள் பிழையில்லாமல் பதில் வரும். அதிலும் ரகம் வாரியாக பிரித்து அசத்துவார்கள் நமது ’குடிமக்கள்’.
தமிழ் நாட்டின் பிறந்த குழந்தைக்கு கூட சர்க்கரை நீரை புகட்டுவதற்கு பதிலாக சாராயத்தை புகட்டும் அவலம் ஏற்ப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை. அந்தளவிற்கு சாராயம் தமிழ் நாட்டின் வியாபித்துள்ளது. தமிழ் நாட்டின் வரலாற்றை எழுதும் போது, சாராய சாம்ராஜ்ஜியத்திற்கு தனி இடம் உள்ளது என்பதை மறுக்கவும் முடியாது.
இந்நிலையில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவனின் ஆதங்கத்துடன் கூடிய அறச்சீற்றம்y வலுப்பெறுகிறது. காந்தியின் பிறந்த தினத்தை அனுசரிக்கும் வகையில் “போதைப் பொருள் மற்றும் மது ஒழிப்பு மகளிர் மாநாடு” கள்ளக்குறிச்சியில் நடத்தப்படும் என்று அவர் அறிவித்துள்ளார். கள்ளக்குறிச்சியில் அதை நடத்துவதில் குறியீட்டளவில் முக்கியமானது. அண்மையில் அங்கு 60க்கும் அதிகமானவர்கள் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்த அவலம் அரங்கேறியது.
எனினும் இது நடைபெற்று பல மாதங்கள் ஆகியும் விற்றவர்கள் யார், எப்படி அது அதிகாரிகளின் பார்வைக்கு வராமல் சென்றது, இனியும் நடைபெறாமல் இருக்குமா என்ற கேள்விகளுக்கெல்லம் விடை இதுவரை இல்லை.
இந்த மாநாட்டை மையப்படுத்தி திருமா அரசியல் செய்கிறார் என்று விமர்சிக்கப்பட்டாலும், மது விலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்படும் என்று கூறியுள்ளது கவனிக்கத்தக்கது. பொறுப்புள்ள ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் என்ற வகையில், இது தொடர்பில் திருமா டில்லியில் குரல் கொடுப்பார் என்று நம்பலாம்.
சாராய சாம்ராஜ்ஜியத்தால் சீரழியும் நபர்கள் மற்றும் குடும்பங்கள் பெரும்பாலும் வறுமை கோட்டுக்கு கீழேயுள்ள மக்கள் மற்றும் சமூகத்தில் பின் தங்கியுள்ள, கடுமை உடலுழைப்பைச் செய்யவர்கள் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அவர்களே சாராய சாம்ராஜ்ஜியத்தால் சுரண்டப்படுகிறார்கள். நாளொன்றுக்கு உழைக்கும் காசு முதலில் டாஸ்மாக்கிற்கு எடுத்துச் செல்லப்பட்ட மீதமிருந்தால் குடும்பத்திற்கு கொண்டுசெல்லப்படுகிறது. பொருளாதார ரீதியாக நிலையாக உள்ளவர்கள்- அவர்கள் சமூகத்தில் எந்த பிரிவினராக இருந்தாலும் இதனால் பெரும்பான்மையாக பாதிக்கப்படுவதில்லை.
அவர்களின் பார்வையே வேறு. மாதாந்த ஊதியம், கைநிறைய சம்பளம் எனவே அவ்வப்போது பாருக்குச் சென்று கஷ்டப்பட்டு உழைத்த காசில் ஒரு பகுதியை குடித்து கும்மாளம் அடிப்போம் என்பதாக உள்ளது. அன்றாடம் அவர்கள் வாழ்வில் அது ஒரு பங்காக இருப்பதில்லை. ஆனால், அன்றாடம்காய்ச்சிகளுக்கு முதல் வீடு என்பது டாஸ்மாக்.
மாநில அரசுகள் ஒத்துழைக்காததால் மதுவிலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க முடியவில்லை என்று திருமா ஆதங்கப்படுவதில் நியாயம் உள்ளது. தமிழகத்தில் ஆளும் கூட்டணியில் இருந்தாலும், துணிச்சலாக இதை அவர் கூறியுள்ளார். தமிழ் நாடும் சாராய விற்பனையும் இணை பிரியா ஜோடிகள் அல்லது ஒரு நாணயத்தில் இரு பக்கங்கள், இல்லை இல்லை நாணயத்தின் இரு பக்கங்கள் என்று தான் சொல்ல வேண்டும்.
ஒரு அரசு அல்லது ஆட்சியையே இன்று சாராய சாம்ராஜ்ஜியம் தமது கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. இந்நிலையில் மதுவிலக்கு யதார்த்த ரீதியில் சாத்தியமா என்ற கேள்வியும் உள்ளது. அது புற்றுநோய் போன்று புரையோடிப் போயுள்ளது. அதற்கு தீர்வு என்பது இருப்பதாகத் தெரியவில்லை. புற்று நோய் மேலும் பரவாமல் எப்படி கட்டுப்படுத்த முயற்சிக்கலாமே தவிர அதை முற்றாக ஒழிக்க முடியும் என்பதற்கான சாத்தியங்கள் ஏதும் கண்ணுக்கெட்டிய தூரத்தில் இல்லை. அப்படியே அறிவியல் முன்னேற்றம் காரணமாக புற்று நோயை முழுமையாக குணப்படுத்த முடியும் நிலை தோன்றினாலும், இந்த சாராயப் புற்றை ஒழிக்கவோ அல்லது அழிக்கவோ முடியாது.
மது விற்பனை வாயிலாக, பல ஆயிரம் கோடி வருமானம் ஈட்ட திட்ட்மிடும் அரசு, அதனால் பாதிக்கப்படும் மக்களையும், குடும்பங்களையும் பாதுகாக்க உரிய நிதி ஒதுக்கீடுகள் செய்வதில்லை. முழுமையான மது விலக்கு என்பது இருந்தால் தான் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்த முடியும் என்று திருமாவளவன் கூறியுள்ளது முற்றிலும் ஏற்புடையது. மாநில அரசே நல்ல சாராயம் என்ற பெயரில், மது விற்பனை செய்வதால் தான், கள்ளச்சாராயம் பற்றிய கவலை அரசுக்கும், அட்சி நிர்வாகத்திற்கும் இல்லாமல் போய் விடுகிறது.
திருமா உண்மையை பேசியுள்ளார். இதை உரியவர்களுடன் கூட்டணி என்பதற்கு அப்பாற்பட்டு விவாதித்து என்ன செய்ய போகிறார் என்பதே இப்போதுள்ள கேள்வி அல்லது எதிர்ப்பார்ப்பு.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings