in

கேரள அரசின் நெருக்கடி தமிழகத்திற்கு ஏற்படாமல் இருக்க வேண்டும்

தலையங்கம்

                                                                                ========== சிவா பரமேஸ்வரன் ============

மிக மோசமான நிதி நெருக்கடியில் கேரள அரசு சிக்கியுள்ளது புதிய விஷயம் அல்ல. தொடர்ந்து பல ஆண்டுகளாகவே அம்மாநிலம் இதற்கு தீர்வு காண முடியாமல் திணறுகிறது.
பொருளாதார வல்லுநர்கள் பல மாநிலங்கள் இப்படியான ஒரு சூழலை எதிர்கொள்ளும் அபாயம் அதிகமுள்ளது என்று எச்சரித்துள்ளது தான் இப்போது சிந்திக்க வைத்துள்ளது.
வருவாயை கணக்கில் எடுக்காமல், கட்டுக்கடங்காமல் செலவுகளை செய்ததே கேரளா இப்போது எதிர்கொள்ளும் நெருக்கடிக்கு அடிப்படை காரணம் என்பதே அந்த வல்லுநர்களின் பொதுவான கருத்தாகவுள்ளது. சில முக்கிய அம்சங்களை தொடர்ச்சியாக அவர்கள் சுட்டிக்காட்டி வந்துள்ளனர் அல்லது வருகிறார்கள்.
கேரளாவின் பொருளாதார நெருக்கடியை எளிதில் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் “பாமா விஜயம்” திரைப்படத்தை மீண்டும் ஒரு முறை பார்த்தால் புரியும். “வரவு எட்டணா, செலவு பத்தணா, அதிகம் ரெண்டனா, கடைசியில் துந்தணா” என்பது தான் யதார்த்த நிலை. ஒற்றை வரியில் வீடு தொடங்கி நாடு வரையிலான நிதி மேலாண்மை மற்றும் நெருக்கடியை கூறிவிட்டார் ’கவியரசர்’ கண்ணதாசன்.
இதில் ஆயிரம் அர்த்தங்கள் பொதிந்துள்ளன. ஒரு அரசு தனக்கு வரக்கூடிய வருமானத்தை அறிந்து அதற்கு ஏற்ற வகையில் செலவு செய்ய வேண்டும், இல்லையென்றால், ‘துந்தணா’ தான்.
கேரள அரசு தனது வருமானத்தை மீறி நலத்திட்டங்களை முன்னெடுத்தது. இதில் அரசு ஊழியர்களுக்கான ஊதியம், ஓய்வூதியம் ஆகியவை ஒரு பகுதி என்றாலும், இலவசம் என்றும், மக்கள் நலன் என்ற போர்வையில் ஒரு நல்வாழ்வு அரசு தொடர்ச்சியாக செலவுகளை செய்வது பிரச்சனையின் அடிநாதமாக உள்ளது. ஒரு முறை இலவசம் அல்லது நல்வாழ்வு என்ற வகையில் செலவுகளை செய்ய ஆரம்பித்துவிட்டால் அதிலிருந்து மீள்வது அல்லது திரும்பபெறுவது இயலாத ஒன்று.
இப்படி பிரச்சனைக்கான காரணத்தை அடுக்கிக்கொண்டே போகலாம். இதிலிருந்து தமிழகம் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய உள்ளது என்று பரவலான கருத்து உள்ளது.
தமிழ் நாடு மட்டுமல்ல, பல மாநிலங்கள் இலவசங்கள் என்ற போர்வையில், வாக்கு வங்கி அரசியலுக்காக கோடிக்கணக்கான ரூபாயை அள்ளி வீசுகின்றன. இது நிலைத்திருக்க முடியாத ஒன்றும், நிலையான நிதி நெருக்கடியை ஏற்படுத்தும் என்பதை அனைத்து அரசுகளும் அறிந்துள்ளன. என்றாலும், அது தொடருகிறது. ஏனென்றால், ஒருவர் கொடுத்து, தாம் அதை செய்யவில்லை என்றால், ஒன்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள முடியாது, அல்லது அடுத்து ஆட்சிக்கு வர முடியாது என்கிற நிதர்சனமான உண்மை தான்.
ஒவ்வொரு கட்சியும் ஆட்சிக்கு வருவதற்கு, அல்லது ஆட்சிக்கு வந்த பிறகு நல்வாழ்வு அரசு என்ற வகையில் எப்படி மேலும் மேலும் இலவச திட்டங்களை அறிவிக்கலாம் என்று சிந்தித்து அதை முன்னெடுக்கிறார்கள். இதற்கான நிதி ஆதாரங்கள் எங்கிருந்து வரப்போகின்றன என்று சிறிதும் சிந்திப்பதில்லை. இதெல்லாம் ஏதோ இன்று நாம் கூறும் கருத்தல்ல. இந்திய உச்சநீதிமன்றமே தேர்தல் காலத்தில் அறிவிக்கப்படும் திட்டங்களை முன்னெடுக்க என்ன திட்டங்கள் உள்ளன, செலவினத்தை ஈடுகட்ட வருவாயை எப்படி உயர்த்தப் போகிறது என்பதை தெரிவிக்க வேண்டுமென்றால் கூறியுள்ளது.
ஆனால், கேட்பார் தான் இல்லை. இந்தியா போன்ற ஒரு நாட்டில் கணிசமான அளவிற்கு வறுமைக்கோட்டுக்கு கீழே கோடிக்கணக்கான மக்கள் உள்ளனர். ஆனால் இலவசங்கள் அதற்கு தீர்வாகாது. அந்த மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்தி நிலையான வருவாயை ஈட்டுவதற்கான வழிமுறைகள் முன்னெடுக்கப்படுவதே ஆரோக்கியமான நிதி ஆதாரங்களுக்கு வழி வகுக்கும்.
அது செய்யப்படவில்லை என்றால், தமிழகம் உட்பட பல மாநிலங்களுக்கு இன்று கேரளவாற்கு ஏற்பட்டுள்ள நிலை ஏற்படும் என்ற எச்சரிக்கை மணி அடிக்கப்பட்டுள்ளது.

This post was created with our nice and easy submission form. Create your post!

What do you think?

Written by Admin

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

GIPHY App Key not set. Please check settings

அனைத்திந்திய இந்து திருக்கோயில்கள் பாதுகாப்பு சங்கம் பொதுமக்களுக்கு வழங்கிய விநாயகர் சிலைகள்

மீஞ்சூர் பகுதியில் போதை பொருட்கள் விற்ற 2 பேர் கைது