தலையங்கம்
வாழ்வில் அனைத்து விஷயங்களிலும் கட்டுப்பாடு தேவை. அது வீட்டுக்குள்ளேயும் பொது வெளியிலும் அவசியம் தேவை. இது இன்றைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களுக்கும் பொருந்தும்.
ஊடக சுதந்திரம் என்ற பெயரில் வரைமுறைகள் மீறப்படுவதற்கு அனுமதிக்க முடியாது. இன்று அச்சு ஊடகங்களுக்கு என்று தேசிய அளவில் கண்காணிப்பு அமைப்பு ஒன்று உள்ளது. தணிக்கை என்பது கடுமையாக நடைமுறையில் இல்லாவிட்டாலும், அதிகார கட்டமைப்பில் அது உள்ளது. அதேவேளை அரச தொலைக்காட்சி மற்றும் வானொலிக்கு கட்டுப்பாடுகள் இருக்கும் நிலையில், தனியார் நிர்வகிக்கும் ஒலி/ஒளி ஊடகத்திற்கு அப்படியான தணிக்கை அல்லது கட்டுப்பாடு ஏதும் இல்லை. அவை சுயமாக தணிக்கையில் ஈடுபட வேண்டும் என்பது அரசின் வழிகாட்டு நெறிமுறைகள்.
ஆனால், சமூக ஊடகங்கள் முற்றாக எவ்விதமான கட்டுப்பாடுகள் அல்லது விதிமுறைகள் இன்றி செயல்படுகின்றன. சமூக ஊடக கணக்கு ஒன்றை தொடங்கவோ அல்லது அதை தொடங்கி அதில் பதிவுகளை மேற்கொள்ளவோ எந்த தடையோ அல்லது கட்டுப்பாடுகளோ இல்லை. அந்த நிலையே பல ஆபத்துக்களுக்கு வழிவகுக்கிறது.
உண்மைக்குப் புறம்பான தகவல்கள் பகிரப்படுதல், கட்டமைக்கப்பட்ட போலிச் செய்திகளை உலவ விடுவது, சமூகத்தில் பகையை ஏற்படும் வகையில் பதிவுகளைப் போடுவது, எதிர் கருத்து கொண்டவர்களை மிகவும் ஆபாசமான வகையிலும் இழிவான வகையிலும் தனிப்பட்ட ரீதியில் விமர்சனம் செய்வது, கருத்துக் கேட்பது என்ற பெயரில் அருவருக்கத்தக்க ஆபாசங்களை அரங்கேற்றுவது இவையெல்லாம் கட்டுப்படுத்தப்படாத சமூக ஊடகங்களில் நிலவும் அவலங்கள்.
அதற்கான சமூக ஊடகங்கள் முற்றாக முடக்கப்பட வேண்டும் அல்லது அதற்கு சமூகத்தில் இடமில்லை என்ற முரட்டுத்தனமான வாதத்தை நாம் இங்கு வைக்கவில்லை. சமூக ஊடகங்களில் தனி மனிதர் அல்லது அமைப்புகளை இலக்கு வைத்து திட்டமிட்ட வகையில் அவதூறுகளைப் பரப்பி அவர்களை சமூகத்தின் பார்வையில் இழிவுபடுத்தி, அந்த தனி நபர் அல்லது அமைப்பு அல்லது கட்சி போன்றவற்றை ஒழித்துக்கட்ட அதே ஊடகங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கு ஏராளமான உதாரணங்களைச் சொல்ல முடியும்..
பணத்தைப் பெற்றுக்கொண்டு ‘கண்டெண்ட்’ தருகிறேன் என்ற போர்வையில் தனக்குத் தெரியாத, அல்லது ஆதாரமில்லாத அல்லது போடும் பிஸ்கட்டுக்கு வாலாட்டும் நாய் போல வாங்கும் பணத்திற்கு ஏற்ற வகையில் அவதூறுகளைப் பரப்பும் அவலம் சமூக ஊடகங்களில் நிலவுகிறது. குறிப்பாக இது யூடியூபில் அதிகம்.. கடந்த சில நாட்களுக்கு முன்னர் திரைப்படத் துறையில் இருப்பவர்கள் குறித்து அதே துறையில் இருக்கும் ‘பயில்வான்’ ரங்கநாதன் ஒருவருடன் பேசியதாக கூறப்படும் உரையாடல் ஒன்று டிவிட்டர் அல்லது எக்ஸ் பக்கத்தில் வெளியானது.
அதன் உண்மைத் தன்மையைச் சுயாதீனமாக நம்மால் உறுதி செய்ய முடியவில்லை என்றாலும், அந்த உரையாடலை அவர் மறுக்கவில்லை. எனவே அந்த உரையாடல் ஆதாரம் பெறுகிறது. ஐதராபாதிலிருந்து உரையாடுவதாகக் கூறும் ஒரு நபர், தேமுதிக மற்றும் அந்த கட்சியின் தலைமையை கடுமையாக விமர்சிக்க வேண்டும் என்று கூறுவதற்கு இவர் உடன்படுகிறார். அதற்கான பணம் பதிவு முடிந்ததும் அளிக்கப்படும் என்றும் அந்த உரையாடலில் கூறப்படுகிறது.
இது ஏதோ தனிப்பட்ட ஒரு சம்பவமாகத் தெரியவில்லை. இதே போன்று யூ&டியூபில் கருத்துக்களைக் கூறி வரும் வேறு ஒருவரிடமும் இதே போன்று பேரம் பேசப்பட்டு அவரும் உடன்படுகிறார். இப்படியான இழி செயல்களைப் பலர் நேரடியாகவும் மறைமுகமாகவும் செய்கிறார்கள். அதே போன்று அனைத்துக் கட்சிகளும் இப்போது தமக்கென்று ஒரு ஐ.டி.விங் அதாவது தகவல் தொழில்நுட்ப பிரிவு என்று ஒரு அமைப்பை வைத்துக் கொண்டு தமது கட்சியின் சாதனைகளை எடுத்துக்கூறுவதைவிட அடுத்த கட்சிகள் அல்லது தலைவர்களைத் தனிப்பட்ட ரீதியில் கீழ்த்தரமாகத் தாக்குவதையே முழுநேர வேலையாகக் கொண்டுள்ளனர்.
தொண்டர்கள் மட்டுமே இப்படி கீழ்த்தரமாக நடந்துகொள்கிறார்களா என்று பார்த்தால், தலைவர்கள் பேசும் பேச்சு அதைவிட மோசமாக உள்ளது. ஒரு அரசியல் தலைவர் அனைவரையும் “வாடா, போடா” என்ற ரீதியில் மட்டுமே பொதுவெளியில் பேசுவதும், சமூக ஊடகங்களில் அடுத்தவர்களைத் தகாத வார்த்தைகளால் விமர்சிப்பதையும் தங்குதடையின்றி செய்கிறார்.
இப்படியான செயல்களை எப்படி அனுமதிக்க முடியும். முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது இயற்கையின் விதி. சமூக ஊடகங்களுக்கு கட்டுப்பாடு தேவைதான் என்பதில் பொதுவாக மாற்றுக்கருத்து இருக்க முடியாது. எதிலும் ஒரு கட்டுப்பாடு தேவை. கட்டுப்பாடற்ற எதுவும் ஆபத்தானவை என்பதை ஆட்சியாளர்கள் உணர்ந்தாலும், அதை தடுக்க காத்திரமான நடவடிக்கை ஏன் எடுக்கப்படவில்லை என்பதே கேள்வி.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings