10.06.2024 மாலை மோடி தனது கூட்டணி அமைச்சரவைக்கு ஒவ்வொரு அமைச்சருக்குமான இலாக்காக்களை பகிர்ந்தளித்தார். பிரதமர் நரேந்திர மோடி மத்திய பணியாளர், பொது மக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள், அணுசக்தி, விண்வெளி, அனைத்து முக்கிய கொள்கை விவகாரங்கள் மற்றும் பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகளை தன் கையில் எடுத்துக் கொண்டார். முக்கிய இலாக்காக்களான பாதுகாப்புத்துறை, ராஜ்நாத்சிங்கிற்கும் உள்துறை அமித்ஷாவிற்கும் நெடுஞ்சாலைத்துறை நிதின் கட்கரிக்கும் நிதி மற்றும் கார்ப்பொரேட் விவகாரம் நிர்மலா சீதாராமனுக்கும் வெளிவிவகாரத்துறை ஜெய் சங்கருக்கும் சமூக நீதித்துறை வீரேந்திரகுமாருக்கும் புள்ளிவிவரம் மற்றும் திட்டமிடல் துறை ராவ் இந்தர்ஜித்சிங்கிற்கு, மாநிலங்களவை சுதந்திர அமைச்சராகவும் சட்டம் மற்றும் நீதித்துறை அருண்ராம் மேக்வாலுக்கு மாநிலங்களவை சுதந்திர அமைச்சகமாகவும் தங்கள் கட்சியின் முக்கியதர்களுக்கு அவர்கள் பார்த்தவற்றையே மீண்டும் கொடுத்துள்ளார். பியூஸ் கோயலுக்கு வணிகம், தொழில்துறை, தர்மேந்திரா பிரதானுக்கு கல்வி, அஷ்வினி வைஷ்ணவிற்கு ரயில்வேயும், எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஐ.டி., சர்பானந்தா சோனோவாலுக்கு துறைமுகம், கப்பல் துறையும் பூபேந்தர் யாதவிற்கு சுற்றுச் சூழல் துறையும், ஹர்தீப், பூரிக்கு பெட்ரோலியம், ஜிதேந்திரசிங்கிற்கு அறிவியலும் தொழில் நுட்பமும் போன்ற ஏற்கெனவே அவர்கள் பார்த்துக் கொண்டிருந்த துறைகள் தவிர சிலவற்றை கூடுதலாகவும் அல்லது குறைவாகவும் கொடுத்துள்ளார்.
பாஜகவிற்குள் புதிதாக சிவராஜ்சிங் சவுஹானுக்கு விவசாயமும் ஊரக வளர்ச்சியும் மனோகர்லால் கட்டாருக்கு மின்சாரமும் நகர்ப்புற வளர்ச்சியும் கொடுத்துள்ளார். அடுத்து பிஹாரைச் சேர்ந்த கூட்டணி கட்சியைச் சேர்ந்த ஜிதன்ராம் மாஞ்சிக்கு சிறு, குறு தொழில்களும், தெலுங்கு தேசம் கட்சியின் ராம்மோகன் நாயுடுவுக்கு விமானப் போக்குவரத்தும், ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் லாலன்சிங்கிற்கு பஞ்சாயத்து ராஜ், மீன்வளம், கால்நடை, பால்வளம், எனவும் சிராக் பஸ்வானுக்கு உணவு பதப்படுத்தல் துறையும் கொடுத்துள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த பாஜக எல். முருகனுக்கு, நாடாளுமன்ற விவகாரத் துறை, செய்தி விளம்பரத்துறையும் இணையமைச்சராக கொடுத்துள்ளார். கர்நாடகாவின் மதச்சாற்பற்ற ஜனதா தளத்தின் குமாரசாமிக்கு கனரகத் தொழில், எஃகு ஆகியவையும் ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தள அமைச்சரான லலான்சிங்கிற்கு, “மீன்வளம்“ துறையை கேட்டு வாங்குமாறு, தமிழ்நாட்டில் உள்ள அந்தக் கட்சியைச் சேர்ந்த மீனவர் தலைவர் ஆண்டன் கோம்ஸ் தங்கள் கட்சித் தலைமையிடம் சொல்லியிருந்தார். அதை அவர்கள் பெற்றுக் கொண்டு வந்தது தமிழ்நாட்டு மீனவர்கள் நலனுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.
கேரளத்தில் முதல் முறையாக ஒரு இடத்தில், திருச்சூரில், பாஜக வேட்பாளர் நடிகர் சுரேஷ் கோபி வெற்றியடைந்ததை ஒட்டி, அவருக்கு ‘பெட்ரோலியம், இயற்கை வாயு, சுற்றுலாத்துறை’ ஆகியவற்றிற்கான இணை அமைச்சராக நியமனம் கிடைத்துள்ளது. மேற்கண்ட அமைச்சர்கள் பதவியேற்பு நடத்தி இன்று தங்கள் தங்கள் இலாக்காக்களை கவனிக்கத் தொடங்கி விட்டார்கள். ஆனால் அனைவருமே மீண்டும் மோடி, -அமித் ஷா இருவரின் கட்டுப்பாட்டில் தான் இயங்க முடியும் என்ற யதார்த்தம் இருக்கிறது. மஹாராஷ்டிராவிலிருந்து சிவசேனாவை உடைத்துக் கொண்டு வெளியே வந்து பாஜக ஆதரவில் பாஜக கூட்டணியில் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, 7 தொகுதிகளில் வெற்றி பெற்ற தங்கள் கட்சிக்கு ஒரே ஒரு கேபினெட் அமைச்சர்கூட கொடுக்காமல், வெறும் இணை அமைச்சர் தானா? என்று பிரச்சனையை கிளப்பி விட்டார். அவர் பிஹாரைச் சேர்ந்த ‘ஹிந்துஸ்தான் அவாஸ் மோர்ச்சா’ வின் மாஞ்சிக்கு, ஒரே ஒரு எம்.பி. தான் வெற்றி பெற்று இருக்கிறார் என்றாலும், ஒரு கேபினெட் அமைச்சர் கொடுத்துள்ளார்களே? என்று சிக்கலான கேள்வியை எழுப்பியுள்ளார்.
இவ்வாறாக, ‘பெரும்பான்மை யைப் பெறாத நிலையில்’ பாஜக மக்களவையில் இருக்கும்போது, மற்ற கூட்டணிக் கட்சிகளை சார்ந்து இருக்கும் நிலையில், ஆளாளுக்கு ஒரு கோரிக்கையை கேட்பார்கள் என்பதும் அதை சமாளிக்க, பொறுமையும், விவேகமும் வேண்டும் என்பதும் அப்படிப்பட்ட விவேகத்தையும் பொறுமையையும் சமாளிக்கும் திறமையையும் பெற்றவர்களாக மோடியும் அமித்ஷாவும் இருப்பார்களா? என்பதும் எதிர்க்கட்சிகள் கேட்கும் கேள்வியாக இருக்கிறது
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings