in

எதற்கெடுத்தாலும் வெளிநடப்பு ஆரோக்கியமான கலாச்சாரம் அல்ல

தலையங்கம்

ஒரு விளையாட்டு ரசிகன், ஆர்வலர் மற்றும் செய்தியாளர் என்ற வகையில் எனக்கும் வினேஷ் போகத் தகுதி நீக்கம் செய்யப்பட்டதில் வருத்தம் உள்ளது. பாரிஸ் ஒலிம்பிக்ஸில் மகளிருக்கான மல்யுத்த போட்டியின் இறுதிச் சுற்றில் வினேஷ் போகத் பங்குபெறவிருந்த நிலையில் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது நாடு முழுவதும் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

பிரதமர், தமிழக முதல்வர் உட்பட அனைவரும் அது தொடர்பில் தமது கரிசனைகளையும், உடனடியாக மேல்முறையீட்டு நடவடிக்கை தேவை என்றும் வலியுறுத்தினர். ஒரு விளையாட்டு வீரருக்கு பின்னர் ஒரு நாடே அணி திரள்கிறது என்பது மகிழ்ச்சியான விஷயம்.

ஆனால், அதிலுள்ள அரசியல் ஏற்புடையதல்ல. அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதான செய்தி கடந்த புதன்கிழமை (7) வெளியான நிலையில், இதற்கு ஏதோ மத்திய அரசே காரணம் என்று குற்றஞ்சாட்டி எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்பு செய்தன.

”இதில் சதித்திட்டம் உள்ளது, அவர் அந்த வலையில் வீழ்ந்துவிட்டார், அதற்கு பா ஜ க வே காரணம்” என்று காங்கிரஸ் கட்சியின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரன்தீப் சூரஜ்வாலா கூறியுள்ளது அபத்தமானது மட்டுமல்ல, ஆரோக்கியமானதும் அல்ல. காங்கிரஸ் கட்சியின் தலைவரான மல்லிகார்ஜுன் கார்கேயும் எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும் இந்திய ஒலிம்பிக் சங்கம் அவருக்கான வாதாட வேண்டும், அவருக்கு பக்கபலமாக அரசு நிற்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். இது நியாயமான ஒன்று.

நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனை எழுவதற்கு முன்னரே பிரதமர் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவர் பி டி உஷாவை தொடர்பு கொண்டு, வினேஷ் போகத் விஷயத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல் விடுத்திருந்தார் என்பதும் பொதுவெளியிலிருந்தது. இதை நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட அனைவரும் அறிந்திருந்தனர்.

வினேஷ் போகத் எதிர்கொண்ட பிரச்சனையின் முழு பின்னணியையும் நாடாளுமன்ற உறுப்பினர்களில் எவ்வளவு பேர் அறிந்திருந்தனர் என்பது தெரியவில்லை. அது தெரியாமலேயே எதற்கெடுத்தாலும் வெளிநடப்பு என்ற நிலைப்பாட்டை எதிர்க்கட்சியினர் எடுப்பது துரதிர்ஷ்டவசமானது, அது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு இழுக்கும் கூட.

வினேஷ் போகத் மீதும் இந்த விவகாரத்தில் தவறுள்ளது என்று விவரமறிந்தவர்கள் கூறுகின்றனர். அவர் அடிப்படையில் 53 கிலோ எடைப்பிரிவில் போட்டியிடும் வீராங்கனை. முன்னர் 58 கிலோ பிரிவில் போட்டியிட்டார், பின்னர் 53க்கு மாறினார். ஆனால் திடீரென பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க 50 கிலோ எடைப் பிரிவுக்கு மாறினார். அப்போதே பல கேள்விகள் எழுந்தன. அதுமட்டுமல்ல அவரது பயிற்சியாளர், உணவு மற்றும் ஊட்டச்சத்து நிபுணர், கைகால் பிடித்து விடுபவர் போன்றவர்களை அவரே தேர்ந்தெடுத்துள்ளார். அதாவது அவரின் விருப்பத்திற்கு இந்திய ஒலிம்பிக் சங்கமும், மத்திய அரசும் அனுமதியளித்தது. அதற்கான செலவையும் அரசு ஏற்றது.

ஆகவே வினேஷ் போகத்துக்கு மத்திய அரசு உரிய ஆதரவை வழங்கவில்லை என்று கூறி எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்திலிருந்து வெளிநடப்புச் செய்ததில் நியாயம் இருப்பதாகத் தெரியவில்லை. விளையாட்டு அமைச்சர் கொடுத்த விளக்கத்தையும் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி ஏற்கவில்லை. அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டதற்கு எதிராக மேல்முறையீடு செய்வதை விடுத்து, செலவு செய்யப்பட்ட தொகை குறித்து அமைச்சர் பேசுகிறார் என்று காங்கிரஸ் பேச்சாளர் கூறுவது அடிப்படையற்ற ஒன்றானது.

மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது என்பதே உண்மை. இதில் மேலும் ஒரு விஷயத்தையும் கவனிக்க வேண்டும். உடல் எடை காரணமாக பாரிஸ் ஒலிம்பிக்கிலிருந்து மேலும் சில விளையாட்டு வீரர்களும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். இத்தாலியின் எமானுவேலா லியூசியும் தகுதி நீக்கம் செய்யப்பட்டார். ஆனால் இத்தாலிய நாடாளுமன்றத்தில் இந்த விஷயம் தொடர்பில் எதிர்க்கட்சிகள் அமளி எதையும் ஏற்படுத்தியதாக தகவல் இல்லை.

மத்தியில் ஆளும் பா ஜ க அரசை கொள்கை ரீதியாக எதிர்க்க எதிர்க்கட்சிகளுக்கு ஆயிரம் வாய்ப்புகள் உள்ளன. நாடாளுமன்றத்திற்கு உள்ளே ஆதாரபூர்வமான தரவுகள், தகவல்கள், சட்ட நுணுக்கங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் அரசை ஒரு உலுக்கு உலுக்கலாம். தங்களின் ஆதாரங்கள் மறுக்க முடியாதவை என்று கூறி அரசை திணரடிக்கலாம். இந்திரா காந்தி பிரதமராக இருந்த போது மதுலிமாயி, மினு மசானி, ஜார்ஜ் ஃபெர்னாண்டஸ், அடல் பிஹாரி வாஜ்பாய், இரா செழியன், சந்திரசேகர் போன்ற உறுப்பினர்கள் அவருடன் கடுமையான வாதப்பிரதிவாதங்களை முன்னெடுத்தனர்.

அப்படி அனைத்து கட்சிகளிலும் திறமையான உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உள்ளனர். எனவே அரசை எதிர்த்து கேள்வி கேட்பது ஜனநாயகத்தை வலுப்படுத்தும். ஆனால் அவைக்குள்ளே அதை செய்யாமல் உப்பு சப்பு இல்லாத காரணங்களுக்கு வெளிநடப்பு என்ற நிலைப்பாட்டை எடுப்பது எதிர்க்கட்சிகளுக்கு எவ்வகையிலும் உதவாது.

நாடாளுமன்றத்தில் வெளிநடப்பு என்பது எதிர்த்து வாதம் செய்ய முடியாததின் வெளிப்பாடாகவே கருதப்படும். இது சட்டமன்றங்களுக்கும் பொருந்தும்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

காடே எங்களுக்கு சொந்தம் அதில் வளரும் பழமும் எங்களுக்கே சொந்தம்!

இரவுநேரத்தில் குடியிருப்பு பகுதிகளில் உலாவரும் சிறுத்தையால் பீதி