தமிழ் சினிமாவில் மக்களிடம் அதீத அன்பை பெற்றவர் நடிகர் விஜய். இவருக்கென்று தமிழகம் மட்டும் இன்றி கேரளா, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திராவிலும் ரசிகர் பட்டாளம் உள்ளது. அந்த அளவிற்கு தமிழ் சினிமாவில் புகழ் பெற்றவர். இதுமட்டும் இன்றி சீனா, ஜப்பான், பிரான்சு போன்ற வெளிநாடுகளிலும் ரசிகர்களை கொண்டுள்ளார்.
திரைப்பட இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் மகன் ஆவார். 1974ம் ஆண்டு ஜுன் மாதம் 22ம் ஆண்டு சென்னையில் பிறந்த இவர் தனது 10வது வயதில் வெற்றி என்னும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். தொடர்ந்து 18 வயதில் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி புகழின் உச்சிக்கே சென்றவர். இதுவரை அவர் 62 படங்களில் நடித்துள்ளார்.
புகழ்ச்சியின் உச்சிக்கு சென்ற நடிகர் விஜய், மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதற்காக கடந்த 2009ம் ஆண்டு விஜய் மக்கள் இயக்கம் என்னும் சமூக தொண்டு இயக்கத்தை புதுக்கோட்டையில் தொடங்கினார். அன்று முதல் பள்ளி மாணவர்கள், ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
2011ம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவையும் அவரது கூட்டணி கட்சித் தலைவர்களையும் ஆதரித்து விஜய் மற்றும் அவரது தந்தை சந்திரசேகரும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டனர். விஜய் ரசிகர் நற்பணி மன்ற ரசிகர்களும் பிரசாரத்தில் ஈடுபட்டனர். இத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்றார். அப்போது அவர் விஜய் மற்றும் அவரது ரசிகர் மன்றத்திற்கு நன்றி தெரிவித்தார்.
இதேவேகத்தை நடிகர் விஜய் குறைக்கவில்லை. 2021ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் களம் கண்டார். இதில் 170 தொகுதிகளில் போட்டியிட்ட விஜய் மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களில் 115 தொகுதிகளில் வெற்றி பெற்று சாதனை படைத்தனர்.
இதற்கிடையில் 02.02.2024 அன்று தமிழக வெற்றிக் கழகம் என்னும் பெயரில் புதிய கட்சியை ஆரம்பித்தார். விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்த வெற்றி என்கிற படத்தை மேற்கோள் காட்டி இந்த பெயரை அறிவித்தாரா? அல்லது விஜய் என்றால் வெற்றி என்கிற அர்த்தம் உள்ளதால் தமிழக வெற்றிக் கழகம் என்கிற பெயரை அறிவித்தாரா? தமிழகத்தில் தொடர்ந்து சினிமா படங்களின் மூலம் மக்கள் மனதை சென்றதால் இந்த பெயரை தேர்வு செய்தாரா என்பது அவருக்கே தெரியும்.
ஆனால் தமிழக வெற்றிக் கழகம் என்கிற பெயரில் நடிகர் விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து எந்தவித ஆரவாரமும் இல்லாமல் மக்கள் சேவை செய்து வருகிறார். கடந்த ஆண்டு சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நலத்திட்ட உதவிகள், மருத்துவ முகாம்கள் என ஆங்காங்கே நடத்தினார். கட்சி தொடங்கியதில் இருந்து அரசியல் தலைவர்கள் குறித்து இதுவரை எந்தவித விமர்சனங்களையும் அவர் முன்வைக்கவில்லை. கோரிக்கைகளை மட்டுமே வைத்து வருகிறார்.
ஆனால் நடிகர் விஜய்யின் முழு நோக்கமும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டே இருக்கிறது. இதில் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக அவர் கடுமையாக உழைத்து வருகிறார் என்றே கூறலாம். தனது சினிமா வாழ்க்கைக்கு முழுக்கு போட்டுவிட்டு முழுநேர அரசியல் பணியில் ஈடுபட உள்ளதாக அறிவித்திருக்கிறார்.
இதற்கிடையே கடந்த ஆகஸ்ட் மாதம் 22ம் தேதி தனது கட்சியை நடிகர் விஜய் அறிமுகப்படுத்தினார். இந்த கொடி சிவப்பு, மஞ்சள் ஆகிய இரு நிரங்களை கொண்டுள்ளது. இந்த கொடியில் இரண்டு பக்கங்களும் ஆண் யானை உள்ளது. இரு யானைகளுக்கும் நடுவே சிவப்பு நிற வட்டத்தில் வாகை மலர் மற்றும் 28 நட்சத்திரங்கள் இடம் பெற்றுள்ளன. அந்த நட்சத்திரங்கள் நீலம் மற்றும் பச்சை வண்ணத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து இதுவரை அவர் எந்தவித பிரச்சனையும் சந்திக்கவில்லை. ஆனால் கொடி அறிமுகம் செய்த சில மணி நேரங்களில் தேசிய கட்சியான பகுஜன் சமாஜ் கட்சியிடம் இருந்து பிரச்சனையை சந்தித்தார். நடிகர் விஜயின் கட்சிக் கொடிக்கு பகுஜன் சமாஜ் கட்சி எதிர்ப்பு தெரிவித்தது. அக்கட்சியின் தேர்தல் சின்னமான யானையை விஜய் கொடியில் எப்படி வைக்கலாம் என்பதே அவர்களின் எதிர்ப்புக்கு காரணம்.
அதாவது 2003ம் ஆண்டு தேர்தல் ஆணையம் கொண்டு வந்த திருத்தத்தில் அசாம், சிக்கிம் தவிர வேறு எந்த மாநிலக் கட்சிகளோ, தேசியக் கட்சிகளோ, அங்கீகரிக்கப்படாத கட்சிகளோ யானை சின்னத்தை பயன்படுத்தக்கூடாது என்பதாகும் என்று பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ் மாநில தலைவர் ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
அதே நேரத்தில் கட்சி கொடிக்கு பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளன. அதாவது கொடியில் உள்ள யானைகளின் காதுகள் பெரிதாக இருப்பதாகவும், இவை இந்தியாவை சேர்ந்தவை கிடையாது. ஆப்பிரிகாவை சேர்ந்தவை ஆகும் என்று கூறப்படுகிறது. மேலும் அந்த இரட்டை யானைகள் கேரள அரசின் போக்குவரத்து கழகம், சில தனியார் நிறுவனங்களின் லோகா போன்று உள்ளதாகவும் கூறப்படுகிறது. கொடியில் உள்ள சிவப்பு, மஞ்சள் வண்ணங்கள் ஸ்பெயின் நாட்டி கொடியை போன்று உள்ளதாகவும், மேலும் இந்த வண்ணம் வெள்ளாளர் முன்னேற்ற கழகத்தின் கொடி போன்று உள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
கொடியின் நடுவில் உள்ள இளஞ்சிவப்பு வாகை மலர் போன்ற வடிவம் உண்மையான வாகை மலர் அல்ல என்றும், அது தென் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த தூங்கு மூஞ்சி மரத்தின் பூ என்றும், உண்மையான வாகை மலர் இளம் மஞ்சள் வண்ணத்தில் இருக்கும் என்றும் விமர்சிக்கப்படுகிறது. கொடியில் உள்ள 28 நட்சத்திரங்களும் பல்வேறு கோணத்தில் விமர்சிக்கப்படுகிறது. 28 நட்சத்திரங்களும் இந்தியாவின் 28 மாநிலங்கள் என்று குறிப்பிடப்பட்டு உள்ளதாக கருத்துகள் எழுந்தன. 28 நட்சத்திரங்களில் 23 நட்சத்திரங்கள் பச்சை வண்ணத்தில் இருப்பது வடமாநிலங்களையும், 5 நட்சத்திரங்கள் நீல நிறத்தில் இருப்பது தென் மாநிலங்களையும் குறிப்பிட்டிருப்பதாக கருத்துகள் எழுந்தன. அதே நேரத்தில் கொடிக்கு ஆதரவான கருத்துக்களும் எழுகின்றன.
நடிகர் விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து இப்போது தான் பரபரப்பை சந்திக்கிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது. இனி அவர் தனது கட்சி மற்றும் கொடிகளுக்கு எதிரான கருத்துக்களுக்கு பதில் அளிப்பார். அரசியல் கட்சிகளின் விமர்சனங்களுக்கும் பதில் அளிப்பார் என்று அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டுகளே உள்ளதால் நடிகர் விஜய் கட்சிக்கு அதிக செல்வாக்கு உள்ள நிலையில் கனிசமான தொகுதிகளை கைப்பற்றி வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும், அல்லது எதிர்க்கட்சியாக அமரப்போவதாகவும் ஒரு கருத்து நிலவுகிறது. அதே வேளையில் விஜய்யின் கட்சி வாக்குகளை உடைக்கும் என்றும், பாஜகவிற்கு மறைமுக ஆதரவு அளிக்கக்கூடிய கட்சியாக உருவாக்கப்பட்டிருக்கலாம் என்றும் மற்றொரு கருத்து எழுகிறது.
விஜய்யின் ஆஸ்தான கட்சி பொறுப்பாளரான புஸ்சி ஆனந்த் தற்போது அரசியல் தொடர்பான அறிவிப்புகளை வெளியட்டு வரும் நிலையில், கோட் படம் முடிவடைந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ள நிலையில் விஜய்யே இனி நேரடியாக தேர்தல் களத்தில் இறங்கி விமர்சனங்களுக்கு பதில் அளிப்பார் என்றே கருதப்படுகிறது.
ஏனென்றால் சட்டமன்ற தேர்தல் விஜய்யை முன்வைத்தே தமிழக வெற்றிக் கழகம் கட்சி சந்திக்கிறது. எனவே அவர் முகத்தை காட்டினால் மட்டுமே மக்களின் ஆதரவு கிடைக்கும். ஆகவே தற்போது நடைபெற உள்ள மாநாடு, மேடைப்பேச்சுகள், பொதுக் கூட்டங்கள், உள்ளிட்டவற்றில் அவரது பேச்சுக்கள், அரசியல்வாதியின் பேச்சுக்களை போல் அழுத்தமாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் மேலும் ஒரு சினிமா துறையை சேர்ந்தவரின் கட்சிப் பயணம் வெற்றி பெறப்போகிறதா? அல்லது கமலஹாசன் உள்ளிட்ட சினிமா துறையை சேர்ந்தவர்கள் கட்சியைப்போல் பொய்த்துவிடுமா? என்பதை காலம்தான் கணிக்க முடியும்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings