புதுடெல்லி:
மோடி தலைமையில் புதிதாக அமைய உள்ள மத்திய அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு 21ம் தேதி நடைபெற உள்ளதாகவும், பாஜக தனிப்பெரும்பான்மையுன் வெற்றி பெறாததால் அமைச்சரவையில் கூட்டணி கட்சிகள் முக்கிய துறைகளை கேட்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மக்களவைக்கான தேர்தல் 7கட்டங்களாக நடைபெற்று முடிவடைந்தது. 4ம் தேதி அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டன. குறைந்தபட்சம் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்று கூறிய பாஜக கூட்டணி 292 இடங்களை பெற்றது. கடந்த தேர்தலில் பெற்ற வாக்குகள் கூட இந்த முறை பெறவில்லை.
இந்தநிலையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியமைக்க உள்ளது. நாளை மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ளார்.
மோடி பதவி ஏற்ற பின், புதிதாக தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்கள் எம்பிக்களாக பதவி பிரமாணம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.ஜூன் 17ஆம் தேதி புதிதாக தேர்வு செய்யப்பட்ட எம்பிக்களின் பதவி பிரமாணம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எம்.பி.க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கும் இடைக்கால சபாநாயகர் யார் என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த முறை ஓம் பிர்லா மக்களவை சபாநாயகராக பதவி வகித்தார். இம்முறை கூட்டணி கட்சிகளான ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் ஆகிய இரண்டு கட்சிகளும் சபாநாயகர் பதவியை எதிர்பார்ப்பதாக கூறப்படுகிறது. பிரதமர், எம்.பிக்கள் ஆகியோர் பதவியேற்ற பின்னர் தான், சபாநாயகருக்கான பிரச்சினை விஸ்வரூபம் எடுக்கப்படும் என்கின்றனர்.
இதற்கிடையில் வரும் 21ஆம் தேதி மோடி அரசின் மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மொத்தம் 543 தொகுதிகள் இருக்கின்றன. இதில் 272 இடங்களை பிடிக்கும் கட்சியே மத்தியில் ஆட்சியை பிடிக்க முடியும். தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை எனில், கூட்டணியாக 272 இடங்களை பெற்றிருக்க வேண்டும். இது தேசிய ஜனநாயக கூட்டணி வசமுள்ளது. எனவே நம்பிக்கை வாக்கெடுப்பில் மோடி அரசு வெற்றி பெற்று அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சி செய்யும் எனத் தெரிகிறது.
அடுத்ததாக அமைச்சரவையில் இடம் வேண்டும் என்று கூட்டணி கட்சிகள் ஆர்வம் காட்டி வருகின்றன. தெலுங்கு தேசம் கட்சிக்கு சுகாதாரம், ஊரக வளர்ச்சி, போக்குவரத்து, வேளாண்மை, ஐடி, நீர்வளத்துறை ஆகிய துறைகளை சந்திரபாபு நாயுடு கேட்டுள்ளார். மொத்தம் 3 கேபினட், 2 இணை அமைச்சர் பதவிகள் வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார். ஐக்கிய ஜனதா தளத்திற்கு 3 கேபினட் மற்றும் 2 இணை அமைச்சர்கள் பதவி வேண்டும் என்று நிதிஷ் குமார் கோரியுள்ளார். இதுதவிர பிகார் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும் என்றும் கேட்டுள்ளாராம். இதுதவிர மதச்சார்பற்ற ஜனதா தளம், லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகளும் இடம் கேட்டு காத்திருக்கின்றன.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings