தேர்தல் தோல்வி மீண்டும் அதே பல்லவி
தமிழ்நாட்டில் இன்றைய நிலையில் தாங்களே வலுவான கட்சி என்று திமுக மீண்டும் நிரூபித்துள்ளது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அக்கட்சி பெரியளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்று தாமே ‘முதல்வன்’ என்பதை காட்டியுள்ளது. இந்த இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்த நிலையில் அங்கு திமுக – பாமக இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. இதில் பாமகவை விட இரு மடங்கு வாக்குகளை திமுக அதிகம் பெற்றது.
அந்த தொகுதியை தக்கவைத்துக்கொள்ள திமுக பெற்ற வாக்குகளில், களத்தில் மூன்றாவது கட்சியாக போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி பத்து வீதத்திற்கும் குறைவான வாக்குகளையே பெற்றது.
உடனடியாக தோல்வியை அடுத்து பழைய பல்லவிகள் மீண்டும் ஒலிக்க ஆரம்பித்தன. ஜனநாயகத்தை பணநாயகம் வீழ்த்திவிட்டது, பணம் கொடுக்காவிட்டால் திமுக வெற்றி பெற்றிருக்காது, அதிகார துஷ்பிரயோகம், வாக்காளர்கள் அச்சுறுத்தல் என்று வழக்கமாக கூறப்படும் கருத்துக்கள் வெளியாயின.
இந்தியாவின் தேர்தல் என்பது சத்தியம் மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு உட்பட்டு நடைபெறு வதில்லை என்பது ஊரறிந்த உண்மை. தேர்தல் அரசியலில் ஈடுபடும் எந்த அரசியல் கட்சியும் இதற்கு விதிவிலக்கல்ல. பணம் ஆறாக ஓடுகிறது என்பதை முற்றாக மறுக்க முடியாது. ஆனால், அந்த பணம் எங்கிருந்து வந்தது என்று எந்த கட்சியும் தைரியமாக ஆதாரத்துடன் கேட்காது. ஏனென்றால் இன்று எதிர்க்கட்சி நாளை ஆளுங்கட்சியாக மாறும் என்ற நம்பிக்கை அல்லது இருந்தார்கள் என்கிற உண்மை.
ஆனால், தோல்வியடைந்தவர்கள் கூறும் கருத்துக் களில் இம்முறை ஒரு சிறிய வித்தியாசத்தை காண முடிந்தது. அது மின்னணு வாக்குப் பதிவு முறை அல்லது இயந்திரத்தை குறை சொல்லுவது. ஏனென்றால் அதை மக்கள் சீரியசாக எடுத்துக்கொள்ளுவதில்லை.
ஒப்பீட்டளவில் வாக்குக்கு பணம் கொடுப்பது என்கிற அவலம் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா போன்ற தென் இந்திய மாநிலங்களில் தான் அதிகம் உள்ளது என்று தேர்தல் நோக்கர்கள் கூறுகின்றனர். பணம் மட்டுமல்ல மதுவும் கட்டுக்கடங்காமல் ஓடுவதும் இங்குதான்.
இந்தியாவில் இப்போது மிகவும் ஆபத்தான மலிவான கலாச்சாரம் ஒன்று புற்றுநோய் போன்று பரவ ஆரம்பித்துள்ளது. அதாவது வாக்குக்கு யார் பணம் கொடுத்தாலும் வாங்கலாம், அல்லது வாங்கிக் கொள்ளுங்கள், வாக்கை மட்டும் எமக்கு செலுத்துங்கள் அல்லது செலுத்தலாம் என்று அவலம் மக்கள் மனதில் வேறூன்ற ஆரம்பித்துவிட்டது.
முன்பெல்லாம் எந்த வாக்காளாரும் வாக்குக்கு பணம் கொடுங்கள் என்று கேட்டதில்லை. ஆனால் இப்போது கட்சியினர் பிரச்சாரத்துக்கு வந்தாலே, அவர்கள் அவ்வளவு கொடுத்தார்கள், நீங்கள் எவ்வளவு கொடுப்பீர்கள் என்ற கேள்வி தான் முதலாவதாக உள்ளது. கட்சிகளும் தமது கொள்கைகள், அதன் மூலம் மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள், நாட்டு நலன் போன்ற விஷயங்களை பெரிதாகப் பேசுவதில்லை.
அவர்களிடமும் ‘காசு கொடுத்தால் ஓட்டுப் போடுவார்கள்’ என்ற ஒரு எண்ணப்பாடு வந்துவிட்டது. 40-50 ஆண்டுகளுக்கு முன்னர், கௌரவம் மற்றும் மக்கள் நலன் என்ற எண்ணம் காரணமாக சொந்தப் பணத்தை செலவிட்டு தேர்தலை வேட்பாளர்கள் சந்தித்தனர். இன்று சொந்தமாக பணம் ஈட்டுவதற்காகவே அரசியல் என்ற நிலை உருவாகிவிட்டது.
இதையெல்லாம் பேசி ஆதங்கப்பட்டுக்கொவதை தவிர வேறு ஏதும் செய்ய முடியாது என்பதே யதார்த்தம். தேர்தலில் பணநாயகம் வென்றது என்று கூறுபவர்கள், சாதி அடிப்படையில் வேட்பாளர்களை நிறுத்துவது, குடும்ப அரசியல், சமூக விரோதிகளுக்கு அரசியல் அடைக்கலம் கொடுப்பது ஆகியவை பற்றியெல்லாம் ஏன் பேசுவதில்லை?
அடிப்படையில் தாங்கள் மட்டுமே உத்தரமர்கள், அடுத்தவர்கள் கயவர்கள் என்ற நினைப்பு நிலைத்துவிட்டது. ஆளுங்கட்சியோ, எதிர்க்கட்சியோ தேர்தலில் வெற்றி பெற்றது என்றால், தாங்கள் ஏன் தோல்வியடைந்தோம் என்பதை பாரபட்சமின்றி ஆராய்ந்து பார்க்க வேண்டும். அந்த ஆய்வு என்பது ஏதோ கட்சித் தலைமை அந்தப் பகுதிக்கு பொறுப்பான நபர் அல்லது நபர்களை மட்டுமே அழைத்துப் பேசுவதாகாது.
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தமது தோல்விக்கு என்ன காரணம் என்பதை பாமக மற்றும் நாதக ஆராய வேண்டும். வட மாவட்டங்களில் தாங்கள் இன்றி யாரும் அரசியல் செய்ய இயலாது என்று கூறும் பாமகவின் பிம்பம் தொடர்ந்து இடிந்து வருகிறது. மாற்று அரசியல் என்ற நாதக கோஷமும் மக்களிடம் எடுபடவில்லை. தோல்வியடைந்ததும் பழைய பல்லவிகளை மீண்டும் பாடாமல், மக்களின் ஆதரவைப் பெறுவதற்கு தீவிரமாக அவர்கள் செயல்பட வேண்டும்.
அதேவேளை இனி நம்மை வீழ்த்த யாருமில்லை என்று திமுகவும் எண்ணக் கூடாது.
மக்கள் எதிர்ப்பார்ப்பது ஒன்று தான். அது நேர்மையான, ஊழலற்ற, மக்கள் நலன் சார்ந்த ஒரு ஆட்சி. அது பொய்த்துவிடக் கூடாது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings