தயாரிப்பு: ஏஜிஎஸ் என்டர்டைன்மென்ட்
இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து
நடிகர்கள் : பிரதீப் ரங்கநாதன், அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர், இவானா, வி ஜே.சித்து, மிஷ்கின், கே.எஸ்.ரவிக்குமார். கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், இந்துமதி, தேனப்பன்
இசை லியோன் ஜேம்ஸ்
வெளியான தேதி 21.02 2025
நேரம் : 2 மணி நேரம் 37 நிமிடம்
ரேட்டிங் : 3/5
பொறியியல் கல்லூரியில் ‘பிரஷ்சர்களை’ வரவேற்கும் கல்லூரி முதல்வர் மயில்வாகனன் (மிஷ்கின்), இப்படியொரு மாணவனைப் போல நீங்கள் ஆகிவிடக்கூடாது என்று முன்னாள் மாணவரான டிராகன் என்கிற ராகவனை (பிரதீப் ரங்கநாதன்) உதரணமாகக் காண்பிக்கிறார். அவர் அப்படிச் சொல்ல என்ன காரணம்? 48 அரியர்களை வைத்திருந்த அந்த டிராகன், அப்படி வேறு என்ன செய்தார்? இப்போது அவர் என்னவாக இருக்கிறார்? என்பதுதான் கதை.
ப்ரதீப் 12-வதில் நன்றாக படித்து 96% எடுத்து மெரீட்டில் ஒரு கல்லூரிக்கு செல்கிறார். ஆனால், பள்ளியில் நன்றாக படித்த தன்னை ஒரு பெண் வேண்டாம் என சொல்லியதால் கல்லூரியில் அடாவடி செய்யும் பையனாக வலம் வருகிறார்.
அதோடு 48 அரியர் வைத்து அனுபமாவை காதலித்து கல்லூரி புரொபசர் மிஷ்கினை எதிர்த்து வாழ்க்கையையே வைப் செய்து வருகிறார். தன்னுடன் படித்தவர்கள் எல்லாம் வேலைக்கு போக, இவர் பிக்பாஸ் பார்த்து பொழுது கழிக்கிறார். இதனால் அனுபமா ப்ரதீபை ப்ரேக் அப் செய்ய, இனி அவளுக்கு முன்பு நன்றாக வாழ வேண்டும் என போலி சான்றிதழ் தயார் செய்து 3 லட்சம் சம்பளத்திற்கு வேலைக்கு செல்கிறார்.கெளதம் மேனன் மேனேஜராக இருக்கும் கம்பெனியில் வேலைக்குச் சேரும் அவருக்கு பெரிய தொழிலதிபரான கே.எஸ். ரவிக்குமாரின் மகளான கயாடு லோஹரை திருமணம் செய்ய நிச்சயம் ஆகிறது.
ஆனால், அதன் பின்னர் நடக்கும் ட்விஸ்ட்டு காரணமாக டிராகனின் வாழ்க்கை ரிட்டர்ன் ஆஃப் தி காலேஜ் ஆக மாற இரண்டாம் பாதியும் கிளைமேக்ஸ் காட்சிகளும் இளைஞர்களுக்கான பாடமாக அமைவது தான் இந்த டிராகன் படத்தின் கதை.
வாழ்க்கையில் எல்லாம் செட்டில் ஆக, ஒரு நாள் மிஷ்கின் ப்ரதீபை பார்த்து, போலி சான்றிதழ் குறித்து பேச, ப்ரதீப் காலில் விழுந்து கெஞ்சுகிறார். அப்போது மிஷ்கின் சரி 48 அரியரை இப்போது க்ளியர் செய், மீண்டும் உன் தப்பை திருத்து, நான் உன்னை விட்டு விடுகிறேன் என சொல்ல, பிறகு ப்ரதீப் என்ன செய்தார் என்பதே மீதிக்கதை. அதே போல கிளைமேக்ஸில் கொஞ்சம் சுத்தவிட்டு கருத்து சொல்லும் இடம் சற்றே சொதப்பல் தான். ஆனால், ஒட்டுமொத்தமாக படமாக இந்த டிராகன் என்டர்டெயின்மென்ட் பண்ணிக் கொண்டே இளைஞர்களுக்கு படிப்பு எந்தளவுக்கு முக்கியம் என்கிற பாடத்தை நடத்துவதால் கண்டிப்பாக பிரதீப் ரங்கநாதனுக்கு அடுத்த பிளாக்பஸ்டர் படமாக மாறும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. அடிக்கடி வரும் கேமியோ சர்ப்ரைஸ்களை விட கிளைமேக்ஸ் கேமியோ தரமான சம்பவம்.
பிரதீப் ரங்கநாதன் லவ் டுடே படத்திற்கு பிறகு இந்த படத்தில் நடிகராக ரொம்பவே மெருகேறியுள்ளார். முதல் சீனில் இருந்து கடைசி காட்சி வரை நடிப்பால் மிரட்டுகிறார். காமெடி காட்சிகளும், டைமிங்கும் ரசிகர்களை தியேட்டரில் சிரிக்க வைத்துக் கொண்டே இருக்கிறது. ஹீரோ மட்டும் சிரிக்காமல் மற்றவர்கள் அனைவரையும் சிரிக்க வைக்கும்படியான படமாக இந்த டிராகன் படம் உள்ளது.
பிரதீப் ரங்கநாதன் – மிஷ்கின் கெமிஸ்ட்ரி தான் படத்திற்கு பெரிய பலம். அனுபமா பரமேஸ்வரன், கெளதம் மேனன், கயாடு லோஹர், பிரதீப் ரங்கநாதனின் அப்பாவாக நடித்துள்ள ஜார்ஜ் மரியம் என நடிகர்கள் அனைவரையும் இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து வீணடிக்காமல் நல்லா பயன்படுத்தியிருப்பது சிறப்பு. அவருக்கு பக்க பலமாக இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸின் பாடல்களும் பின்னணி இசையும் இளைஞர்களை ஆட்டம் போட வைக்கின்றன. ஆக்ஷன் வேண்டுமா ஆக்ஷன் இருக்கு, பாட்டு வேண்டுமா பாட்டு இருக்கு, காமெடி வேண்டுமா காமெடி இருக்கு, கருத்து வேண்டுமா கருத்து இருக்கு என பக்கா பேக்கேஜ் படமாக கொடுத்திருக்கிறார் அஷ்வத் மாரிமுத்து.
GIPHY App Key not set. Please check settings