புதுடெல்லி:
டெல்லியில் காற்று மாசு பிரச்சினையைக் கட்டுப்படுத்துவதற்காக, 15 ஆண்டுகள் பழமையான வாகனங்களுக்கு மார்ச் 31-ம் தேதி முதல் பெட்ரோல் வழங்கப்படாது என்று டெல்லி பாஜக அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
தலைநகரில் காற்று மாசுபாட்டைக் குறைப்பது குறித்து டெல்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மஞ்சிந்தர் சிங் சிஸ்ரா இன்று அதிகாரிகளுடன் தீவிர ஆசானை நடத்தினார். பின்பு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், “நகரில் வாகனங்களின் புகை வெளியேற்றத்தைக் குறைப்பதற்காக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க இருக்கிறது. நாங்கள் பெட்ரோல் பங்க்-குகளில் ஒரு கருவியைப் பொருத்த உள்ளோம். அது 15 வருடங்கள் பழமையான வாகனங்களை அடையாளம் காண உதவி செய்யும். அதன்பின்பு அந்த வண்டிகளுக்கு பெட்ரோல் வழங்கப்பட மாட்டாது. மாநில அரசின் இந்த முடிவு குறித்து மத்திய பெட்ரோலிய துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதியை தீவிரமாக அமல்படுத்துவும், விதிகளை மீறும் வாகனங்களை அடையாளம் காணுவும் சிறப்பு அதிரடி பணிக்குழு அமைக்கப்பட உள்ளது. இந்தக் குழு மார்ச் 31-க்கு பின்பு இந்த விதியை தீவிரமாக அமல்படுத்தும். கூடுதலாக, டெல்லிக்குள் நுழையும் கனரக வாகனங்களைத் தீவிரமாகக் கண்காணிக்க உள்ளோம். அவ்வாறான வாகனங்கள் நகருக்குள் நுழைவதற்கு முன்பு அங்கீகரிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தர அளவுகளை பூர்த்தி செய்திருக்க வேண்டும்” என்றார்.