சென்னை
பகுஜன் சமாஜ் கட்சி தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் பெரம்பூரில் உள்ள அவரது வீட்டின் அருகே வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தமிழகத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆம்ஸ்ட்ராங் படுகொலைக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ்நாடு முதல்வர்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியையும் பெரும் வருத்தத்தையும் அளிக்கிறது. கொலையில் சம்பந்தப்பட்டவர்களைக் காவல்துறை இரவோடு இரவாகக் கைது செய்திருக்கிறது.
ஆம்ஸ்ராங்கை இழந்து வாடும் அவரது கட்சியினர், குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் என அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, வழக்கை விரைவாக நடத்தி, குற்றவாளிகளுக்குச் சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத்தரக் காவல்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
மாயாவதி
பகுஜன் சமாஜ் கட்சி தேசிய தலைவர் மாயாவதி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், தமிழ்நாடு பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவரான கே. ஆம்ஸ்ட்ராங், சென்னையில் அவரது வீட்டின் வெளியே கொடூரமான முறையில் கொல்லப்பட்டது மிகவும் வருந்தத்தக்கது மற்றும் கண்டனத்திற்குரியது. தொழில்ரீதியாக ஒரு வழக்கறிஞரான அவர் மாநிலத்தில் வலுவான தலித் குரலாக அறியப்பட்டார். மாநில அரசு குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும்” என்று மாயாவதி குறிப்பிட்டுள்ளார்.
சென்னை வருகிறார் மாயாவதி
மேலும் மிகவும் வேதனைக்குரிய இச்சம்பவத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு நாளை (ஞாயிறு) சென்னைக்கு நேரில் சென்று ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்த திட்டமிட்டுள்ளேன். அவருடைய குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவுள்ளேன். இத்தருணத்தில் அனைவரும் அமைதியையும், கட்டுப்பாட்டையும் கடைப்பிடிக்குமாறு வேண்டுகோள் விடுக்கிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
ராகுல்காந்தி
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொடூரமான மற்றும் அருவருக்கத்தக்க வகையில் கொலை செய்யப்பட்டிருப்பது மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அவரது குடும்பத்தினர், நண்பர்கள், ஆதரவாளர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழக காங்கிரஸ் தலைவர்கள் மாநில அரசுடன் தொடர்ந்து தொடர்பில் உள்ளனர். குற்றவாளிகள் விரைவில் சட்டத்தின் முன்பு நிறுத்தப்படுவதை அரசு உறுதி செய்யும் என்று நான் நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
தொல்.திருமாவளவன் எம்பி
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், எம்பியுமான தொல். திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் அன்புச் சகோதரர் ஆம்ஸ்ட்ராங்கை சமூகவிரோதக் கும்பல் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்த தகவல் மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. தாங்கொணாத் துயரத்தை அளிக்கிறது.
சமூக விரோதக் கும்பலின் கோழைத்தனமான இந்தக் கொடூரத்தை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் மிக வன்மையாகக் கண்டிக்கிறோம். குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாகக் கைதுசெய்து குண்டர்தடுப்புக் காவலில் சிறைப்படுத்த வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறோம்.
அவருடைய மறைவு ஒடுக்கப்பட்ட சமூகத்திற்கு நேர்ந்த பேரிழப்பாகும். அவரை இழந்து வாடுகிற குடும்பத்தினருக்கும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். அன்புச் சகோதரர் ஆம்ஸ்ட்ராங்குக்கு எமது செம்மாந்த வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்” எனவும் தெரிவித்துள்ளார்.
த.வெ.க. தலைவர் விஜய்
நடிகரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் திரு. ஆம்ஸ்ட்ராங் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது. ஆம்ஸ்ட்ராங் அவர்களைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும் அவரது கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இது போன்ற கொடும் குற்றச் சம்பவங்கள் இனி நடைபெறாமல் இருக்கத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தமிழக அரசு தீவிரமாக முன்னெடுக்க வேண்டும். சமரசம் இல்லாமல் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டி அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
சீமான்
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. தமிழ்நாட்டின் தலைநகரிலேயே தேசிய கட்சியின் மாநிலத் தலைவருக்கே உயிருக்கு பாதுகாப்பில்லாத சூழல் நிலவுகிறது என்றால் திமுக ஆட்சியில் சாதாரண பொதுமக்களுக்கு என்ன பாதுகாப்பு இருக்க முடியும்? தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு எந்த அளவிற்கு சீரழிந்துள்ளது என்பதையே காட்டுகிறது. காவல்துறையை தமது நேரடிக் கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் ஐயா மு.க.ஸ்டாலின் என்ன பதில் கூறப்போகிறார்? இதுதான் இந்தியாவே திரும்பிப்பார்க்கும் திராவிட மாடலா? இதுதான் முதலமைச்சர் கூறிய எந்த கொம்பனும் குறைசொல்ல முடியாத ஆட்சியா? என்ற கேள்விகள் ஒவ்வொரு சாமானியன் மனதிலும் எழுகிறது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத்தலைவர் சகோதரர் ஆம்ஸ்ட்ராங் மறைவால் துயருற்றுள்ள அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், அரசியல் நண்பர்களுக்கும், பகுஜன் சமாஜ் கட்சி தொண்டர்களுக்கும் என்னுடைய ஆறுதலைத்தெரிவித்து துயரில் பங்கெடுக்கின்றேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவரது மறைவு பட்டியலின மக்களுக்குப் பேரிழப்பாகும்.
ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கூலிப் படையினரால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings