மக்கள் வாய்ஸ்
தமிழக மக்களுக்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சியை கொடுத்து வருகிறது அரசு. இந்த அதிர்ச்சிகளை அடுத்து ஆளும் திமுக அரசுக்கு மக்களின் நலன்கள் மீது எவ்வித கரிசனையும் இல்லை என்று கடுமையான விமர்சனம் எழுந்து ள்ளது. முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு தாங்கள் ‘மக்களுக்கான அரசு’ என்று தொடர்ந்து கூறி வந்தாலும் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் காரணமாக அது உண்மையிலேயே மக்களுக்கான அரசா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
அவ்வகையில் தமிழக மக்களுக்கு கிடைத்துள்ள மேலும் ஒரு ஷாக் மீண்டும் மின்கட்டண உயர்வு. சுமார் 5% அளவிற்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இது அனைத்து தரப்பு மக்களையும் நேரடியாக பாதிக்கும். இதன் உடனடி தாக்கமாக விலைவாசிகள் உயரும். அதேவேளை அரசின் மீதான அதிருப்தியும் உயரும். தமிழ்நாட்டில் மின் கட்டணம் தொடர்ச்சியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது.
இடுபொருட்கள், உற்பத்திச் செலவினங்கள் அதிகரிக்கும் போது கட்டணமும் அதிகரிக்கும் என்பது பொதுவான பொருளாதார புரிதல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. சில ஆண்டுகளுக்கு முன்னர் கடும் மின்சாரப் பற்றாக்குறையை எதிர்கொண்ட தமிழகத்தில் இன்று பெரும்பாலும் தடையற்ற மின்சாரம் கிடைக்கிறது. ஆனால் தடையற்ற மின்சாரம், உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பு, மின்வாரிய ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் என்று நியாயப்படுத்த பல காரணங்களை அரசு முன்வைக்கும்.
அதற்கான பதில் அரசிடமே உள்ளது. இலவசங்கள் அரசு கஜானாவை காலி செய்கின்றன என்பதை அரசு அறியாதது அல்ல. ஒரு பக்கம் இலவசம், மானியம், உரிமைத் தொகை என்று பல்வேறு பெயர்கள் மற்றும் அளவுகோல்களின் அடிப்படையில் அரசின் ‘மக்கள் நலன்கள்’ முன்னெடுக்கப்படுகின்றன. அப்படி மானியங்கள் அல்லது இலவசங்கள் மூலம் செலவிடப்படும் தொகையை ஈடுகட்டவே அத்தியாவசிய சேவைகள், பொருட்கள் தொடங்கி அனைத்திற்கும் விலைகள் உயர்த்தப்படுகின்றன என்று சமூக ஊடகங்கள், பொருளாதர வல்லுநர்கள், சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் எல்லாம் கூறுவதிலும் வலுவுள்ளது என்பதை மறுக்க முடியாது.
கடந்த மூன்றாண்டுகளில் தமிழ்நாட்டில் மூன்று முறை மின்கட்டண உயர்வுகள் அமலுக்கு வந்துள்ளன. அதே நேரம் திமுக கடந்த சட்டமன்ற தேர்தலின் போது மின்சார மேலான்மை மற்றும் மின்விநியோக கணக்கெடுப்பு குறித்து அளித்த வாக்குறுதிகளை இன்னும் நடைமுறைபடுத்தவில்லை அல்லது நிறைவேற்றவில்லை.
அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான பாலின் விலையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பேருந்ந்து போக்குவரத்து கட்டணங்களும் உயர்ந்துள்ளன. மற்றபடி பத்திரப்பதிவு, முத்திரைத்தாள், அரச சேவைகள், வீட்டு வரிகள், குடிநீர் மற்றும் சொத்துவரி போன்றவைகளும் கணிசமான அளவிற்கு உயர்ந்துள்ளன. ஆனால், மக்களின் வருமானம் அதிகரிக்கவில்லை. இப்படியான தொடர் கட்டண உயர்வு சமூகத்தில் மிகவும் பின் தங்கியுள்ள மக்களை பெரிதும் பாதித்துள்ளது. விளிம்பு நிலையிலிருக்கும் மக்களும் மிகுந்த சிரமங்களுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். இயற்கை பேரிடர்கள் காரணமாக அடித்தட்டு மக்கள் மட்டுமல்லாமல் மத்தியதர மக்களும் கூட பாதிக்கப்பட்டுள்ளனர்.
வரி ஏற்றம், அரச சேவைகளுக்கான கட்டண உயர்வு போன்றவைகள் மூலம் அரசு கூடுதலாக வருவாய் ஈட்டினாலும், ஏன் அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகளின் கட்டணம் அல்லது வலையை கட்டுக்குள் வைக்க முடியவில்லை அல்லது உயர்த்தாமல் இருக்க முடியவில்லை என்பது பெரிய கேள்வி. வருவாய் உயர்வின் மூலம் கல்வி, சுகாதாரம், போக்குவரத்து போன்ற துறைகளில் அரசு கூடுதல் முதலீடு செய்கிறது என்று ஆட்சியாளர்கள் வாதிட்டாலும், தொடர்ச்சியான விலைவாசி உயர்வுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் மக்களை சமாதானப்படுத்தாது.
இதற்கு முக்கிய காரணம், மக்களிடையே வளர்ச்சிகள் ஏற்படும் போது விலைவாசி உயர்வுகள் தவிர்க்க முடியாதது என்ற எண்ணம் வளரவில்லை. மேலை நாடுகளில் அந்த புரிதல் உள்ளது. ஆனால் அங்கேயும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு தேர்தல் காலத்தில் பிரதிபலித்து ஆட்சி பறிபோன கதைகளும் உண்டு. அண்மையில் பிரித்தானியாவில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு விலைவாசி உயர்வுகள் ஒரு முக்கிய காரணியாக இருந்தன.
ஒரு புறம் இலவசம் மறுபுறம் விலைவாசி உயர்வு என்கிற இரட்டைக் குதிரை சவாரி என்பது ஆபத்தானது. ஒரு முறை இலவசங்களை கொடுத்தால் அதை மீளப் பெறுவது இயலாத காரியம். வாக்குவங்கி அரசியலுக்காக தொடர்ச்சியாக ஆட்சியில் இருக்கும் அரசுகள் இலவசங்கள், மானியங்களை அளிக்க வேண்டிய சூழலுக்கு தள்ளப்படுகிறார்கள்.
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வு மேலும் அதிகரிக்காது என்பதற்கு எவ்விதமான உத்தரவாதமும் இல்லை. மக்களுக்கு தொடர்ச்சியாக ஷாக்கை கொடுத்து வரும் அரசுக்கு, தேர்தலில் மக்கள் ஒரு ஷாக்கை கொடுத்தால் என்னாகும் என்பதை அரசு சிந்தித்தால் அது அனைவருக்கும் நலமே பயக்கும்.. அடுத்து என்ன ஷாக்கோ என்ற கவலையில் தமிழக மக்கள் உள்ளனர்.
This post was created with our nice and easy submission form. Create your post!
GIPHY App Key not set. Please check settings