தலையங்கம்
இந்தியாவில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட மோசமான பேரிடர் சம்பவம் வயநாடு பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவும் அது ஏற்படுத்திய தாக்கமும் ஆகும். அந்த பேரிடரின் முழுமையான கோர முகம் இன்னும் முற்றாக தெரியவில்லை. தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழையின் காரணமாக இடிந்து சரிந்து விழுந்த வீடுகளில் இருந்தவர்களில் சிலரே இதுவரை சடலமாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். மேலும் நூற்றுக்கணக்கானவர்கள் அந்த சரிவுகளில் புதையுண்டிருக்கலாம் என்றும், ஆறுகளில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்டு எங்கோ கரையொதுங்கியோ அல்லது மூழ்கியோ போயிருக்கலாம் என்ற அச்சம் அதிகரித்து வருகிறது.
வயநாடு நிலச்சரிவுகள் பல பாடங்களைக் கற்பித்துள்ளது என்று கருதலாம். இந்த பேரிடரில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலும் சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் பொருளாதார ரீதியாக பின் தங்கியவர்கள் என்று அங்குள்ளவர்களுடன் உரையாடிய போது தெரியவந்தது. இந்த தகவலானது அந்தப் பகுதிகளிலுள்ள தேயிலை, ரப்பர் மற்றும் இதர தோட்டத்துறைகளில் வேலை செய்பவர்களின் நிலையை எடுத்துக்காட்டுவதாகவும் உள்ளது. அந்த மக்களுக்கு இயற்கை பேரிடர்களால் ஏற்படக் கூடிய ஆபத்துக்கள் தொடர்பில் போதிய பாதுகாப்பில்லை என்பதையும் காண முடிகிறது.
இது அந்த மாநில அரசின் கவனக்குறைவா, அல்லது அவர்கள் வேலை செய்யும் தோட்ட நிறுவனங்களின் அக்கறையின்மையா அல்லது அதற்கு அப்பாற்பட்ட விஷயங்களா என்பதைத் தெளிவாக அறிய முடியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் உறுதியாக தெரிகிறது. வயநாடு நிலச்சரிவில் உயிரிழந்தவர்கள் வறிய நிலையில் இருந்தவர்கள் என்பது தெரிய வருகிறது. அவர்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் வாழ்வாதாரங்களை மேம்படுத்த என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ள என்ற கேள்வியும் இதில் உள்ளது. இந்த பேரிடர் மீட்பு நடவடிக்கைகள் முடிந்த பிறகு ஏராளமான கேள்விகள் எழும் என்பது திண்ணம்.
மேலும் ஒரு பரிமாணம் என்பது எந்தளவிற்கு இயற்கை வளங்கள் மேற்கு தொடர்ச்சி மலையில் பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளன என்பதையும் பார்க்க வேண்டும். தொடர்ச்சியாக சுற்றுலாத்துறைகாக செய்யப்படும் மேம்பாடுகள், பெருகி வரும் தேயிலைத் தோட்டங்கள், பாறைகளுக்காக மலைகள் உடைக்கப்படுவது, சட்ட ரீதியாகவும், சட்ட விரோதமாகவும் மண் அதிலும் குறிப்பாக செம்மண் அகழப்படுவது போன்ற பல அம்சங்கள் அடுத்துவரும் நாட்களில் விவாதிக்கப்படக் கூடும்.
வயநாடில் இடம்பெற்ற இந்த பேரிடர் மேற்கு தொடர்ச்சி மலையில் இதர பகுதிகளிலும் இடம்பெறாது எனபதற்கு எவ்விதமான உத்தரவாதமும் இல்லை. அந்த மேற்கு தொடர்ச்சி மலை பல்லுயிர் பெருக்கம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மண்வளத்தைப் பேணுதல் என பல அம்சங்களில் முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்த சமநிலை பாதிக்கப்படும் போது, இயற்கை பேரிடர்கள் தவிர்க்க முடியாதவை என்பது வல்லுநர்கள் கருத்து. மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியாகவுள்ள நீலகிரி மலைப்பகுதியும் பலவீனமான நிலையிலேயே உள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை. பருவகால மழையினால் ஏற்படும் நிலச்சரிவுகள் என்பது வழக்கமாக இடம்பெறும் ஒன்று தான் என்றாலும், அதீதமான பயன்பாடு மற்றும் அதன் காரணமாக கடும் மழை பெய்யும் போது ஏற்படும் தாக்கம் என்பது நீலகிரி பகுதியிலும் பேரிடராக மாறக்கூடும் என்ற அச்சமும் அபாயமும் உள்ளது.
தமிழ்நாடு அரசு வயநாடு நிலச்சரிவு மற்றும் ஏற்பட்டுள்ள பாதிப்புகளிலிருந்து அறிந்துகொள்ள வேண்டியது ஏராளம் உள்ளது. இயற்கை வளங்கள் இனியும் சுரண்டப்படாமல் இருப்பது இதில் மிகவும் முக்கியமானது. இங்கு வளங்கள் என்று சொல்லும் போது அது பல பரிமாணங்கள் கொண்டது. வயநாடு போலவே நீலகிரியும் அடர்த்தியாக மக்கள் வசிக்கும் ஒரு பகுதியாகும்.
அதுமட்டுமின்றி வயநாடில் இந்த இயற்கை பேரிடர் ஏற்பட்டதை அடுத்து அங்கு முன்னெடுக்கப்பட்ட மீட்பு நடவடிக்கை பல நாடுகளின் பாராட்டுக்களைப் பெற்றுள்ளது. மிகவும் விரைவாக அதியுயர் தொழில்நுட்பம் மற்றும் சிறப்பான மனிதவள பயன்பாடு ஆகியவற்றுக்கு வயநாடு மீட்பு ஒரு எடுத்துக்காட்டாக உள்ளது.
பேரிடர் மேலாண்மையும் முக்கியத்துவத்தை வயநாடு அனைவருக்கும் உணர்த்தியுள்ளது. அந்த துறைக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் அட்படம் பன்மடங்கு அதிகரிக்கப்பட வேண்டும் என்பதும் ஒரு பாடமாக உள்ளது. பேரிடர் மேலாண்மை மற்றும் மீட்பு என்பது உடனடி உணவு போன்றதல்ல. அதற்கு நீண்டகால பயிற்சியும் தொழில்நுட்ப ஆதரவும் தேவை. இதில் மத்திய மாநில அரசுகளுக்கு இடையேயான உறவு மிகவும் முக்கியமானது. வயநாடில் இயற்கை அனர்த்தம் ஏற்படக் கூடும் என்று முன்னரே எச்சரித்ததாக மத்திய அரசு கூறியது என்பதை மாநில அரசு மறுக்கிறது. இப்படியான விஷயங்களில் அரசியல் ஆகாது. மத்திய-மாநில அரசுகள் இரண்டுமே இதை உணர வேண்டும். இனியும் இந்தியாவில் வயநாடு போன்ற ஒரு பேரிடர் ஏற்படக் கூடாது என்றால் இந்த துர்ப்பாக்கிய பேரிடரிலிருந்து பாரபட்சமற்ற முறையில் அனுபவப் பாடங்களைக் கற்பது நல்லது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings