in

மொழி அரசியல் எடுபடாது என்பதை உணர்ந்துள்ளதா கர்நாடகா?

மக்கள் வாய்ஸ்

காலையில் அறிவிப்பு. மாலையில் திரும்பப் பெறுதல். சித்தராமையா ‘அந்தர் பல்டி’ என்றெல்லாம் கர்நாடக முதல்வர் மீது விமர்சனங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன.

மாநில வேலை வாய்ப்புகளில் இடை மற்றும் கடைநிலைப் பணிகள் 100% கர்நாடக மக்களுக்கே என்று அறிவித்த நிலையில், அதற்கு எழுந்த எதிர்ப்பு காரணமாக தனது சமூக ஊடக பதிவை அவர் நீக்க வேண்டிய நிலைக்கு ஆளானார்.

அம்மாநில அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்ட இந்த மசோதா சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பே நாடு தழுவிய எதிர்ப்பை சந்தித்தது. உள்ளூர் தொழிற்துறையினர் தொடங்கி தேசிய அமைப்புகள் வரை அரசின் இந்த மசோதாவை கடுமையாக விமர்சித்தன.

கர்நாடக அரசின் இந்த முடிவானது பாசிச சிந்தனை கொண்டது, பிற்போக்கானது என்று தொழில்சார் வல்லுநர் மோகன்தாஸ் பாய் சாடினார். தொழிலதிபர் கிரன்ஷா மஜும்தார் அரசின் இந்த முடிவு பொருளாதார பின்னடைவையே ஏற்படுத்தும் என்றார்.

சித்தராமையாவின் இந்த அறிவிப்பு வெளியனவுடனேயே ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயிடுவின் மகனும் மாநில அமைச்சருமான நரா லோகேஷ், கர்நாடகாவின் மொழிக் கொள்கை காரணமாக தொழில்கள் பாதிக்கப்பட்டால், அவர்கள் ஆந்திராவுக்கு வரலாம், தாங்கள் அவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து தொழில்வளத்தைப் பெருக்குவோம் என்று அறிவிக்க, கர்நாடக அரசு சற்று ஆடிப்போனது.

சமூக ஊடகங்களிலும் கர்நாடக அரசையும் மாநில முதல்வரையும் மக்கள் வறுத்தெடுத்தனர். பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் தாங்கள் கர்நாடகாவிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்படுமோ என்ற அச்சத்தை வெளிப்படுத்தின. இப்படி அடி மேல் அடி விழுந்த நிலையில், ஆடிப் போனது கர்நாடக அரசு. அதுமட்டுமல்ல, இந்த மசோதா நீதிமன்றத்தால் ரத்துசெய்யப்படும் வாய்ப்புகள் அதிகம் என்று சட்ட வல்லுநர்களும் எச்சரித்தனர்.

அதன் விளைவு, அந்த சட்ட மசோதா இப்போதைக்கு நிறுத்தி வைக்கப்படுவதாகவும், மேலதிகமாக கலந்து ரையாடல்கள் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மொழிசார் அரசியல் எடுபடாது என்பதை கர்நாடக அரசு உணர்ந்துள்ளது போல தோன்றுகிறது.

இந்த முன்னெடுப்பு மற்றும் பின்வாங்கலை அனைத்து மாநில அரசுகளும் ஒரு பாடம் அல்லது எச்சரிக்கையாக எடுத்துக்கொள்ள வேண்டும். மொழி ரீதியிலான இட ஒதுக்கீடு அளிக்க அல்லது அதன் அடிப்படையில் பாகுபாடு காட்டுவது என்பது சட்டத்திற்கு முரணானது மட்டுமல்ல அப்படியான ஒதுக்கீட்டிற்கு சட்டத்தில் வழியும் இல்லை.

ஒவ்வொரு மாநிலமும் தனித்துவமாக வளர்ச்சியடையும் போது, இந்தியா என்கிற தேசமும் வளர்ச்சியடையும். அதே போன்று இந்தியா என்ற தேசியக் கட்டமைப்பும் ஒற்றுமையும் இருந்தால் மட்டுமே மாநிலங்கள் வளமாக இருக்க முடியும். பிராந்தியவாதம், மொழிவாதம் என்பதெல்லாம் எக்காலத்திற்கும் எடுபடாது என்பதை அனைவரும் உணர்தல் நலம்.

மொழிப்பற்று இருக்க வேண்டும், உள்ளூரில் இருப்பவர்கள் அந்தந்த மொழியை அறிந்துகொள்ளுவது நலம் பயக்கும் என்பதிலெல்லாம் மாற்றுக்கருத்து இல்லை. இன்று உலகமே ஒரு குடியேறிய சமூகமாக உள்ளது. ஏன், கர்நாடகாவைச் சேர்ந்த அல்லது கன்னத்தை தாய் மொழியாகக் கொண்ட லட்ச கணக்கானவர்கள் இந்தியா முழுவதும் வேலை செய்கின்றனர். அது அனைத்து மாநிலத்தவருக்கும் பொருந்தும்.

இன்று இந்திய ஆட்சிப் பணி, காவல் பணி போன்ற உயர் பதவிகளில் ஒவ்வொரு மாநிலத்திலும் பல மாநிலத்தவர்கள் பணியாற்றுகின்றனர். மாநில ஆளுநராக வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களே உள்ளனர். ஆனால் கர்நாடாக இவையெல்லாம் உயர் பதவிகள், நாங்கள் கூறுவது சி மற்றும் டி பிரிவு என்ற சப்பைக்கட்டு எடுபடாது.

அதேவேளை கர்நாடகாவிலுள்ள தொழிற்துறையினரின் யதார்த்தமான முன்னெடுப்பையும் பாராட்ட வேண்டும். அவர்கள் மாநிலத்தின் நலன் கருதியே அந்த எச்சரிக்கையை விடுத்தனர்.

இதை தமிழ்நாட்டில் உள்ளவர்களும், குறிப்பாக அரசியல் கட்சிகளும் உணர வேண்டும். தமிழ் தெரியாவிட்டால் தமிழ் நாட்டில் வேலையில்லை என்ற வெற்று கோஷங்களை அவர்கள் கைவிட வேண்டும். மொழி என்பது கலாச்சாரம் மற்றும் பண்பாட்டு பாரம்பரியம் சார்ந்தது. அதை வியாபாரமாக்குவது என்பது ஆபத்தானது. அதைத்தான் கர்நாடக அரசு செய்து இப்போது ‘ஆப்பை பிடுங்கி குரங்கு’ நிலை போன்றாக்விட்டது என்ற விமர்சனமும் நையாண்டியும் சமூக ஊடகங்களில் காணப்படுகிறது.

அனைத்து மொழிகளும் மேலானவை. அவற்றுக்கென்று தனிச்சிறப்பு உண்டு. அதை நேசித்து போற்றி மகிழ வேண்டுமே தவிர அரசியல் இலாபத்திற்காக ஆபத்தான விளையாட்டில் இறங்கக் கூடாது என்ற பாடம் இதன் மூலம் உணரப்பட வேண்டும்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

கோவில் சொத்துக்களை பாதுகாக்க கோரி 21ம் தேதி இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

முதல்வரின் முகவரி திட்ட சிறப்பு அதிகாரியாக அமுதா ஐஏஎஸ் நியமனம்