தலையங்கம்
—-சிவா பரமேஸ்வரன்—-
குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்வதும், பார்ப்பதும், போக்சோ சட்டம் மற்றும் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின்படி குற்றமே என்று இந்திய உச்சநீதிமன்றம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு ஒன்ற வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பில் தலைமை நீதிபதி உட்பட நீதிபதிள் பல கருத்துக்களைத் தெரிவித்துள்ள தோடு, சட்டத்தில் சில மாறுதல்களை கொண்டுவரவும் உத்தரவிட்டுள்ளனர்.
மிகவும் முக்கியமாக நாட்டில் பாலியல் கல்வியின் அவசியத்தையும் நீதிபதிகள் வலியுறுத்தியுள்ளனர். இந்தியாவில் பாலியல் கல்வி குறித்த தவறான கண்ணோட்டம் உள்ளது என்பதையும், பெற்றோர், கல்வியாளர் உட்பட பல்வேறு தரப்பினரும், ‘பாலியல் கல்வி தொடர்பாக விவாதிப்பது சரியானதல்ல, பாரம்பரியத்துக்கு எதிரானது, தர்மசங்கடமான விஷயம், அது மேற்கத்திய நாடுகளின் கலாச்சாரம்’ என்ற பழமைவாத கண்ணோட்டத்தில் உள்ளனர் என்று அவர்கள் கூறியுள்ளதில் நியாமும் உள்ளது யதார்த்தமும் உள்ளது.
பாலியல் கல்வி என்பது எந்த வகையிலும், தவறானதோ அல்லது கலாச்சார மரபுகளுக்கு எதிரானதோ அல்ல, அது அறிவியில் ரீதியானது என்று கல்வியாளர்களும், மனநல ,உளவியல் வல்லுநர்களும் நீண்டகாலமாகவே கூறி வருகின்றனர்.
அப்படியான கல்வி காலத்தின் கட்டாயமும் கூட. உலகளவில் சமூக, பொருளாதார, இராணுவ, கல்வி மற்றும் இதர துறைகளில் வேகமாக முன்னேறி வரும் இந்தியா, இந்த விஷயத்தில் மட்டும் பின் தங்கியிருப்பது ஒரு பிற்போக்குவாத சிந்தனை என்பதற்கு வழி வகுக்கும்.
இந்திய கலாச்சாரங்களில் பாலியல் கல்வி நேரடியாகவும், மறைமுகமாகவும் புகட்டப்பட்டுள்ளது என்பது பல்வேறு ஆய்வாளர்கள் வரலாற்று தகவல்கள் மற்றும் கலை, இலக்கிய குறிப்புகள் மூலம் எடுத்துக்காட்டுகின்றனர். உலகிற்கே பாலியல் கல்வியை புகட்டிய நாடு இந்தியா என்றும், கஜுராஹோ உட்பட பல ஆலயங்களில், மக்கள் கண்டு, அறிந்து, புரிந்துகொள்ளும்படி அந்த வாழ்க்கை பாடம் சிற்பங்களாக வடிக்கப்பட்டுள்ளன என்றும் வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இலக்கியங்களிலும் பாலியல் அறிவு தொடர்பான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. இது தமிழ் தொடங்கி, பெரும்பாலும் இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் உள்ளன. எனவே இந்திய சமூகம் ஒரு அறிவார்ந்த, புரிதலுடன் கூடிய ஒரு சமூகமாக இருந்துள்ளது என்பதற்கு பல சான்றுகள் உள்ளன.
அவ்வகையில், இந்தியாவில் இன்றைக்கு நடைபெறும் பாலியல் வன்செயல்கள், கொடுமைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவற்றுக்கு பாலியல் கல்வி கற்கப்படாததும் ஒரு காரணமாக உள்ளது. அடிப்படையில் பாலியல் கல்வி ஆபாசமானது என்ற மன ரீதியான சிந்தனை உள்ளது. அது அடிப்படையில் மருத்துவ ரீதியானது. உடல் பாகங்கள், அவற்றின் வளர்ச்சி, அது உடல் மற்றும் உளரீதியாக ஏற்படுத்தும் மாற்றங்கள், தாக்கங்கள் ஆகியவற்றை உள்ளடக்கியது. இதை சிறு வயதிலிருந்தே கற்றுக்கொடுக்கும் போது, குறிப்பாக சிறுமிகள் மற்றும் பதின்மவயது பெண்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
இதன் மூலம் எது முறையானது, எது முறையற்றது என்ற புரிதல் கிடைக்கும் போது, அவர்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ள அது உதவும். மேலும், நெருக்கடிகள் ஏற்பட்டால் அதை உடனடியாக யாருடன் எப்படி பகிர்ந்துகொள்வது என்ற புரிதலும் அவர்களுக்கு ஏற்படும். சிறுவர்கள் மற்றும் இளைஞர்களுக்கும் அந்த அறிவு கிடைக்கும் போது, அவர்களின் மனம் தீய எண்ணங்கள் மற்றும் செயல்களின் பக்கம் செல்லாமல் தடுக்கவும் கூடும்.
பாலியல் கல்வி என்பது ஒருவகையில் பகுத்தறிவு. அவ்வகையில் பகுத்தறிவு கொள்கைகளை முன்னெடுத்து, அதன் அடிபடையில் ஆட்சியை நடத்திவரும் தமிழக அரசு இந்த விஷயத்தில் உடனடியாக ஒரு முன்னெடுப்பைச் செய்து நாட்டிற்கே முன்னுதாரணமாக இருக்க முடியும். இதை செய்யத் தவறினால், தமிழக அரசு ஒரு இளம் தலைமுறையினருக்கு பாலியல் விழிப்புணர்வை ஏற்படுத்த தவறியதான் அவப்பெயருக்கு ஆளாகும்.
பாலியல் கல்வி காலத்தின் கட்டாயம் என்பதை அரசு உணர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அது அறிவார்ந்த செயல்பாடாகவும் இருக்கும்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings