தலையங்கம்
”இந்தியாவில் உணவு உற்பத்தி தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. ஒரு காலத்தில் உணவுப் பஞ்சம் மற்றும் உணவுப் பற்றாக் குறையை எதிர்கொண்ட நாடு இன்று உணவு மிகை நாடாக உள்ளது” என்று பிரதமர் மோதி பன்னாட்டு மாநாடு ஒன்றில் கூறியுள்ளார். இது பெருமைப்பட வேண்டிய விஷயம். அதில் மாற்றுக்கருத்து இல்லை.
அவர் உணவு உற்பத்தி என்று கூறியுள்ள விவசாயப் பொருட்கள் மட்டுமல்ல, மீன்பிடி, கால்நடை வளர்ப்பு, பால் உற்பத்தி போன்ற அனைத்தையும் உள்ளடக்கியது. உணவுக்கான உலகிடம் கையேந்த வேண்டியதில்லை என்பது குறித்து இந்தியா பெருமைப்படுவதில் நியாயம் உள்ளது. மாநில அரசுகளே அந்த பெருமைக்கு வித்திட்டன. குறிப்பாக சில மாநிலங்களின் பங்களிப்பு இது ஒப்பீட்டளவில் கூடுதல்.
இந்தியா உணவில் தன்னிறைவு அடைந்ததற்கு அப்பாற்பட்டு இன்று பெரிய ஏற்றுமதியாளராகவும், மிகை நாடாகவும் மாறியுள்ளதற்கு தமிழ்நாடு, மராட்டியம், ஆந்திரா, குஜராத், தெலங்கானா, மேற்கு வங்கம், கர்நாடகா, பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் பங்கு அதிகம்.
இந்தியாவின் இயற்கை அமைப்பு, தட்பவெப்ப நிலை, நீர் ஆதாரங்கள், மண்வளம் போன்றவை நாட்டின் பல பகுதிகளில் பல பொருட்களில் விளைச்சலுக்கு வழிவகுக்கிறது. அந்தந்த மாநில அரசுகளும், மத்திய அரசும் தொடர்ச்சியாக விவசாயத்திற்கு முக்கியத்துவம் அளித்துள்ளன. எனவே இன்று இந்தியா உணவு மிகை நாடாக இருக்கிறது என்றால் அதற்கு பாஜக அரசு மட்டுமே உரிமை கொண்டாட முடியாது.
தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்ட கொள்கைகள், தொழில்நுட்ப முன்னேற்றங்கள், மாநில அரசுகளின் பங்களிப்பு ஆகியவை மிகவும் முக்கியமானவை.
இவையெல்லாம் ஒரு புறம் இருந்தாலும், இந்தியாவின் உணவுத் தேவையை நிறைவேற்ற அயராது பாடுபடும் விவசாயிகள், மீனவர்கள், கால்நடைகளை வளர்ப்பவர்கள், தோட்டத் தொழிலா ளர்கள் போன்ற கோடிக்கணக்கானவர்கள் இன்னும் தங்களது உழைப்பின் பலனை முழுமையாகப் பெறாதவர்களாகவே உள்ளனர்.
இதற்கு மாநில மற்றும் மத்திய அரசு இரண்டுமே பொறுப்பு. விவசாயப் பொருட்கள் அறுவடை செய்யப்பட்ட பிறகு அவற்றை பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தி வைத்திருப்பதற்கு முழுமையான வசதி தமிழ்நாடு உட்பட எங்கும் இல்லை. மழைக் காலங்களில் நெல் மூடைகள் நனைத்து பெருமளவில் பயன்பாட்டுக்கு உதவாமல் அழிந்து போவது வாடிக்கையானது தான். தானியங்களைச் சேமித்து வைக்க பாதுகாப்பான கிடங்குகள் போதியளவில் இல்லை என்பது விவசாயிகளின் பல தசாப்த வேதனையாகவுள்ளது.
இலவசங்கள் என்ற போர்வையில் வாக்குவங்கி அரசியலுக்காக பல்லாயிரம் கோடி ரூபாய்களை மாநில அரசுகள் செலவிடுகின்றன. ஆனால், அதில் பகுதி யளவிலான தொகையை உணவுப் பொருட்களின் சேமிப்பு, பாரபட்ச முறையில் நியாயமான சந்தப்படுத்துதல், உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்களின் விநியோகத்திற்கான சங்கிலித் தொடரை மேம்படுத்துதல் போன்ற பல அம்சங்களில் மாநில மற்றும் மத்திய அரசுகள் பாராமுகமாகவே உள்ளன என்று விவசாயிகள் வருத்தப்படுவதில் நியாயம் இருக்கவே செய்கிறது.
ஒரு உதாரணமாக வாழை சாகுபடியை எடுத்துக்கொள்வோம். உற்பத்தியாகும் வாழைப்பழங்களில் சுமார் 20-25% விற்பனைக்கு உதவாமல் போகின்றன என்று தரவுகள் கூறுகின்றன. அதுமட்டுமின்றி வாழையிலிருந்து அதன் பட்டை போன்ற கழிவுகளை மீள் சுழற்சியின் மூலம் பயன்படுத்த தொழில்நுட்பங்கள் இருந்தும் அது நமது விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என்று இந்திய அரசே கூறுகிறது.
அதாவது நாளொன்று சுமார் 10 லட்சம் டன்கள் வாழை கழிவுகள் உரிய தொழில்நுட்பம் இல்லாத காரணத்தால் அதை வேறு வகையில் வர்த்தக ரீதியில் பயன்படுத்த முடியாமல் வீணாகின்றன மத்திய அரசின் அறிவியல் தொழில்நுப்ட அமைச்சின் இணையத்திலுள்ள ஒரு செய்தி கூறுகிறது.
அரசு அளிக்கும் மானியங்கள் குறித்தும் விவசாயிகளிடம் மாற்றுக்கருத்து உள்ளது என்பது கள ஆய்வுகளில் தெரியவருகிறது. இலவச மின்சாரம் போன்றவற்றை விட, உற்பத்தியைப் பெருக்கும் தொழில்நுட்பம், சந்தைப்படுத்துதல், மண்வளத்தைப் பாதுகாத்தல், குன்றாத நீர்வள ஆதாரங்களை மேம்படுத்துதல், இடைத்தரகர்களின் அராஜகங்களை ஒழித்து தமது பொருட்களைச் சுதந்திரமாக சந்தையின் விற்கும் உரிமை, மாவட்ட வேளான் மையங்கள் மற்றும் வேளான் பொறியியல் துறையை வலுப்படுத்துதல் போன்றவையே அவர்களின் மிகவும் முக்கியமான தேவையாக உள்ளது.
உணவு உற்பத்தியில் இந்தியா மிகை நாடாக இருப்பதால் மட்டுமே பெருமை வந்துவிடாது. அதை மேலும் பெருக்க விவசாயிகள், மீனவர்கள், பால் பண்ணையாளர்கள் போன்றவர்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும். உலகின் முன்னணி உணவுப் பொருட்கள் ஏற்று மதி என்ற நிலையை இந்தியா பெற வேண்டுமென்றால் விவசாயிகள் வாழ்க்கை மேம்பட வேண்டும்.
சும்மா விவசாயிகள் நலன் காக்கும் அரசு என்ற வாய்ச்சவடால் மட்டும் போதாது.
======== சிவா பரமேஸ்வரன்==========
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings