மக்கள் வாய்ஸ்
கடந்த ஞாயிறு அன்று இந்திய நேரம் நள்ளிரவு சமயத்தில் அந்த மிகவும் முக்கியமான அறிவிப்பு வெளியானது. பெரும்பாலான இந்தியர்கள் உறங்கச் சென்றிருப்பர்கள். நேற்று (ஜூலை 22) காலை செய்திகளை பார்த்த அல்லது கேட்ட பிறகு தான் அமெரிக்க அதிபர் தேர்தல் போட்டியிலிருந்து ஜோ பைடன் விலகியுள்ளார் என்ற செய்தியை அனைவரும் அறிந்தனர்.
தற்போதைய அதிபரான ஜோ பைடனின் இந்த முடிவு உலகளவில் தலைப்புச் செய்தியானது. உலகின் மிகவும் பலம் வாய்ந்த மற்றும் அதிகாரம் மிக்க பதவி என்பது அமெரிக்க அதிபரின் பதவியாகும். உலகின் முன்னணி வல்லரசின் தலைவராக திகழ்வும் அவரால் இயலாதது எதுவுமே இல்லை என்பது தான் யதார்த்தம்.
அப்படி வல்லமை மிக்க பதவியில் மீண்டும் போட்டியிட வாய்ப்பிருந்தும் தனது உடல்நிலை இடம் கொடுக்காததால் போட்டியிலிருந்து விலகுவதாக அவர் அறிவித்துவிட்டார். அதிபர் தேர்தலில் மீண்டும் போடியிட்டால் வெற்றி பெற்றிருப்பாரா என்பது வேறொரு கேள்வி. ஆனாலும் போட்டியிலிருந்து விலகுகிறேன் என்று அறிவித்து துணை அதிபராக இருக்கும் கமலா ஹாரிஸை தான் ஆதரிக்கிறேன் என்றும் ஜோ பைடன் அறிவித்துள்ளார்.
அவரது உடல் நலன் கருதி போட்டியிலிருந்து விலகுவது கட்சிக்கு நல்லது என்று முன்னாள் அதிபர் பராக் ஒபாமா உட்பட பலரும் கருத்து வெளியிட்டிருந்தனர். அந்த கருத்துக்களையும் மீறி தொடர்ந்து போட்டியிடுவது என்ற முடிவை எடுத்திருந்தால் தோல்விக்கான வாய்ப்பே அதிகம் என்பதையும் ஜோ பைடன் உணர்ந்திருக்க கூடும்.
அமெரிக்காவில் இடம்பெற்ற இப்படியான நிகழ்வுகள் இந்தியாவில் நடைபெற்றிருக்குமா என்பதை எண்ணிப்பார்க்க வேண்டியுள்ளது. மாநிலத்திலோ அல்லது மத்தியிலோ ஆட்சியில் இருக்கக் கூடிய ஒரு தலைவர் தான் போட்டியிலிருந்து விலகிக் கொண்டு அடுத்தவருக்கு வழி விடுகிறேன் என்று கூறுவாரா? யதார்த்தம் என்பது இல்லை என்பதுதான். அது உடல்நல குறைபாடாக இருக்கலாம், அல்லது நிர்வாகத் திறமையாக இருக்கலாம் அல்லது ஊழல் போன்ற குற்றச்சாட்டுக்களாக இருக்கலாம் அல்லது நீதிமன்ற உத்தரவு காரணமாக இருக்கலாம். அப்படியொரு சூழல் ஏற்படும் போது குடும்ப உறுப்பினர் ஒருவரை தமது சார்பில் நிற்க வைத்து அதற்கு அங்கீகாரம் பெறுவதே இந்தியாவில் நடைமுறையாக உள்ளது. இதுவே பெரும்பாலும் தெற்காசியாவின் நிலையும் கூட. இந்தியாவை பொருத்தவரை இதுவரையில் பா ஜ க மற்றும் இடதுசாரி கட்சிகள் ஆகியவற்றில் மற்றுமே தலைமைப் பொறுப்பில் குடும்ப உறுப்பினர்களை நியமித்து ஆட்சியை கையளிப்பது நடைபெறவில்லை. இந்தியாவில் பெரும்பாலான கட்சிகள் குடும்பங்களின் கட்டுப்பாட்டில் தான் உள்ளன என்பதே உண்மை. அபூர்வமாக குடும்ப உறுப்பினர் யாரும் சரியாக வரவில்லை என்றால் மிக மிக நம்பிக்கையான ஒருவரை ஆட்சியில் அமர்த்து திறைமறைவிலிருந்து ஆட்சியை நடத்துவதே வழக்கமாகவும் இருந்துள்ளது.
ஆனால், அமெரிக்க அதிபர் ஜோ பைடனோ, தனது உடல்நலக் குறைபாட்டை வெளிப்படையாக ஏற்றுக்கொண்டுள்ளார். தான் மீண்டும் கொரோனா நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் அறிவித்தார். இந்தியாவில் தலைவர்கள் உள்நாட்டிலோ அல்லது பெரும்பாலும் வெளிநாட்டிலோ சிகிச்சைக்கு செல்லும் போது கூட என்ன நோய் என்பது பொதுவெளியில் தெரிய வராது.
இந்தியா அமெரிக்கா ஆகிய இரண்டும் உலகின் முன்னணி ஜனநாயக நாடுகளாக இருந்தாலும், அமெரிக்காவில் இருக்கு ஜனநாயக முதிர்ச்சி இந்தியாவில் இல்லை. உலகின் மிகவும் பல வாய்ந்த ஒரு தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தலில் யாரை வேட்பாளராக நிறுத்துவது என்பது அமெரிக்காவில் இன்றும் மிகவும் வெளிப்படையாக நேர்மையான முறையில் ஜனநாயக ரீதியில் நடைபெறுகிறது.
உள்ளூர், மாவட்டம், மாநிலம் என்று படிப்படியாக வேட்பாளர்கள் தேர்வு நடைபெறும். கட்சி உறுப் பினர்கள் பலர் தேர்தலில் போட்டியிடுவதற்கான நியமனத்தைப் பெறுவதற்கான போட்டியில் இருப்பார்கள். முதலில் உள்ளூர் அளவில் நடைபெறும் தேர்தலில் அங்கீகாரம் கிடைக்க வேண்டும். பின்னர் அதற்கு அடுத்த கட்டம். பிறகு மாநில அளவிலான தேர்வு. இப்படி ஒவ்வொரு மாநிலத்திலும் நடைபெறும். இறுதியாக இரண்டு என்ற நிலை ஏற்பட்டு கட்சியின் தேசிய அளவிலான உறுப்பினர்கள் வாக்களித்து தமது கட்சியின் சார்பின் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பார்கள். இதெல்லாம் இந்தியாவில் சாத்தியமா? எந்தக் கட்சியாக இருந்தாலும் சரி ஜனநாயக முறையின் வேட்பாளர்களை தேர்வு செய்வது என்பது கிடையாது. அப்படியிருக்கும் போது அவர்கள் ஜனநாயகத்தை எப்படிப் பேணுவார்கள்?
அமெரிக்கா மாதிரி வல்லரசாக வேண்டுமென்றால் அங்குள்ளது போன்று ஜனநாயக விழுமியங்கள் மீதான நம்பிக்கையும் முதிர்ச்சியும் அவசியம்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings