தலையங்கம்
இந்தியாவில் எஸ் குடியரசுத் தலைவர் பதவி என்பது சம்பிரதாய ரீதியான ஒன்று தான். நாட்டின் தலைவராக குடியரசுத் தலைவர் இருந்தாலும், ஆட்சி அதிகாரம் நாடாளுமன்றம் மற்றும் பிரதமர் தலைமையிலான அமைச்சரவையிடமே உள்ளது.
பொதுவாக இந்தியக் குடியரசின் தலைவர் பகிரங்கமாக பொதுவெளியில் தமது கருத்துக்களை வெளியிடுவதோ அல்லது அது குறித்து எழுதுவதோ மிக அபூர்வம். பொதுக் கூட்டங்கள் அல்லது அரச விழாக்களில் உரையாற்றும் போது கூட அவர்களது உரை மிகவும் சுருக்கமாக சம்பிரதாய ரீதியிலேயே இருக்கும்.
எனினும் தற்போதைய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அம்மையார் பெண்களுக்கு எதிரான வன்செயல்கள் மற்றும் ஊடகச் சுதந்திரம் குறித்து வெளிப்படையாக தெரிவித்துள்ள கருத்துக்கள் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளன. ஒரு பெண் என்ற வகையில் அவரது கருத்துக்கள் மிகவும் ஆழமாகவும் வேதனை நிறைந்த ஒன்றாகவும் உள்ளது. பெண்களுக்கு எதிராக நடைபெறும் பாலியன் வன்செயல்கள் குறித்து ஒரு நாட்டின் தலைவர் ஆழ்ந்த கவலை வெளியிட்டுள்ளது நிலைமை எவ்வளவு மோசம் அல்லது அபாயகரமாக உள்ளது என்பதை எடுத்துக்காட்டுகிறது.
நேரடியான அதிகாரம் குடியரசுத் தலைவரிடம் இல்லாவிட்டாலும், அவரது கருத்துக்கள், கவலைகள், கரிசனைகள் ஆகியவை மத்திய மாநில அரசுகளின் கவனத்தி ஈர்த்துள்ளன. அவை இது தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்கும் அல்லது எடுக்க வேண்டும்.
பெண்களின் பாதுகாப்பு தொடர்பில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வெளியிட்டுள்ள கவலைகளுக்கு அப்பாற்பட்டு ஊடகத்துறையில் நேர்மையும், வெளியிடும் செய்திகளில் உண்மைத்தன்மையும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
இது எந்தளவிற்கு சாத்தியம் என்பதில் பல கேள்விகள் உள்ளன. ஏனென்றால், உலகெங்கும் ஊடகங்கள் அரசியல் ரீதியாக, கொள்கை ரீதியாக, வர்த்தக ரீதியாக பிரிந்து பிளவுபட்டுள்ளன என்பது தான் யதார்த்தம். எந்த ஊடகமாகவது நாங்கள் நடுநிலையாக இருக்கிறோம், உண்மையை மட்டுமே உரைக்கிறோம் என்று சொன்னால் அதைவிட அப்பட்டமான பொய் இருக்க முடியாது. எனது 37 ஆண்டுகால ஊடக அனுபவம் அதற்கு சான்று.
எந்த ஊடகமும் முழுமையாக இதயசுத்தியுடன் உண்மையாக இருக்க முடியாத நிலை என்று நிலவுகிறது. அரசியல் தேவைகளுக்கு ஏற்றபடி வளைந்து, நெளிந்து, குனிந்து, குறுகி கூழைக் கும்பிடு போட்டால் மட்டுமே பத்திரிகை நடத்த முடியும் என்பது தான் யதார்த்த நிலை. இதன் காரணமாகத்தான் சமூக ஊடகங்கள் இன்று மாற்று ஊடங்களகாக பரவியுள்ளன. அங்கும் உண்மைக்கு இடமில்லை.
பக்கச்சார்ப்பின்மை என்பது ஊடகத்துறையில் இருக்க முடியாது அல்லது அதற்கான சூழல் இல்லை. எனினும் குடியரசுத் தலைவர் கூறியுள்ளபடி உண்மையை வெளியிட தயங்காமல் முன்வர வேண்டும். இன்று தேசிய ஊடகங்கள் என்று எடுத்துக்கொண்டால் அதன் முதலாளிகள் யார் என்பதை பொறுத்து அவை இடதா, வலதா அல்லது மையவாதம் என்ற போலிப் போர்வையா என்பது தெரிந்துவிடும்.
இன்று பெரும்பாலான ஊடகங்கள் அரசியல் கட்சிகளால் நடத்தப்படுகின்றன. இதை பட்டியலிட வேண்டிய அவசியம் இல்லை. தமிழ் நாட்டில் எந்த கட்சிகள் எந்த ஊடகங்களை நடத்துகின்றன என்பது அனைவருக்குமே தெரியும். இன்று சிறிய, பெரிய என்று அனைத்து கட்சிகளுமே ஏதோ ஒரு வகையில் ஊடகத்தில் கால்பதித்து தமது கருத்துக்களை உண்மை என்ற பெயரில் திணிக்கின்றன. இதற்கு அப்பாற்பட்டு ஐ டி விங் என்ற பெயரில் முழுநேர பிரச்சாரமும் சமூக உடகங்களில் நடைபெறுகிறது.
ஆளுங்கட்சியை பாதிக்கும் ஒரு விஷயம் என்றால் அதன் சார்புடையா அல்லது அவர்களால் நடத்தப்படும் ஊடகங்கள் மூடி மறைப்பது, எதிர்க்கட்சிகள் ஊதிப் பெரிதாக்குவதும், கூட்டணிக் கட்சிகளின் ஊடகங்கள் தொட்டும் தொடாமலும் எழுதுவது அல்லது கூறுவது என்று இந்த நிலையில் தான் இன்று ஊடகங்கள் உள்ளன.
இந்நிலையில் தான் குடியரசுத் தலைவரின் கருத்துக்கள் வலுப்பெறுகின்றன. உண்மையை உரக்கச் சொல்லுங்கள், பாரபட்சமின்றி செய்திகளை வெளியிடுங்கள் என்று அவர் வேண்டியுள்ளார். அதை செய்ய முடியும். ஆனால் செய்ய மனமுள்ளதா? நானும் இரு நாட்கள் பொருத்துப் பார்த்தேன், குடியரசுத் தலைவரின் வேண்டுகோள் குறித்து எந்த ஊடகமும் கருத்து வெளியிடவில்லை. அவர் அப்படி ஒரு கோரிக்கையை வைத்தார் என்றோடு நிறுத்திக்கொண்டனர்.
மேலை நாடுகளிலும் நிலை இது தான். ஊடகத்துறையின் உச்சம் என்று கருதப்படும் பிரித்தானிய ஒலிபரப்பு அமைப்பான பி பி சியை பலர் ஊடகத்துறைக்கு ஒரு உதாரணமாகக் காடுவார்கள். அது அரசின் நிதியுதவியில் நடைபெறும் அமைப்பாக இருந்தாலும், அவர்கள் தமது செய்தியில் பக்கச்சார்பின்றி இருப்பார்கள் என்று பொதுவாகக் கூறப்படுவது பகுதியளவில் உண்மை. அங்கும் பாரபட்சங்கள் உண்டு, இதை நான் அறிவேன். ஆனாலும் ஓரளவுக்கு வெளிப்படைத்தன்மை உண்டு.
அந்த ஓரளவேனும் இந்திய ஊடகங்களில் இருக்க வேண்டும். அரசின் தவறுகளைச் சுட்டிக்காட்டினால் அடுத்த நாள் விளம்பரம் நிறுத்தப்படும் என்றும், ஒரு அரசியல்வாதி கூப்பிட்டால் அந்த ஊடக நிறுவனத்தின் தலைவர் அல்லது முதலாளி ஓடோடிப்போய் வணக்கத்தைச் செலுத்தி வருவதெல்லாம் மாறப்போவதில்லை, ஆனால் அவை மாற வேண்டும்.
இந்தியாவிலும் ஒரு காலத்தில் சிம்ம சொப்பனமாக இருந்த இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை மற்றும் அதன் ஆசிரியராக இருந்த ராம்நாத் கோயங்காவை எளிதில் மறக்க இயலாது. அதுவும் இன்று நீர்த்து போய்விட்டாலும், அப்படியான நிலையை மீட்டெடுக்க முடியும். அந்த நோக்கில் தான் குடியரசுத் தலைவரின் கருத்தைப் பார்க்க வேண்டியுள்ளது. அவரின் வேண்டுகோளில் முற்றாக நியாயம் உள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings