தலையங்கம்
போலித்தனமும் பித்தலாட்டமும் இந்தியாவில் அன்றாட வாழ்க்கையில் வாடிக்கையாகிவிட்டது. மக்கள் எதை சொன்னாலும் அல்லது செய்தாலும் ஏற்றுக்கொள்வார்கள், அவர்கள் சிந்திப்பது இல்லை, எனவே தாம் நினைதத்த தங்குதடையின்றி அரங்கேற்றலாம் என்ற நிலை உள்ளது. அதாவது இந்தியாவில் சாமானிய மக்கள் மட்டுமல்ல, மெத்தப் படித்த மேதாவிகளைக் கூட ஏமாற்றுவது சுலபம் என்று தொடர்ந்து நிரூபிக்கப்பட்டு வருகிறது.
ஒரு பக்கம் ‘குடிப்பழக்கம் உடல் நலத்தைக் கெடுக்கும். மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு’ என்று நேரடியாகவே மக்கள் நலனில் அக்கறை உள்ளது போன்று சமூக விழிப்புணர்வு விளம்பரங்கள், மறுபுறம் டாஸ்மாக் கடைகளில் விற்பனை ஏன் குறைந்தது என்று ஆய்வு. கொட்டும் மழை, கொளுத்தும் வெயில், சுழற்றும் சூராவளி என்று காலநிலை எப்படியிருந்தாலும் டாஸ்மாக் கடைகளுக்கு மட்டும் விடுமுறை இல்லை. ஏனென்றால் இன்று அரசின் நிதியாதாரங்களில் அடிப்படையாக உள்ளது சாராய விற்பனை மூலம் கிடைக்கும் வருமானம் தான் பல ‘நலத்திட்டங்களுக்கு’ உதவுகிறது.
குறைந்தபட்சம் தமிழகத்தைப் பொறுத்தவரை டாஸ்மாக் என்றால் என்ன என்ற புரிதல் உள்ளது. டாஸ்மாக்கை ஏதோ பல்பொருள் அங்காடி போன்று மூடி மறைத்து விளம்பரப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.
ஆனால், டாஸ்மாக்கில் மட்டுமல்ல, இந்தியாவின் பல மாநிலங்களில் அரசு மூலம் அல்லது அரச அனுமதி மூலம் விற்கப்படும் மதுவகைகள் ஏராளம். அவை உள்நாட்டு தயாரிப்புகள் மற்றும் வெளிநாட்டிலிருந்து ஆயத்தீர்வை கட்டி இறக்குமதி செய்யப்பட்டவை. இவையெல்லாம் சட்டத்திற்கு உட்பட்டே நடக்கின்றன. தீங்கு ஏற்படும் என்று தெரிந்தே அரசு, தனக்கு வருவாய் கிடைக்கும் என்ற நோக்கத்திற்காக அனுமதியளிக்கிறது.
நாட்டில் எல்லாமே முறைப்படிதான் நடக்கிறதா என்று நீங்கள் கேட்டால் அதற்கான பதில் என்னிடம் இல்லை. ஏனென்றால் தொலைக்காட்சிகளில் வரும் விளம்பரங்களைப் பார்க்கும் போது அந்த நம்பிக்கை ஏற்படவில்லை. ஏன் இந்த அவநம்பிக்கை?
நானறிந்த வகையில் இந்தியாவில் மதுபான விற்பனைக்கு நேரடியாக விளம்பரம் செய்ய முடியாது. மதுபானத்தின் பயன்பாடு மற்றும் குடிப்பதை அது ஊக்குவிக்கும் என்பதால் அந்த அனுமதி இல்லை என்பது அரச தரப்பில் வியாக்கியானம். ஆனால் மறைமுக விளம்பரங்கள் அனுமதிக்கப்படுமா? என்ற கேள்விக்கும் சரியான பதிலில்லை. சட்ட ரீதியாக மதுபானங்கள், சிகரெட் போன்ற பொருட்களுக்கு மறைமுக விளம்பரம் அல்லது போலி விளம்பரம் ஏட்டளவில் தடை செய்யப்பட்டுள்ளது என்றாலும், அது யதார்த்த ரீதியில் ‘ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது” கதை தான்.
சந்தையில் விற்கப்படாத அல்லது இல்லாத ஒரு பொருளைப் பிரபல மதுபானத்தின் பெயரில் விளம்பரம் செய்வது இன்றளவும் தொடருகிறது. பாரிசில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளைத் தொலைக்காட்சியில் பாக்கும் போது வரக்கூடிய விளம்பரங்களில் இந்த போலி விளம்பரங்கள் இடம்பெறுவதையும் காண முடிகிறது. எந்த விளையாடு போட்டியாக இருந்தாலும் சரி, அல்லது திரையுலக பிரமுகர்கள் பங்கேற்கும் நிகழ்வாக இருந்தாலும் சரி, அல்லது தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் குப்பை நிகழ்ச்சிகளாக இருந்தாலும் சரி, இந்த பித்தலாட்ட விளம்பரங்கள் அதில் இடம்பெற்றுவிடும்.
ஒரு விளம்பரம் பிரபல மதுபானத்தின் பெயரில் கிளப் சோடா அதாவது சாதாரண கோலி சோடா என்று விளம்பரப்படுத்துவது, அல்லது சீட்டுக்கட்டு (பிளேயிங் கார்ட்ஸ்) என்று விளம்பரம் செய்வது, அல்லது கண்ணாடி கோப்பைகள் என்று கூறுவது, இசைத்தட்டுகள் என்று கூறுவது என்று இந்த பட்டியல் நீளும். இது ஏதோ மதுபானம் விஷயத்தில் மட்டும் நடைபெறுவதில்லை. சிகரெட் விளம்பரங்களும் இப்படித்தான்.
தொலைக்காட்சி மற்றும் அச்சு ஊடகத்தில் பொதுவாக வரும் விளம்பரங்கள் அதிகாரிகளின் பார்வையிலிருந்து தப்பாது. அவர்கள் நேரடியாகப் பார்க்காவிட்டாலும், அவர்கள் பார்வைக்கு அது கொண்டுவரப்படும். ஆனால் என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்றாவது எந்த அதிகாரியாவது சந்தைக்குச் சென்று ஒரு குறிப்பிட்ட விளம்பரத்தில் காட்டப்படும் சீட்டுக்கட்டு அல்லது சோடா அல்லது கண்ணாடி கோப்பை அல்லது இசைத்தட்டுக்கள், அல்லது மென்பானங்கள் போன்றவை கடைகளில் யதார்த்த ரீதியில் விற்பனை செய்யப்படுகிறதா என்று பார்த்ததுண்டா? அல்லது எதற்கெடுத்தாலும் பொதுநல வழக்குகள் தொடரும் நபர்கள், இந்த மாதிரி மக்களை ஏமாற்றும் பித்தலாட்டங்கள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என்று கோரியதுண்டா என்றெல்லாம் ஆயிரம் கேள்விகளைக் கேட்க முடியும். விளம்பரத்தில் கூறியுள்ளபடி சந்தைக்கு சென்று அதை சோதித்துப் பார்க்க மாட்டார்கள் என்ற தைரியம் தான் போலி விளம்பரங்களுக்கு வழிவிட்டுள்ளது. மேலை நாடுகளில் மதுபான விளம்பரங்கள் சுருக்கமாகவும் நேரடியாகவும் இருக்கும்.
இப்போது இப்படியான போலி விளம்பரங்கள் அல்லது மறைமுக விளம்பரங்களைத் தடை செய்ய மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவுள்ளதாக செய்திகள் வந்துள்ளன. அது அவசியம் செய்யப்பட வேண்டும். ஆனால் அப்படியான முடிவெடுக்கும் போது அது உறுதியாகவும் இறுதியாகவும் இருக்க வேண்டும். “ஈயம் பூசின மாதிரியும் இருக்கனும், பூசாத மாதிரியும் இருக்கனும்” என்ற வகையில் இருக்கக் கூடாது. ஒன்று “முழுதாக நனைந்த பிறகு முக்காடு எதற்கு” என்று நேரடி விளம்பரங்களை அனுமதிக்க வேண்டும் அல்லது கிடுக்கிபிடி போட்டு மறைமுக விளம்பரங்களை நிறுத்த வேண்டும். இங்கும் இல்லை, அங்கும் இல்லை என்ற நிலைப்பாடு கூடாது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings