பென்னாகரம்:
தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தை அடுத்த ஏரியூர் அருகே வத்தல்பட்டி கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் அரசுக்கு சொந்தமான நத்தம் புறம்போக்கு இடத்தில் வீடு இல்லாதவர்களுக்கு இடம் ஒதுக்கப்பட்டு கடந்த 25 ஆண்டுகளாக அங்கு குடியிருந்து வருகின்றனர்.
இந்த வீடுகளுக்கு பட்டா இல்லாததால் இந்த கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் கடந்த 27ம் தேதி முதல் தாசில்தார் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் சாந்தி தலைமையில் நடந்த ஜமாபந்தியில் மனு அளித்தனர் . அப்போது வத்தல்பட்டி கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை என்பவரது மனைவி சந்திரா (47), இவர்களுக்கு மூன்று மகன்கள் உள்ளனர். கணவன் இறந்து 22 ஆண்டுகளான நிலையில் அந்த காலி இடத்தில் 25 வருடமாக மூன்று மகன்களை வைத்துக்கொண்டு குடிசை அமைத்து வாழ்ந்து வந்துள்ளார்.
இந்த குடிசை வீட்டிற்கு பட்டா கேட்டு பென்னாகரத்தில் நடைபெற்ற ஜமாபந்தியில் மாவட்ட கலெக்டரிடம் சந்திரா மனு அளித்துள்ளார். மனுவை பரிசீலனை செய்த கலெக்டர் குடும்ப அட்டை ஆதார் கார்டு, மின்சாரம் , வீட்டு ரசீது உள்ளிட்டவைகள் சரியாக இருந்ததால் உடனடியாக அந்த இடத்திற்கு பட்டா வழங்க கடந்த 27ஆம் தேதி உத்தரவிட்டார்.
உத்தரவின் பேரில் 28 ஆம் தேதி விஏஓ மற்றும் நில அளவையர் இருவரும் வீட்டை அளந்து பட்டா வழங்க வந்தபோது சந்திராவின் உறவினர்களான 10 பேர் கொண்ட கும்பல் இந்த நிலம் தங்களுக்கும் உரிமை உள்ளது. இதை யாரும் அளக்க கூடாது என அரசு அதிகாரிகளை தகாத வார்த்தையால் பேசியதால் பணியை நிறுத்திவிட்டு அரசு அதிகாரிகள் பாதியிலேயே திரும்பி சென்றனர்.
இந்த நிலையில் திடீரென வந்த 10 பேர் கொண்ட கும்பல் வீட்டை இடித்து குடிசையை தரைமட்டம் செய்ததாக கூறப்படுகிறது. வீட்டிலிருந்த கட்டில், பீரோ, துணி மணிகள், சமையல் பாத்திரங்கள், கேஸ் உள்ளிட்டவை அனைத்தும் வீட்டினுள் புதைந்து சேதமடைந்துள்ளது. மேலும் தடுக்க சென்ற சந்திராவையும் 10 பேர் கொண்ட கும்பல் தாக்கியதில் மண்டை உடைபட்டு பென்னாகரம் அரசு தலைமை ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்த நிலையில் சந்திராவின் இரண்டாவது மகன் ஆறுமுகம் ஏரியூர் போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் வீட்டை இடித்த மகிபாலன், ராஜமாணிக்கம், சதாசிவம் ஆகிய மூன்று பேரை கைது செய்து தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.
இதில் நான்கு பெண்கள் உட்பட ஏழு பேர் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கில் ஏழு பேரை போலீசார் தேடி வருகின்றனர். தற்போது பாதிக்கப்பட்டோர் உடமைகள் ஏதுமின்றி நிற்கதியாக தெருவில் நிற்கும் பரிதாப நிலமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறுகையில். அராஜகத்தில் ஈடுபட்ட 10 பேர் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் நிற்கதியாக தெருவில் நிற்கும் சந்திராவின் குடும்பத்திற்கு உடனடியாக வீடு கட்டி கொடுத்து பட்டா வழங்க ஆவணம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 25 ஆண்டுகளாக புறம்போக்கு இடத்தில் குடியிருந்து வரும் இடத்திற்கு சொந்தம் கொண்டாடி 10 பேர் கொண்ட கும்பல் வீட்டை இடித்து அடித்து நொறுக்கி தரைமட்டமாகிய சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings