in

12 ராசி யேர்களுக்கு 2025ம் ஆண்டு எப்படி இருக்கும்…? (பாகம் 2)

பாகம் 2

2025ம் ஆண்டில் நாம் அடியெடுத்து வைக்கிறோம். இதுவரை சாதித்த சாதனைகளை மென்மேலும் சாதிக்கவும், சோதனைகளை சாதனைகளாகவும் மாற்றும் எண்ணத்துடன் அடியெடுத்து வையுங்கள். 12 ராசிகளுக்கும் என்னென்ன நன்மைகள் ஏற்படும், தீமைகளை தவிர்ப்பது எப்படி என்பதை இதோ காணலாம். இது ஜோதிரால் கணிக்கப்பட்டது…

துலாம்:

துலாம் ராசி நேயர்களே… எண்ணங்கள் ஈடேறக்கூடிய ஆண்டு. நல்லவை தொடர நாவடக்கம் முக்கியம். பணியிடத்தில் எதிர்பார்த்த ஏற்றமும் மாற்றமும் கைகூடி வரும். உயரதிகாரிகள் ஆதரவு உண்டு. சிலருக்குப் பதவி உயர்வுடன் இடமாற்றம் வரலாம். புதிய முயற்சியாக எடுக்கும் காரியங்களில் ஜெயம் உண்டாகும். வெளிநாடு செல்லும் வாய்ப்பு வரும்போது நேர்மையான வழிமுறைகளைக் கையாளுங்கள். குடும்பத்தில் குழப்ப சூழல் நீங்கி, நிம்மதி நிலவும். பெற்றோர், பெரியோர் உடல்நலம் சீராகும். வாரிசுகளால் பெருமை உண்டு. வாழ்க்கைத் துணையுடன் வீண் விவாதம் வேண்டாம். வரவு சீராக இருக்கும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. தொழிலில் சீரான வளர்ச்சி உண்டு. அயல்நாட்டு வர்த்தகத்தினால் ஆதாயம் உண்டு. ரியல் எஸ்டேட்டில் அனுபவம் இன்றி இறங்க வேண்டாம். அரசுத்துறையினர்க்கு அனுகூல சூழல் நிலவும். அலுவலகத்தில் வீண் களியாட்டம் தவிருங்கள். பணத்தைக் கையாள்வதில் கவனம் முக்கியம். அரசியல் சார்ந்தவர்கள் ஆதரவு நிலைக்கும். பொது இடங்களில் பேசும்போது நிதானம் தேவை. அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனைகளைக் கேளுங்கள். கலைஞர்கள், படைப்புத்துறையினர், ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து செயல்படுங்கள். மாணவர்கள் அதிகாலைப் படிப்பைப் பழக்கமாக்குங்கள். வாகனத்தில் கவனச் சிதறல் கூடாது. அடிவயிறு, கழிவு உறுப்பு, சுளுக்கு உபாதைகள் வரலாம். லக்ஷ்மி நரசிம்மர் வழிபாடு நன்மை சேர்க்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசி நேயர்களே… தன்னம்பிக்கை அதிகரிக்கும் ஆண்டு. அலுவலகத்தில் உங்கள் திறமை உரியவர்களால் உணரப்படும். சக ஊழியர்களிடையே செல்வாக்கு உயரும். எதிர்பார்த்த இடமாற்றம், உயர்வுகள் பொறுமையாக இருந்தால், நிச்சயம் கைகூடிவரும். புதிய பணி தேடுவோர், வருவதை ஏற்றுத் திறம்படச் செயல்பட்டால், எதிர்காலம் ஏற்றமாகும். வீட்டில் சுமுகமான சூழல் நிலவும். உடன்பிறந்தோரிடம் வீண் விவாதங்களை தவிருங்கள். வாழ்க்கைத் துணையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். திருமணம், மகப்பேறுக்காக காத்திருப்போர் குலதெய்வத்தை கும்பிடுங்கள். வீடு, வாகனம் புத்துப்பிக்க, வாங்க வாய்ப்புகள் வரும். தெரியாத நபரை நம்பி எந்த சமயத்திலும் எந்தத் தொகையும் கொடுக்க வேண்டாம். அரசுத்துறையினருக்கு சாதகமான சூழல் நிலவும். சிலருக்கு இடமாற்றத்துடன் பதவி உயர்வு வரலாம், தவிர்க்காமல் ஏற்பது நல்லது. அரசியலில் உள்ளோர் செல்வாக்கு நிலைக்கும். முகஸ்துதி நபர்களை உடனே விலக்குங்கள். எதிர்பாலரிடம் எல்லை வகுத்துப் பழகுங்கள். கலைஞர்கள் திறமைக்கு ஏற்ப வாய்ப்புகள் தேடிவரும். உடனிருப்போருடன் உரசல் தவிருங்கள். மாணவர்கள் மறதியை விரட்டினால், மதிப்பும் மதிப்பெண்ணும் உயரும். இரவுப் பயணத்தை இயன்றவரை தவிருங்கள். ஒற்றைத் தலைவலி, அஜீரணம், தூக்கமின்மை உபாதைகள் வரலாம். முருகன் வழிபாடு முன்னேறச் செய்யும்.

தனுசு:

தனுசு ராசி நேயர்களே… அமைதியாகச் செயல்பட்டால் ஆனந்தம் அதிகரிக்கும் ஆண்டு. அலுவலகத்தில் திட்டமிடலும் நேரம் தவறாமையும் முக்கியம். உடனிருப்போர் குறையை பெரிதுபடுத்த வேண்டாம். பணத்தைக் கையாள்வதில் நிதானம் அவசியம். மேலதிகாரிகளிடம் பேசும்போது துணிவை விட பணிவே நல்லது. குடும்பத்தில் சீரான போக்கு நிலவும். தம்பதியர் மனம்விட்டுப் பேசுங்கள். எந்தப் பிரச்னையிலும் மூன்றாம் நபர் மத்தியஸ்தத்திற்கு இடம்தர வேண்டாம். பெற்றோர், பெரியோர் வார்த்தைகளுக்கு மதிப்பளியுங்கள். கொடுக்கல் வாங்கலை நேரடி கவனத்தோடு செய்யுங்கள். சிலருக்கு திடீர் அதிர்ஷ்டத்தால் பொருள் சேரும். புதிய முதலீடுகளில் அவசரம் தவிருங்கள். அரசு, அரசியல் சார்ந்தவங்களுக்கு பொறுப்பு அதிகரிக்கும். யாரோ செய்யும் தவறுகளுக்கு நீங்கள் பழி ஏற்க நேரிடலாம். எந்த சமயத்திலும் கவனம் முக்கியம். கலை, படைப்புத் துறையினர், கவனத்தை சிதறவிடாமல் இருப்பதும், நேரடி கவனம் செலுத்துவதும் முக்கியம். மாணவர்கள் பெற்றோர் ஆசிரியர் வழிகாட்டலைக் கேளுங்கள். இரவு நேரப் பயணத்தில் உடன் வருவோர் தரும் உணவு, பானங்களைத் தவிருங்கள். மனஅழுத்தம், ரத்த அழுத்த மாற்றம், நரம்பு உபாதைகள் வரலாம். இஷ்ட தெய்வ வழிபாடு இனிமை சேர்க்கும்.

மகரம்:

மகரராசி நேயர்களே… ஏற்றமும் மாற்றமும் ஏற்படக்கூடிய ஆண்டு. நல்லவை வரும் சமயத்தில் தேவையற்றவற்றை பேசுவதை தவிர்ப்பது சாலச்சிறந்தது. பணியிடத்தில் உங்களின் பலகாலக் கனவுகள் நனவாகத் தொடங்கும். இடமாற்றம், உயர்வுகள் இஷ்டம்போலவே கைகூடும். மேலதிகாரிகளால் பாராட்டப்படுவீர்கள். பழைய கசப்பில் யாருடைய தவறையும் பெரிதுபடுத்த வேண்டாம். செல்லும் நாட்டின் சட்டதிட்டங்களை மதித்து நடங்கள். கொண்டு செல்லும் பணி சார்ந்த கோப்புகள் பத்திரம். குடும்பத்தில் விடியல் வெளிச்சம் பரவும். குழந்தைகளால் பெருமை சேரும். குதூகலம் நிலைக்க, குதர்க்கமும் குத்திக்காட்டலும் அறவே தவிருங்கள். வாழ்க்கைத் துணை உடல்நலம் சீராகும். வாரிசுகள் வாழ்வில் சுபகாரியங்கள் கைகூடி வரும். வீடு, வாகனம் வாங்க புதுப்பிக்க யோகம் உண்டு. விலை உயர்ந்த பொருட்களை பத்திரமாக வையுங்கள். செய்யும் தொழிலில் வளர்ச்சி விகிதம் அதிகரிக்கும். அயல்நாட்டு ஒப்பந்தங்கள் கைகூடி மகிழ்ச்சி தரும். வர்த்தகக் கடன்களில் அலட்சியம் வேண்டாம். அரசியல் சார்ந்தவர்களுக்கு சீரான வளர்ச்சி தொடர்ச்சி ஆகும். அரசுத்துறையினர்க்கு எண்ணங்கள் பூர்த்தியாகும். பொது வெளியில் நாகரிகமாக நடந்துகொள்ளுங்கள். கலைத்துறையினர் எதிர்பார்க்கும் நற்செய்திகள் நிச்சயம் வரும். மாணவர்களுக்கு சீரான நன்மைகள் கிட்டும். வாகனத்தில் வேகக்கட்டுப்பாடு முக்கியம். நரம்பு, ஒற்றைத் தலைவலி, கழுத்து உபாதைகளை உடனே கவனியுங்கள். பெருமாள், தாயார் வழிபாடு பெருமை சேர்க்கும்.

கும்பம்:

கும்பராசி நேயர்களே… பொறுப்பு உணர்வுடன் செயல்பட்டால், பெருமைகள் சேரும் ஆண்டு. அலுவலகத்தில் உரியவர்களால் உங்கள் திறமை உணரப்படும். உரிய சமயத்தில் பதவி, பொறுப்பு உயரும். உடனிருக்கும் யாரிடமும் வீண் விவாதம் வேண்டாம். குடும்பத்தில் நிம்மதி நிலவ ஆரம்பிக்கும். தம்பதியர் பரஸ்பரம் மனம்விட்டுப் பேசுங்கள். உங்கள் உடல்நலத்தில் அக்கறை செலுத்துங்கள். வாரிசுகளிடம் அதீதக் கண்டிப்பு வேண்டாம். ஆடை, ஆபரணம் சேரும். சுபகாரியங்களில் பெரியோர் ஆலோச்னையை கேளுங்கள். அசையும் அசையா சொத்து பத்திரங்கள் பத்திரம். செய்யும் தொழிலில் வளர்ச்சி தொடர்ச்சியாகும். கூட்டுத் தொழிலில் நிதானம் முக்கியம். அரசுத் துறையினர் சீரான நன்மைகளைப் பெறுவீர்கள். அரசியல் சார்ந்தவர்கள் அடக்கமாக இருந்தால் அநேக நன்மை கிட்டும். கலை, படைப்பாளிகள் திறமைக்கு உரிய உயர்வுகளை நிச்சயம் பெறுவீர்கள். மாணவர்கள் எதிர்காலத்துக்கான திட்டமிடலை கவனமாகச் செய்வது நல்லது. வாகனப் பயணத்தில் லாகிரி வஸ்துவுக்கு இடம்தர வேண்டாம். அடிவயிறு, தொண்டை, கழுத்து, முதுகு உபாதைகள் வரலாம். இஷ்ட அம்மன் வழிபாடு ஏற்றம் தரும்.

மீனம்:

மீனராசி நேயர்களே… அமைதியாகச் செயல்படவேண்டிய ஆண்டு. அவசரமும் அலட்சியத்தையும் முற்றிலும் கைவிடுங்கள். அலுவலகத்தில் சுமுகப் போக்கு நிலவும். எதிர்பாரா இடமாற்றம் வந்தால் தவிர்க்காமல் ஏற்பதே நல்லது. சிலருக்கு அயல்நாட்டுப் பயண வாய்ப்பு தடைபடலாம், அது நன்மைக்காகவே இருக்கும்.மேலதிகாரிகள் ஒப்படைக்கும் பணிகளை நேரடியாகவும் நேரம் தவறாமலும் செய்யுங்கள். அனுபவம் மிக்கவர்கள் ஆலோசனையைக் கேளுங்கள். குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கும். சகோதர வழி உறவுகளிடம் வீண் சர்ச்சை வேண்டாம். வீடு, மனை பத்திரங்களை பத்திரமாக வையுங்கள். யாருடைய தவறான வழிகாட்டலுக்கும் தலையாட்ட வேண்டாம். அசையும் அசையா பொருட்களை வாங்குவது, விற்பதில் நிதானமும் கவனமும் தேவை. புதிய நபர்களை வீட்டுக்குள் அனுமதிக்க வேண்டாம். செய்யும் தொழிலில் முயற்சிக்கு ஏற்ப வளர்ச்சி உருவாகும். அயல்நாட்டு வர்த்தகத்தில் தரக்கட்டுப்பாடு முக்கியம். அரசுத்துறையினர் கவனச் சிதறலைத் தவிருங்கள். அரசியல் சார்ந்தவர்கள் நிதானத்தைக் கடைபிடிப்பது நல்லது. கலை, படைப்புத் துறைனருக்கு, பாராட்டுகள் கிடைக்கும். புறம்பேசுவோர் நட்பு வேண்டாம். மாணவர்கள் திறமைக்கு உரிய பெருமைகளைப் பெறுவீர்கள். வாகனப் பழுதை உடனுக்குடன் சீர் செய்யுங்கள். ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை, அல்சர் உபாதைகள் வரலாம். ராகவேந்திரர் வழிபாடு நன்மை தரும்.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

12 ராசி யேர்களுக்கு 2025ம் ஆண்டு எப்படி இருக்கும்…? (பாகம் 1)

விஜய் எழுதிய கடிதத்தை பேனராக வைத்த தவெகவினர்… பின்னர் என்ன நடந்தது?