சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலில், வைகுண்ட ஏகாதசி விழாவின், பரமபதவாசல் திறப்பு நடைபெற்றது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த நிகழ்வுக்காக, ஆண்டுதோறும் கோவிலுக்குள் சென்று சொர்க்கவாசல் கடக்கவும், சுவாமி தரிசனம் செய்யவும் பக்தர்களிடம் இருந்து கட்டணம் வசூலித்து வருகிறது இந்து சமய அறநிலையத்துறை.
இந்த ஆண்டும் பெருவாரியான பக்தர்கள், இந்த புண்ணிய நிகழ்வில் கலந்துகொள்ள, கட்டணம் செலுத்தி, நடுநிசியிலிருந்தே காத்துக்கொண்டிருக்கையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு அவருடைய குடும்பத்தினருடன் வந்ததால், பக்தர்களைக் கோவிலுக்குள் அனுமதிக்காமல் தடுத்திருக்கின்றனர். குறிப்பாக அமைச்சர் சேகர்பாபு, அங்கிருந்த பக்தர்கள், ஊடகவியலாளர்கள் என அனைவரையும் விரட்டியிருக்கிறார்.
அமைச்சர் சேகர்பாபு அவர்களின் குடும்பம் ஒரு புண்ணிய தினத்தன்று கோவில் நிகழ்வில் கலந்து கொள்ள பக்தர்களை அனுமதிக்காமல் அதிகார துஷ்பிரயோகம் செய்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். அனைத்துக்கும் ஒரு எல்லை இருக்கிறது. அமைச்சர் சேகர்பாபு அந்த எல்லையை மீறிச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
உடலில் எண்ணெய்யைப் பூசிக்கொண்டு மண்ணில் உருண்டாலும், ஒட்டுவதுதான் ஒட்டும் என்ற பழமொழியை அமைச்சருக்கு நினைவுபடுத்த விரும்புகிறேன். ஒரு புண்ணிய தினத்தன்று, பகவான் சன்னிதியில் அத்தனை பக்தர்களின் வெறுப்பையும், கோபத்தையும், சாபத்தையும் பெறும் வகையில் நடந்து கொண்டு, ரங்கநாதர் அருள் தருவார் என்று நம்பும் அமைச்சரைப் பார்த்தால் பரிதாபம்தான் வருகிறது, இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
This post was created with our nice and easy submission form. Create your post!