நாகர்கோவில்:
குமரி மாவட்டம் தக்கலை அடுத்த கொற்றிக்கோடு அருகே மலைக் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 13 வயது மகளுடன், அந்த பகுதியில் உள்ள ஒரு ஜெபக் கூடத்திற்குச் செல்வது வழக்கம். இந்த ஜெபக்கூடத்தைத் தக்கலை செம்பருத்தி விளையைச் சேர்ந்த ஜான்ரோஸ் (63) என்பவர் போதகராக இருந்து நடத்தி வந்தார். பள்ளி விடுமுறை நாளில் சிறுமி அந்த ஜெபக்கூடத்தின் அருகில் உள்ள போதகர் இல்லத்திற்குச் சென்று சிறு சிறு பணிவிடைகளைச் செய்து வந்தார்.கடந்த சில மாதங்களுக்கு முன், இவ்வாறு சென்ற சிறுமியை மத போதகர் மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதில் சிறுமி கர்ப்பமானார். இதையடுத்து போதகர் குடும்பத்தினர் கேரள மாநிலம், கொல்லத்துக்கு அழைத்துச் சென்று சிறுமியின் கருவைக் கலைக்க முயற்சி செய்ததாகக் கூறப்படுகிறது. ஆனால் அங்கிருந்த மருத்துவர்கள் இது தொடர்பாகக் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனர்.இதுபற்றி கொல்லம் போலீசார் சென்று விசாரித்த போது போதகர் குடும்பத்துடன் அங்கிருந்து தலைமறைவானார்.இதையடுத்து சிறுமியை மீட்ட கொல்லம் போலீசார் இது தொடர்பான விசாரணையை அங்கிருந்து குமரி மாவட்ட காவல் நிலையத்திற்கு மாற்றினர். கடந்த 2024ம் ஆண்டு இந்த சம்பவம் தொடர்பாகக் குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அனைத்து மகளிர் காவல் போலீசார் சம்பந்தப்பட்ட போதகர் ஜான்ரோஸ் மீது போக்சோ சட்டத்தின் கீழும், அவரது மனைவி பிரபா (54) மற்றும் மகன் பிரதீப் (28) ஆகியோர் மீது குற்றத்தை மறைக்க உதவியதாகவும் வழக்குப் பதிவு செய்தனர். இவர்கள் கோவை மாவட்டத்தில் பதுங்கியிருந்த நிலையில் தனிப்படை போலீசார் போதகரை குடும்பத்துடன் கைது செய்தனர்.