தலையங்கம்
சிவா பரமேஸ்வரன்
நாளை (21) இலங்கையில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. அந்த தேர்தல் இலங்கையை யார் ஆள்வார்கள் என்பதற்கான தேர்தலாக இருந்தாலும், அதன் தாக்கம் இந்தியாவில் இருக்கும்.
புதிய ஜனாதிபதியாக வருபவர், இந்திய ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பாரா அல்லது சீனா ஆதரவு நிலைப்பாட்டை எடுப்பாரா, இல்லை பக்கசார்ப்பின்றி நடுநிலை வகிப்பாரா என்று பல கேள்விகள் இதில் உள்ளன.
இலங்கையில் ஆட்சிக்கு வருபவர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. குறிப்பாக தமிழக மீனவர்கள் தொடர்ச்சியாக எதிர்கொள்ளும் நெருக்கடிகள், தமிழகத்தின் தென் பகுதியிலிருந்து தொடர்ச்சியாக இலங்கைக்கு போதைப் பொருட்கள் கடத்தப்படுவது, தமிழக முகாம்களில் இலங்கை அகதிகள் தொடர்ந்து இருப்பது, நாகப்பட்டிணம்-காங்கேசந்துறை இடையே கப்பல் போக்குவரத்து, இலங்கையிலிருந்துதொடர்ந்து சிதம்பரம் கோவிலுக்கு வரும் சைவ அடியார்கள் என்று இந்த பட்டியல் நீளும்.
மிகவும் இக்கட்டான சூழலில் இலங்கை இருக்கும் நிலையில், அந்நாட்டில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுகிறது. இந்தியா மட்டுமில்லாமல், தமிழகத்திற்கும் இந்த தேர்தல் முக்கியமானது. தேர்தலில் பிரதானமாகப் போட்டியிடும் சிங்கள வேட்பாளர்கள் யாரும் ஈழத்தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்கப்போவதில்லை. மேலோட்டமாக உதட்டளவில் சில பசப்பு வார்த்தை களை சிங்கள அரசியல்வாதிகள் பேசினாலும், உளசுத்தியுடன் தமிழர்களுடன் அதிகாரங்களை பகிர்ந்துகொள்ள அவர்கள் விரும்பமாட்டார்கள்.
இவ்வளவுக்கு தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வை அளிக்கும் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தை அடுத்து, அது தொடர்பில் இலங்கையில் அரசியல் சாசனத்தில் திருத்தமும் 1987ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இதை நடைமுறைபடுத்த இந்தியா குரல்கொடுத்து வந்தாலும், அதற்கு தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த சிங்கள அரசியல்வாதிகள் செவிமடுக்கவில்லை. அவர்களை அதை நிறைவேற்றும்படி அழுத்தம் கொடுக்கவும் இந்திய அரசால் முடியவில்லை. எனவே அந்த உடன்படிக்கை எழுத்தளவில் மட்டுமே உள்ள நிலையில், தமிழர்கள் தொடர்ந்து நெருக்கடியான சூழலிலேயே உள்ளனர்.
இந்நிலையில் தான் இம்முறை இரண்டு தமிழ் வேட்பாளர் களத்தில் உள்ளனர். ஈழத்தமிழர்கள் தரப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்தரன் அங்குள்ள சில அரசியல் கட்சில், தமிழ் சிவில் சமூகம், தமிழ் பொது கட்டமைப்பு ஆகியவற்றால் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார்.
மறுபுறம் இலங்கையின் தேயிலை மற்றும் ரப்பட் தோட்டங்களில் தொடர்ந்து கொத்தடிமைகளாக இன்றளவும் வேலை செய்யும் இந்திய வம்சாவளி தமிழர்களின் வாழ்கை கொடுமையிலும் கொடுமை. இதை அங்குள்ள மலையகப் பகுதிகளுக்கு சென்று பார்த்தால் தெரியும். அவர்களின் வாழ்க்கையை மேம்படுத்தும் நோக்கில், மலையக அரசியலில் வளர்ந்து வரும் இளைஞர் மயில்வாகனம் திலகராஜ் போட்டியிடுகிறார்.
இந்த இரு தமிழர்களும் வெற்றிபெற போவதில்லை என்பது அவர்களுக்கும் தெரியும், அனைவருக்கும் தெரியும். அதேவேளை குறியீட்டளவில் அவர்களில் போட்டி மிகவும் முக்கியமானது. அடிப்படையில் தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கவும், அவர்களை தேர்தல் அரசியல் மூலம் ஒருங்கிணைப்பதுமே இதன் நோக்கம்.
ஆனால், இங்கு தமிழ் நாட்டில் ஈழத் தமிழர்கள் குறித்து நீலிக்கண்ணீர் வடிப்பவர்களுக்கு இதையெல்லாம் அறிந்துகொள்ளவோ, புரிந்துகொள்ளவோ நேரமில்லை, ஆரவமும் இல்லை. ஈழத் தமிழர்களின் சார்பில் நிறுத்தப்பட்டுள்ள பொது வேட்பாளருக்கு புலம் பெயர்ந்த நாடுகளில் பரந்துபட்டளவில் ஆதரவு உள்ளது. அதே புலம்பெயர்ந்த நாடுகளில் இருப்பவர்களிடம் ‘நிதியுதவி பெறுபவர்கள்’ என்று விமர்சிக்கப்படும் அரசியல்வாதிகள் இந்த இரு வேட்பாளர்களுக்கு ஆதரவாக தார்மீக ரீதியில் கூட ஒரு வார்த்தை பேசவில்லை.
இலங்கையில் ஒரு தேர்தல் நடைபெறுகிறது. அதில் இரண்டு தமிழர்கள் வேட்பாளர்கள் உரிமைகளை நிலநிறுத்தும் வகையில் போட்டியில் இருக்கிறார்கள் என்பது கூட ‘ஈழ அரசியல் வியாபாரிகள்’ என்று சமூக ஊடகங்களில் விமர்சிக்கப்படும் தமிழக அரசியல்வாதிகளுக்கு தெரியுமா என்பது கூட தெரியாது.
தமிழ் மக்கள் தமிழ் வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்று உதட்டளவிலான ஒரு அறிக்கை கூட தமிழக அரசியல்வாதிகளிடமிருந்து வரவில்லை. அவ்வளவு தான் அவர்கள்து ‘ஈழப் பற்று’.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings